You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திமுக vs அதிமுக: 'கொடநாடு கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தி.மு.க.வினர் வாதாடுவது ஏன்?' - எடப்பாடி பழனிசாமி
புதிதாக பதவியேற்றுள்ள தி.மு.க. அரசு எல்லா வகைகளிலும் தோல்வியடைந்துவிட்டதாகவும் கலெக்ஷன் செய்து பாக்கெட்களை நிரப்பி வருவதாகவும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிகே. பழனிசாமியும் புகார் அளித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் இன்று காலையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து தி.மு.க. அரசு குறித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். ஐந்து பக்கங்களைக் கொண்ட அந்தப் புகார்மனுவில் தி.மு.க. அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி கே. பழனிசாமி, தி.மு.க. அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். "Corruption, Collection, Vendetta - இதைத்தான் இன்றைய அரசு செய்து வருகிறது. வசூல் நடத்தியதுதான் இவர்களுடைய 100 நாள்சாதனை. அரசு உயர் அதிகாரிகளில் இருந்து கடைநிலை ஊழியர்கள் வரை பணியிட மாற்றம் செய்ததுதான் அவர்கள் 100 நாள் சாதனை. தி.மு.க. பொறுப்பேற்று 100 நாட்களில் மக்கள் வேதனையும் சோதனையும்தான் அடைந்திருக்கிறார்கள். அ.தி.மு.க. அரசில் போடப்பட்ட பல்வேறு பணிகள் அப்படியே கிடப்பில்போடப்பட்டிருக்கின்றன. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எல்லா பணிகளும் முடங்கியிருக்கின்றன" என்றார் எடப்பாடி கே. பழனிசாமி.
கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் தமிழ்நாட்டில் முடக்கப்பட்டிருப்பதாகவும்ஆளுங்கட்சியினர் அந்தப் பணிகளைத் தாங்கள்தான் செய்ய வேண்டுமென்பதற்காக முடக்கி வைத்திருப்பதாகவும் பழனிசாமி தெரிவித்தார்.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 13 பேர் மீதான வழக்குகள் அவசர அவசரமாக முடிக்கப்படுவதாகவும் இந்த விவகாரத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப் பதிவுசெய்து, சோதனை செய்து கெட்ட பெயர் ஏற்படுத்தி வருவதாகவும்எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
கொடநாடு விவகாரம்
கொடநாடு விவகாரத்தில் சயனுடைய கூட்டாளிகள்தான் கொள்ளையடித்து, காவலாளியை கொலை செய்துள்ளனர் என்றும் இந்த வழக்கில் விசாரணை முடிவடையும் தருணத்தில் இதனைத் தி.மு.க. மீண்டும் விசாரிப்பது ஏன் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவேண்டுமெனடிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மூன்று மாதத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்துக் கூறிய பழனிசாமி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் அனைவரும் கேரளாவிலும் பல்வேறு விவகாரங்களுக்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்றும் இவர்களுக்காக தி.மு.க.வினர் ஏன் வாதாடுகிறார்கள் என்றும் பழனிசாமி கேள்வியெழுப்பினார்.
இந்தக் குற்றவாளிகளில் ஒருவருக்குதி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரான என்.ஆர். இளங்கோ வாதாடுவதாகவும் இவர்களுக்காக அமர்வு நீதிமன்றத்தில் தி.மு.கவினர் வாதாடுவதாகவும்ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, குற்றவாளிகளுக்கு சாதகமாக இந்த அரசு செயல்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேலும், "சயனுக்கு சம்மன் அனுப்பி ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. அதில் என்னை இணைத்ததாக சொல்கிறார்கள். அது உண்மையா எனத் தெரியவில்லை. இதற்காக நீதிமன்றத்தில் அனுமதியேபெறவில்லை. அரசின் தலையீடு காரணமாக சயனை அழைத்து மீண்டும் விசாரணை மேற்கொண்டிருக்கிரார்கள். 313 சிஆர்பிசி பிரிவின் கீழ் குற்றவாளியிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அப்படி இருக்கும்போது வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிறார்கள். உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்கிறார்கள். அப்படியானால், இப்போது என்ன பொய்யானகுற்றவாளிகளையாக பிடித்திருக்கிறார்கள்? இந்த வழக்கை திசைதிருப்பவே பார்க்கிறார்கள். வெள்ளை அறிக்கை வெளியிட்டார்கள். அது எடுபடவில்லை. தேர்தல் பிரசாரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்றார்கள். அது குறித்து சட்டமன்றத்தில் கேள்விகேட்டேன். அதற்காகத்தான் இப்படிச்செய்கிறார்கள்" என்றார் எடப்பாடி கே. பழனிசாமி.
"எப்போது பார்த்தாலும் பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசுகிறார் மு.க. ஸ்டாலின். ஆனால் தி.மு.க. அரசு சோதனை என்ற பெயரில் நமது அம்மா அலுவலகத்தில் சோதனை மேற்கொள்கிறது. ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தார்கள். மேலும், அ.தி.மு.க. அரசு இருந்தபோது சமூக வலைதளங்களில்பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டன. அதைவைத்து இப்போது வழக்குத் தொடர்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது" என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் தமிழ்நாட்டில் கொரோனாவைக் கட்டுப்படுத்த தற்போதைய அரசு எதையுமே செய்யவில்லையெனக் குற்றம்சாட்டினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்