நெல்லை கல்குவாரியில் பாறை சரிவு: ஒருவர் உயிரிழப்பு, மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் சிக்கிய 6 பேரில் மூவர் மீட்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீதமுள்ள மூன்று பேரை மீட்கும் பணிகள் நாளை காலை மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்குவாரியில் சிக்கிய 6 பேரில் முதலில் இரண்டு பேரை மீட்ட நிலையில் மூன்றாவது மீட்கப்பட்ட செல்வம் என்பவர், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்பு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் மூவர் சிக்கியுள்ள பகுதி இருள் சூழந்த பகுதியாக இருப்பதாலும், ஆழமாக இருப்பதாலும், மீட்பு குழுவினர் மீட்புப் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

அந்த பகுதியில் சூழ்ந்துள்ள கூட்டத்தை கட்டுப்படுத்தவும், மேற்கொண்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும் திருநெல்வேலி மாவட்ட காவல் கணிகாணிப்பாளர் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக மீட்கும் பணிக்கு இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் சிக்கிய ஆறு பேரில் இருவர் நேற்றிரவு மீட்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் எஞ்சியுள்ள செல்வகுமார், ராஜேந்திரன், செல்வம், முருகன் ஆகியோரை மீட்பதற்கான நடவடிக்கைகள் இன்று முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டன.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடை மதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் ஒரு கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல் நேற்றிரவு கற்களை ஏற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் திடீரென மிகப்பெரிய பாறை உருண்டு கல் அள்ளும் பணி நடந்த பகுதியில் விழுந்தது.

இதில் இரண்டு லாரிகள், 3 ஹிட்டாச்சி இயந்திர வாகனங்கள் மேலும் ஆழத்துக்குச் சென்றன. லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் ஆகியோர் கற்கள் சரிவுக்குள் சிக்கி உயிருக்குப் போராடினர்.

தகவல் அறிந்து நாங்குநேரி பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து மீட்பு பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனும் நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

சுமார் 300 அடி பள்ளம் என்பதால் மீட்புப் பணியை மேற்கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் நிலவின. இந்த நிலையில், மீட்புப் படையினர் ஹிட்டாச்சி ஆப்பரேட்டர்கள் முருகன், விஜய் ஆகிய இருவரை உயிருடன் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் சம்பவ பகுதியில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், கனரக வாகனங்களை இறக்கி இடிபாடுகளை அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முயன்றுள்ளது. இந்த நிலையில் திடீரென பாறைச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் 300 அடி ஆழத்துக்குள் இறங்க முயன்ற வீரர்கள் மீண்டும் மேலே வந்தனர்.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆய்வாளர் விவேக் ஸ்ரீவாஸ்தவா தலைமையில் 30 பேர் கொண்ட வீரர்கள் குழு சாலை மார்க்கமாக நெல்லைக்கு விரைந்துள்ளனர்.

கல் குவாரி உரிமம் பெற்றவர் கைது

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பில் கல்குவாரி உரிமம் பெற்ற சங்கரலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாகியுள்ள கல்குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜ் மற்றும் அவரது மகனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நெல்லை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு, "நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா தருவை கிராமத்தில் உள்ள தனியார் குவாரியில் நிலச்சரிவு ஏற்பட்டு 6 தொழிலாளர்கள் சிக்கினர். அதில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். 4 பேரை மீட்கும் பணி நடைபெறும் இந்திய கடலோர காவல் படையின் உதவி கோரப்பட்டு ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது," என்றார்.

இதேவேளை பாறை சரிவில் சிக்கியுள்ளவர்களுக்கு திரவ உணவு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த குவாரியை இயக்குவதில் விதிகள் சரியாக பின்பற்றப்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் விஷ்ணு கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: