You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒன்றிய அரசு: இப்படித்தான் பேசவேண்டும் என அரசுக்கு உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்றம்
இந்திய அரசைக் குறிக்க எந்த சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கோ, அமைச்சர்களுக்கோ உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து விட்டது.
இந்திய அரசை மத்திய அரசு என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக தமிழ்நாடு முதல்வர், அமைச்சர்கள் ஒன்றிய அரசு என்ற சொற்றொடரை பயன்படுத்துகின்றனர். இதற்கு பாஜக சார்புடைய தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டமே மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் இந்தியாவைக் குறிப்பிடுவதாக அந்த சொற்றொடரை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள்.
இந்த தொடரைப் பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைத்துள்ளது.புதிய திமுக அரசாங்கம் பொறுப்பேற்ற பின்பு இந்திய அரசை "ஒன்றிய அரசு" என்று கூறிவருகிறது மேலும் இவ்வாறு அழைப்பதை அது ஊக்குவிக்கிறது. ஒன்றியம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது தவறானது. இந்திய தேசிய இறையாண்மைக்கு எதிரானது. இதுபோன்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு பின்புலத்தில் ஏதோ தீவிரவாத சக்தி இருப்பதாக சந்தேகம் எழுகிறது.
மேலும் கடந்த வாரம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தின்போது ஒன்றியம் குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளித்த முதலமைச்சர் இந்திய அரசு ஆங்கிலத்தில் 'யூனியன் கவர்ன்மெண்ட்' என்று அழைக்கப்படுவதால் அதை நாங்கள் ஒன்றிய அரசு என்று கூறுகிறோம். இது ஒன்றும் சமூக விரோத குற்றமல்ல என்று விளக்கம் அளித்துள்ளார். இது முற்றிலும் இந்திய இறையாண்மைக்கு எதிரானது. சட்டமன்றத்தை இந்த அரசு தவறாக வழிநடத்தி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.இதேபோல் சட்டமன்றத்தில் தமிழக ஆளுநர் உரையின் இறுதியில் ஜெய்ஹிந்த் என்ற சொல் இடம் பெறவில்லை. இது குறித்த உரையாடலில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இறையாண்மைக்கு எதிரான கருத்தைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளரிடம் மனு அளித்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே தமிழ்நாடு அரசு "ஒன்றியம்" என்ற சொல்லை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். இந்திய அரசை இந்தியா அல்லது பாரதம் என்றே குறிப்பிட வேண்டும் என உத்தரவிடவேண்டும்," என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் 'இந்திய அரசை இந்தியா அல்லது பாரத் என்று அழைக்கவேண்டும். ஒன்றியம் என்று அழைக்கக் கூடாது' என வாதிட்டார்..இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் "கொரோனா தடுப்பூசி போடுங்கள் என நீதிமன்றமும், அரசும் பொது மக்களை வலியுறுத்துகின்றன. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்வது அல்லது போடாமல் இருப்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை..அதைப்போல நீதிமன்றம் இந்தியாவை இந்திய அரசு அல்லது பாரத் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு முதல் அமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ உத்தரவிட முடியாது. சட்டமன்றத்தில் இது தான் போச வேண்டும் என நீதிமன்றம் கூற முடியாது என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்