'ஆசையுடன் அணிந்திருந்த தங்கச் சங்கிலி' - சடலத்தைத் தோண்டி திருடிய நபர்கள் - கோவையில் என்ன நடந்தது?

மயானத்தில் புதைத்த சடலத்தை தோண்டி நகையை திருடிய 3 பேர்
படக்குறிப்பு, உயிரிழந்த நாகராஜ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கோவையில் மாநகராட்சி மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை, 9 நாட்களுக்குப் பின் தோண்டி எடுத்து, அதில் இருந்த மூன்றே கால் சவரன் நகையை 3 பேர் திருடிச் சென்று உருக்கி விற்று பங்கிட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அவர்களில் ஒருவர், இறந்தவரின் உறவினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்ற இருவரும் தலைமறைவாகி காவல்துறையினரால் தேடப்பட்டு வருகின்றனர்.

தனது தந்தை ஆசையுடன் அணிந்திருந்த நகையை எடுக்க வேண்டாமென்று கருதி, அந்த நகையை அப்படியே புதைத்துவிட்டதாகவும், பால் ஊற்ற வந்தபோது தலைப்பகுதி தோண்டப்பட்டிருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்து விசாரித்தபோது இது தெரியவந்ததாக இறந்தவரின் மகன் பிபிசியிடம் தெரிவித்தார். இடுப்பு அளவு உயரத்தில் புதைக்கப்பட்ட சடலத்தின் தலை இருந்த பகுதியை நள்ளிரவில் வெறும் கையாலேயே தோண்டி அதிலிருந்த நகையை எடுத்திருப்பதாக மயானத்தில் பணிபுரியும் சரவணன் தகவல் பகிர்ந்தார்.

இறக்கும் வரை அணிந்திருந்த மீன் டாலர் சங்கிலி

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலப் பகுதியிலுள்ள செளரிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான மயானம் உள்ளது.

செளரிபாளையம் பகுதியையைச் சேர்ந்த நாகராஜ், கடந்த ஜூன் 6 ஆம் தேதியன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் இதே பகுதியில் நீண்டகாலமாக மீன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். நாகராஜின் உடலை அவரது குடும்பத்தினர் கடந்த ஜூன் 7 ஆம் தேதியன்று செளரிபாளையம் மாநகராட்சி மயானத்தில் புதைத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக மீன் வியாபாரம் செய்து வந்த நாகராஜ், தன்னுடைய கழுத்தில் எப்போதும் மீன் உருவம் பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய ஒரு தங்கச்சங்கிலியை விரும்பி அணிந்ததாக அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர். அவரை அடக்கம் செய்தபோது, அந்த சங்கிலியை எடுத்துவிடுமாறு உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் தன் தந்தை மீதான அன்பு காரணமாக அதை எடுக்காமலே புதைக்குமாறு அவருடைய மகன் வெங்கடேஷ்குமார் கூறியுள்ளார்.

இதுபற்றி பிபிசியிடம் பேசிய இறந்து போன நாகராஜின் உறவினர் மணிகண்டன், ''நாகராஜ் எனக்கு தாய்மாமன். அவரை புதைத்த இடத்தில் தான் அவரின் மனைவியும் புதைக்கப்பட்டுள்ளார். அவர் இறந்தபோதும், அவருடைய கழுத்தில் இருந்த தாலிச்சங்கிலியை எடுக்க வேண்டாமென்று அவர்களின் மகன் வெங்கடேஷ் கூறிவிட்டார்.'' என்றார்.

எவ்வளவோ வற்புறுத்தியும் தன் தந்தை அணிந்திருந்த தங்கச் சங்கிலியை எடுக்க வேண்டாம் என வெங்கடேஷ்குமார் கூறியதாக மணிகண்டன் தெரிவித்தார்.

மயானத்தில் புதைத்த சடலத்தை தோண்டி நகையை திருடிய 3 பேர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

அதன்பின் கடந்த ஜூன் 19 ஆம் தேதியன்று 16வது நாள் காரியத்தை முன்னிட்டு, பால் ஊற்றுவதற்காக நாகராஜின் மகன்கள் ராஜேஷ், வெங்கடேஷ்குமார் மற்றும் உறவினர்கள் மயானத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது நாகராஜ் புதைக்கப்பட்ட இடத்தில் தலைப்பகுதியில் ஒன்றரை அடி ஆழத்துக்குக் குழி இருந்ததைப் பார்த்துள்ளனர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அதன்பின்பு நடந்ததை பிபிசியிடம் விளக்கிய வெங்கடேஷ்குமார், ''எனது தந்தை புதைக்கப்பட்ட இடத்தில் தலைப்பகுதியில் பெரிய குழி இருந்தது. அதைப் பார்த்த எனது உறவினர்கள், அந்த மயானத்தில் எப்போதுமே படுத்துக்கிடக்கும் கார்த்திகேயன் என்பவரை விசாரித்துள்ளனர். அப்போதுதான் அந்த தங்கச்சங்கிலியை அவர்கள் தோண்டி எடுத்து விற்று பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவந்து அதிர்ச்சி அடைந்தோம்.'' என்றார்.

இதன் அடிப்படையில் வெங்கடேஷ்குமார், பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, கடந்த ஜூன் 16 அன்று இரவில் கார்த்திகேயனுடன் சேர்ந்து மணிகண்டன் மற்றும் சக்திவேல் ஆகியோர் சேர்ந்து, நாகராஜின் தலை இருந்த பகுதியில் மட்டும் மண்ணைத் தோண்டி நாகராஜ் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை எடுத்துள்ளனர்.

போலீஸாரின் கூற்றுப்படி, மணிகண்டன் தங்க நகைத் தொழிலில் இருப்பதால் தங்கத்தைச் சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் அமிலத்தை மயானத்துக்கே கொண்டு வந்து அதைச் சுத்தம் செய்து எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின்பு அந்த சங்கிலியையும் டாலரையும் உருக்கி விற்று தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டுள்ளனர். இதில் கார்த்திகேயனுக்கு ரூ.30 ஆயிரம் கொடுத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பிபிசியிடம் விளக்கிய பீளமேடு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருவாசகம், ''அவர்களில் கார்த்திகேயன், மணிகண்டன், சக்திவேல் மூவர் மீதும் மயானத்தில் அத்துமீறி நுழைதல், சடலங்களை சேதப்படுத்தி அவமரியாதை செய்தல், இறந்த நபரின் சொத்துக்களை அபகரிப்பது ஆகிய குற்றங்களை உள்ளடக்கிய பிஎன்எஸ் 301, 315 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.'' என்றார்.

தாக்கிய உறவினர்கள்

சடலத்திலிருந்து தங்கநகையைத் திருடியது தெரிந்ததும், கோபமடைந்த நாகராஜின் உறவினர்கள் சிலர், மணிகண்டனை தாக்கியுள்ளனர். அதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடைய புகாரின் பேரில், நாகராஜின் உறவினர்கள் மணி, ரஞ்சித், கார்த்தி ஆகிய மூவர் மீதும் அநாகரிகமாக பேசி அடித்தது ஆகிய குற்றங்களுக்காக பிஎன்எஸ் 296(b), 115(2) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கைது செய்யப்படவில்லை.

''மணிகண்டன் உடல்நிலை சரியானதும் அவரை கைது செய்வோம். மற்ற இருவரையும் தேடி வருகிறோம். மணிகண்டனைத் தாக்கிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தாலும் அவை பிணையில்லாத பிரிவுகளில்லை என்பதால் கைது செய்யவில்லை.'' என்றார் பீளமேடு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருவாசகம்.

மது போதையில்தான் இந்த செயல்களைச் செய்ததாக கார்த்திகேயன் தங்களிடம் ஒப்புக் கொண்டதாக நாகராஜின் உறவினர்கள் தகவல் பகிர்ந்தனர். இதே கருத்தையே காவல்துறையினரும் தெரிவித்தனர். ஆனால் இதுகுறித்து குற்றவாளிகள் தரப்பு கருத்தைப் பெற முடியவில்லை. அதேநேரத்தில் நள்ளிரவில் சடலத்தைத் தோண்டி எடுத்ததை தங்களாலேயே நம்ப முடியவில்லை என்றார், மயானத்தில் நாகராஜின் உடலை புதைக்கும் பணியில் ஈடுபட்ட சரவணன்.

பிபிசியிடம் பேசிய சரவணன், ''நான் மாநகராட்சி பணியாளர் இல்லை. யாராவது சடலத்தைப் புதைக்கக் கூப்பிட்டால் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்து குழி தோண்டித்தருவோம். நாகராஜின் உடலை ஆறடி நீளம், இடுப்பு அளவு ஆழத்துக்குத் தோண்டி புதைத்திருந்தோம். இதில் தலைப்பகுதியை மட்டும் நள்ளிரவில் கையாலேயே தோண்டி, அவருடைய கழுத்திலிருந்து தங்கச்சங்கிலியை எடுத்துச் சென்றுள்ளனர்.'' என்றார்.

''எனக்கு விபரம் தெரிய இதுவரை இப்படி நடந்ததேயில்லை. இந்த மயானம் இப்போது பயன்பாட்டில் இல்லை என்பதால் இங்கு சுற்றுச்சுவர், விளக்கு, மோட்டார் வசதி எதுவுமேயில்லை. சிசிடிவியும் கிடையாது. இரவில் மயானத்தின் பின்பகுதியில் உடைந்துள்ள சுவர் வழியாக ஏறிக்குதித்து உள்ளே வந்து சடலத்திலிருந்து நகையை எடுத்துச் சென்றுள்ளனர். நாங்கள் 4 பேர் சேர்ந்து மண்வெட்டியால்தான் குழி தோண்டினோம். ஆளுக்கு ஆயிரம் ரூபாய்தான் கூலி கிடைத்தது. புதைத்த பின்பு நாங்கள் அந்தப்பக்கமே போகவில்லை.'' என்றார் சரவணன்.

மயானத்தில் புதைத்த சடலத்தை தோண்டி நகையை திருடிய 3 பேர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

'மதுக்கூடங்களாக மாறிவரும் 'மாநகராட்சியின் பழைய மயானங்கள்

செளரிபாளையம் மாநகராட்சி மயானம் உட்பட கோவை மாநகராட்சியிலுள்ள பெரும்பாலான பழைய மயானங்கள் பராமரிப்பின்றி, மதுக்கூடங்களாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறிவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த இடங்களைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார் செளரிபாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தியாகராஜன்.

குறிப்பிட்ட இந்த மயானம், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலப்பகுதியில் அமைந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தியிடம் பிபிசி பேசியபோது, ''மாநகராட்சியில் மின் மயானங்கள் நிறைய இருப்பதால், பழைய மயானம் எதுவும் இப்போது பயன்பாட்டில் இல்லை. மிகவும் அரிதாக சிலர் மட்டுமே அங்கு சடலங்களைப் புதைக்கின்றனர். அதனால் அந்த மயானங்களைப் பராமரிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. ஆனால் ஆக்கிரமிப்பு இருந்தால் உடனே அகற்றிவிடுவோம்.'' என்றார்.

''அந்த மயானங்களில் புதைப்பதற்கு யாரும் வருவதில்லை என்பதால் இப்போது மாநகராட்சி மயானம் எதிலுமே மாநகராட்சியால் நியமிக்கப்படும் வெட்டியான், பராமரிப்பாளர் யாருமே இல்லை. அதனால்தான் அங்கு சிசிடிவி எதுவும் அமைக்கப்படவில்லை. மாநகராட்சியின் பிற மின் மயானங்கள் அனைத்திலும் சகல வசதிகளும் மக்களுக்குச் செய்து தரப்பட்டுள்ளன. இருப்பினும் அந்த மயானத்தைப் பாதுகாப்பது தொடர்பாக மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார் உதவி ஆணையர்.

சடலத்தைத் தோண்டி நகைகளைத் திருடியவர்களில் சக்திவேல் என்பவர், இறந்து போன நாகராஜின் உறவினர் என்று காவல்துறை வழக்கு ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை மறுத்த நாகராஜின் மகன் வெங்கடேஷ் குமார், ''அது தவறான தகவல். அவர் எங்கள் உறவினரே இல்லை. நாங்கள் மீன்கடை வைத்துள்ள கட்டடத்துக்கு அருகேயுள்ள கட்டடத்தின் உரிமையாளர். இந்த திருட்டில் ஈடுபட்ட 3 பேருமே எங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள். அவர்களும் அடக்கத்தின்போது இருந்தார்கள். எங்களுடன் நன்கு பழகியவர்களே இப்படிச் செய்ததுதான் பெரும் வேதனை.'' என்றார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு