ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்தை மிரட்டியதாக ஒருவர் கைது; ஜூனியர் விகடன் மீது வழக்குப் பதிவு. நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
சென்னையில் கட்டுமான நிறுவனம் ஒன்றை மிரட்டியதாக சென்னை நகரக் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில், கெவின் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்தப் புகாரின் கீழ் ஜூனியர் விகடன் இதழ் உட்பட பலர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து செயல்படும் ஜி ஸ்கொயர் என்ற கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக கெவின் என்ற நபரை காவல்துறை கைதுசெய்திருப்பதோடு, ஜூனியர் விகடன் இதழின் உரிமையாளர்கள், யூடியூபர்களான சவுக்கு சங்கர், மாரிதாஸ் மீதும் வழக்கு பதிவுசெய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயரைச் சேர்ந்த புருஷோத்தம் குமார் என்பவர் சென்னை மயிலாப்பூர் இ - 1 காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தங்களுடைய நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதற்காகவே ஜூனியர் விகடன் இதழும் அதன் இணையப் பதிப்பும் தங்களைப் பற்றித் தொடர்ச்சியாக அவதூறான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிப்பித்துவருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கெவின் என்ற நபர் ஜி ஸ்கொயரின் உரிமையாளரான ராமானுஜத்தை ஜனவரி 18ஆம் தேதி இரவு ஒன்பதே கால் மணியளவில் தொலைபேசியில் அழைத்து, ஜூனியர் விகடன் இதழின் உரிமையாளர் பி. ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் சார்பாக பேசுவதாகக் கூறியிருக்கிறார். அப்படிப் பேசும்போது, பத்திரிகையின் உரிமையாளருக்கு தன் மூலமாக 50 லட்ச ரூபாயை வழங்காவிட்டால், வாரமிருமுறை இதழின் அடுத்தடுத்த இதழ்களில் ஜி ஸ்கொயரின் புகழைக் குலைக்கும் விதத்தில் கட்டுரைகள் வெளியாகும் என்று கூறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரில் கூறப்பட்டுள்ளது என்ன?
தன்னுடைய மிரட்டலை உறுதிப்படுத்தும்விதமாக, ஒரு புகைப்படத்தை அனுப்பியதாகவும் அதில் அடுத்த நாள் வெளிவரவிருக்கும் இதழின் படம் இடம்பெற்றிருந்ததாகவும், அதில் ஜி கொயர் நிறுவனம் தொடர்பான அவதூறான கட்டுரை இடம்பெற்றிருந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
"கெவின் காட்டிய ஸ்க்ரீன் ஷாட்டில் இருந்ததைப் போலவே அடுத்த நாள் வெளியான வரமிருமுறை இதழில் கட்டுரை வெளியாகியிருந்தது. ஆகவே, ஜூனியர் விகடனின் உரிமையாளரின் சார்பிலேயே கெவின் எங்களை மிரட்டியிருக்கிறார்" என புகாரில் கூறப்பட்டுள்ளது.
கெவின் மறுபடியும் ராமானுஜத்தை அழைத்து, மாதம் ஐம்பது லட்ச ரூபாய் வழங்காவிட்டால் அடுத்தடுத்து வரும் ஜூனியர் விகடன் இதழ்களில் மேலும் மோசமான கட்டுரைகள் இடம்பெறுவதோடு, சவுக்கு சங்கர், மாரிதாஸ் போன்ற யு டியூபர்கள் மூலமும் குற்றச்சாட்டுகள் பரப்பப்படும் என மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதுபோல கட்டுரைகள் வெளியானதால்தான் கிரீன் ஹவுஸ் பிரமோட்டர் என்ற நிறுவனம் நாசமடைந்து அதன் உரிமையாளர் தற்கொலை செய்ய நேர்ந்தது என கவின் பெருமையடித்துக் கொண்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெவின் மிரட்டினாலும்கூட தாங்கள் பணம் கொடுக்க மறுத்துவிட்டதால், ஜூனியர் விகடன் இதழில் தொடர்ச்சியாக தங்கள் நிறுவனத்தைப் பற்றி மோசமான கட்டுரைகள் வெளியானதாகவும் இதற்குப் பிறகு ஜூனியர் விகடனுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Kevin
இந்த நிலையில் கடந்த மே 9ஆம் தேதியன்று ராமஜெயம் அலுவலகத்தில் இல்லாதபோது, தங்கள் அலுவலகத்திற்குவந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை கெவின் அனுப்பியதாகக் கூறியிருக்கிறார். எதற்காக என்று கேட்டபோது "கெவின் கேட்ட ஐம்பது லட்சம் ரூபாயை மாமூலாக மாதா மாதம் கொடுக்கவில்லை என்றால் உங்களது நிறுவன இயக்குநரைப் பற்றி மேலும் சர்ச்சைக்குரிய பதிவுகளையும் செய்திகளையும் ஜூனியர் விகடன் இதழிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடுவோம் என்று மிரட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மே 15ஆம் தேதி யூடியூபரான மாரிதாஸ் தன்னுடைய பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தங்களுடைய நிறுவனத்தைப் பற்றி மிக மோசமான தகவல்களைக் கூறியிருந்ததாகவும் அந்த வீடியோ கெவினின் மிரட்டலின் தொடர்ச்சியாகவே வெளியிடப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புகாரை அடுத்து, மைலாப்பூர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்த காவல்துறை, கெவின், அடையாளம் தெரியாத ஒரு நபர், ஜூனியர் விகடனோடு தொடர்புடையவர்கள், ஜூனியர் விகடனின் செய்தியாளர், ஆசிரியர், மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளது. இதற்குப் பிறகு உடனடியாக கெவின் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
ஆனால், இந்த வழக்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நகரக் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "புகாரின் உண்மையை முழுமையாக விசாரித்து அறியாமல் வேகவேகமாக ஜூனியர் விகடன் நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது இதன் பின்னணி குறித்து கேள்விகளை எழுப்புகிறது. இந்த பொய்ப் புகாரை வழக்காக பதிவுசெய்து ஊடகங்களை மிரட்டும் போக்கு கண்டனத்துக்கு உரியது. இரவு 9 மணிக்கு புகார் பெறப்பட்டு, இரவு 2 மணிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரவே கைது நடந்துள்ளது. மேலும், புகாரில், 3வது குற்றவாளியாக "பத்திரிகையோடு சம்பந்தப்பட்டவர்கள்" என்பது, ஜூனிய் விகடன் குழுமத்தின் உரிமையாளர் முதல் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஓட்டுனர் வரை அனைவரையும் கைது செய்ய, காவல் துறைக்கு உரிமை வழங்கியுள்ளது.
ஜூனியர் விகடன் பெயரை கூறி ஜி ஸ்கொயர் நிறுவனத்தை யாராவது மிரட்டினால், அந்நிறுவனத்தினர் விகடன் நிறுவனத்தை அணுகி தெளிவு பெற்றிருக்கலாம். ஆனால், காவல் துறையில் ஜி ஸ்கொயர் புகார் அளிப்பதும், இரவோடு இரவாக மின்னல் வேகத்தில் சென்னை மாநகர காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும், ஆளும் கட்சிக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகவே கருத வேண்டியுள்ளது" என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












