கிராம சபையில் அதிகாரியை பெண் ஊராட்சி துணை தலைவர்‌ காலணியால் தாக்கியதாக புகார்: சாதிக் கோணமா?

    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கடலூர் மாவட்ட கிராமம் ஒன்றில் மே தின கிராமசபைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, துணை வட்டார வளர்ச்சி அலுவலரை காலணியால் தாக்கியதாக அந்த ஊராட்சியின் துணைத் தலைவர் சரண்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம் கண்டமங்கலம்(தனி) ஊராட்சியில், மே தின கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த ஊராட்சிக்கு சிவகாசி கலியமூர்த்தி ஊராட்சி மன்ற தலைவராகவும், சரண்யா குமார் என்பவர் துணைத்தலைவராகவும் உள்ளனர்.

நேற்று நடைபெற்ற இந்த கிராம சபைக் கூட்டத்தில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குச் சிறப்பு அழைப்பாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கிராம மக்களிடம் ஊராட்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் நூறு நாள் வேலைத்திட்டத்தைப் பற்றிய வரவு செலவு கணக்கு குறித்தும் விவாதித்து கொண்டிருந்தார்.

அப்போது 2021-22ஆம் ஆண்டிற்கான ஊராட்சி வரவு செலவு, பொது நிதி பற்றி பேசிக் கொண்டிருந்தபோது ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரண்யா குமார் திடீரென எழுந்து தான் அணிந்திருந்த காலணியால் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட பரபரப்புக்கு பின்னர் தப்பி செல்ல முயன்ற சரண்யாவை பொது மக்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நேரில் வந்த போலீசார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சரண்யாவை கைது செய்தனர்.

இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு

இந்த விவகாரம் தொடர்பாக காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில், சரண்யா மீது அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்தது, காலணியால் தாக்கியது உட்பட இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் இதுகுறித்து கொடுத்த புகாரில், "இதற்கு முன்னர் ஊராட்சி மன்ற கூட்டத்தின் போது செல்போனில் படம் எடுத்து அதை ராணுவத்தில் உள்ள அவரது கணவருக்கு அனுப்பியுள்ளார். அதனை சமூக வலைத் தளத்திலும் பதிவு செய்தார். அந்த சமயத்தில் இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இப்போது கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பின்புறமாக வந்து என்னை காலணியால் தாக்கியுள்ளார்," என்று தெரிவித்துள்ளார்.

ஊராட்சித் தலைவர் கூறுவது என்ன?

அரசு அலுவலரை காலணியால் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறித்து, ஊராட்சி மன்றத் தலைவர் சிவகாசி கலியமூர்த்தியிடம் விசாரித்தோம்.

அதற்கு அவர், "நாங்கள் பட்டியல் சாதியினர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரண்யா மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். இந்த கிராமத்தை பொறுத்தவரை 90 சதவீதம் மிகப் பிற்படுத்தப்பட்ட சாதியினரே உள்ளனர். 10 சதவீதம் மட்டுமே மற்ற சாதியினர் உள்ளனர். தனி வார்டாக பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சியாக இது உள்ளது. பொறுப்பேற்ற நாளிலிருந்து தற்போது வரை துணைத் தலைவர் சரண்யா பல விஷயங்களிலும் முட்டுக்கட்டையாகவே இருக்கிறார்.

எங்களால் எந்த திட்டங்களும் செயல்களும் நடந்துவிடக் கூடாது. நாங்கள் சும்மா வந்து ஏதும் செய்யாமல் போக வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது செயல்கள் உள்ளன. எதற்கு எடுத்தாலும் சாதி பெயரை குறிப்பிட்டு பேசிவந்தார், சாதி ரீதியாக எங்களை முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார். கிராம மக்கள் ஒற்றுமையைக் கருதி சரண்யா மீது நடவடிக்கை எடுக்காமல், போலீசில் புகார் அளிக்காமல் இருந்தோம்," என்றார்‌ அவர்.

"நேற்று நடந்த கிராமசபைக் கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது துணைக் தலைவர் சரண்யா எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அப்போது கூட்டம் முடியும்‌ முன்னர் செல்லவேண்டாம் காத்திருக்கும் படி செயலர் கூறினார். அப்போது திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் துணைத் தலைவர் சரண்யா அவரது காலணியால், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை பின்புறமாக தொடர்ந்து அடிக்க தொடங்கினார். எதற்காக அவரை தாக்கினார் என்று எங்களுக்கு தெரியவில்லை," எனக் கூறினார் சிவகாசி.

"ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்த போது கணக்கு வழக்குகளை முறையாக காட்டவில்லை என்று சரண்யா துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூறியுள்ளார். உங்களுக்கு கணக்கு வழக்குகளைக் காட்டத் தவறினால் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் காட்டும்படி நீங்கள் வலியுறுத்தலாம் என்று அலுவலர் கூறிய போது அதை துணைத் தலைவர், அனுமதியின்றி வீடியோ பதிவு செய்தார். பஞ்சாயத்து அலுவலகத்தில் நடக்கும் உரையாடலை வீடியோவாக எடுக்கலாமா? இது தவறானது என்று தடுத்து அவரை வெளியேற்றினர்.

அப்போது தன்னை வெளியே அனுப்பியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனை போலீசார் விசாரிக்கும்போது ஊராட்சி அலுவலகத்தில் வெளியே இருந்து உள்ளே செல்லும்போதே வீடியோ பதிவு செய்துகொண்டு சென்றுள்ளார். இதனை அறிந்த போலீசார் அவரிடம் இதுபோன்று செய்யக் கூடாது என்று அறிவுறுத்தினர். மேலும் தன்னிடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே புகாரை திரும்ப பெறுவேன் என்று காவல் துறையிடம் கூறியுள்ளார். நீங்கள் செய்த தவறை அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்று காவல் துறையினர் கூறினர்," என்றார் ஊராட்சி மன்ற தலைவர் சிவகாசி.

இந்தப் பின்னணியில்தான் மேதின கிராம சபைக் கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை சரண்யா தாக்கிய சம்பவம் நடந்துள்ளது என்று மேலும் கூறினார் சிவகாசி.

மேலும் இதுகுறித்து பேசிய சேத்தியாத்தோப்பு துணை காவல் கண்காணிப்பாளார் சுந்தரம், "தவறான புரிதல் காரணமாக துணை வட்டார வளர்ச்சி அலுவலரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரண்யா காலணியால் தாக்கியுள்ளார். அதுதொடர்பாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்," என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அதே ஊரை சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் சுதா குருநாதனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது பேசிய அவர், "வழக்கமான கிராம சபை கூட்டம் போலத்தான் நேற்றும் நடைபெற்றது. ஆனால் கூட்டம் முடியும் தருவாயில் திடீரென தனக்கு வேலை இருக்கிறது என்று கூறி புறப்பட்ட துணைத் தலைவர், பின்பக்கமாக சென்று குனிந்திருந்து அவர் காலணியை மாட்டுகிறார் என்று நினைத்தோம். ஆனால் அவரது காலணியை கழற்றி அரசு அலுவலரை தாக்கத் தொடங்கினார். சற்றும் எதிர்பாராத நேரத்தில் நடந்த அந்த சம்பவம் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது," என்று தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: