ஜி ஸ்கொயர் விவகாரம்: ஜூனியர் விகடன் இதழின் இயக்குனர் பெயர் நீக்கம்

போலீஸ்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் விவகாரத்தில், பிரபல வாரமிருமுறை இதழான ஜூனியர் விகடன் இதழின் இயக்குனர்களின் பெயர்கள் இணைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை நீக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயரைச் சேர்ந்த புருஷோத்தம் குமார் என்பவர் சென்னை மயிலாப்பூர் இ - 1 காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் தங்களுடைய நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதற்காகவே ஜூனியர் விகடன் இதழும் அதன் இணையப் பதிப்பும் தங்களைப் பற்றித் தொடர்ச்சியாக அவதூறான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிப்பித்து வருவதாகக் கூறப்பட்டிருந்தது. மேலும், கெவின் என்பவர் மூலம் தங்களிடம் 50 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்தப் புகாரை அடுத்து, மயிலாப்பூர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்த காவல்துறை, கெவின், அடையாளம் தெரியாத ஒரு நபர், ஜூனியர் விகடனோடு தொடர்புடையவர்கள், ஜூனியர் விகடனின் செய்தியாளர், அதன் ஆசிரியர், மாரிதாஸ், 'சவுக்கு' சங்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்தது. கெவின் என்பவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

ஆனால், இந்த வழக்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நகரக் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த வழக்கைக் கண்டித்து பத்திரிகையாளர் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின.

இந்த நிலையில், மே 25ஆம் தேதி நள்ளிரவு சென்னை நகர காவல்துறை ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "வழக்கின் முதல் குற்றவாளி கெவின் கடந்த மே 22ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கெவின் என்பவர் 50 லட்சம் ரூபாய் கேட்டு பிளாக் மெயில் செய்தது விசாரணையில் புலனாகியுள்ளது.

கைது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

அதேபோன்று, அப்பத்திரிகையில் பணிபுரியும் சிலருடன் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இதற்கும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

எனினும், இந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஜூனியர் விகடன் பத்திரிகையின் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அதன்படி இவர்களின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு, தென் சென்னையில் கூடுதல் ஆணையராக இருந்த என். கண்ணன் அந்தப் பொறுப்பிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக வடக்கு மண்டல ஐ.ஜியான பிரேம் ஆனந்த் சின்ஹா அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜி ஸ்கொயர் அளித்த புகாரின் பேரில், பத்திரிகை உரிமையாளர்களிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்தது குறித்து கடந்த சில நாட்களாக பெரும் சலசலப்பு நிலவிவந்த நிலையில், தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

காணொளிக் குறிப்பு, பாலியல் இச்சைக்கு இணங்கினால்தான் தண்ணீர் - நைரோபியில் அவதிப்படும் பெண்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: