தலைமை நீதிபதி ரமணா: ஆட்சியை மாற்றும் உரிமை மட்டுமே கொடுங்கோன்மையை தடுத்துவிடாது

பிரசுரிக்கப்பட்டது

சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் ஆட்சியாளர்களை மாற்றும் உரிமை மட்டுமே கொடுங்கோல் ஆட்சி ஏற்படாமல் தடுப்பதற்கான உத்தரவாதமாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை இணைய வழியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பி.டி.தேசாய் நினைவு சொற்பொழிவு ஆற்றிய ரமணா, இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

இந்த உரையை பட ஊடகங்கள் செய்தியாக்கியுள்ளன. தி ஹிந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியில், "பெருந்தொற்றுக் காலத்தில் சாமானியர்களின் உயிர்களைக் காப்பாற்ற சட்டத்தின் ஆட்சி எந்த அளவுக்கு உதவியது என்பது குறித்து நின்று நிதானித்து யோசிக்கவேண்டிய நேரம் இது" என்று ரமணா குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இது குறித்து மதிப்பாய்வு செய்வதற்கு நான் விரும்பவில்லை. என்னுடைய பதவியும், உள்ளப்பாங்கும் இப்படி மதிப்பாய்வு செய்வதைத் தடுக்கின்றன. ஆனால், அடுத்தடுத்த பத்தாண்டுகளில் வரப்போகிற மிகப் பெரிய சிக்கல்களுக்கான முன்னோட்டம்தான் இந்த பெருந்தொற்று என்று நான் உணரத் தொடங்கியுள்ளேன். நாம் செய்தவற்றில் எவை சரி, பிழையாகப் போனவை என்ன என்று ஆராயும் வேலையையாவது நிச்சயம் தொடங்கவேண்டும்," என்று தெரிவித்தார் தலைமை நீதிபதி ரமணா.

"இதுவரை நடந்துள்ள 17 (இந்தியப்) பொதுத் தேர்தல்களில் ஆளும் கட்சியையோ, ஆளும் கட்சிகளின் தொகுப்பையோ, 8 முறை மாற்றியுள்ளார்கள். நடந்த பொதுத் தேர்தல்களின் எண்ணிக்கையில் இது கிட்டத்தட்ட 50 சதவீதம். பெருமளவு ஏற்றத்தாழ்வுகள், எழுத்தறிவின்மை, பின்தங்கிய நிலை, ஏழ்மை, இருப்பதாக சொல்லப்படும் அறியாமை ஆகியவற்றுக்கு மத்தியிலும் சுதந்திர இந்தியாவின் மக்கள் தாங்கள் புத்திசாலிகள் என்றும், கடமையை ஆற்றும் வல்லமை உள்ளவர்கள் என்றும் நிரூபித்துள்ளனர். மக்கள் தங்கள் கடமையை குறிப்பிடத்தக்க அளவு நன்றாகவே தங்கள் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

இப்போது அரசு அமைப்பின் முக்கிய உறுப்புகளைக் கையாளும் மனிதர்கள் அரசமைப்புச் சட்டம் தந்த உரிமைகளை அதன் நோக்கங்களுக்கு ஏற்ப செயல்படுத்தியுள்ளார்களா என்று சிந்திக்கவேண்டிய முறை இப்போது வந்துள்ளது" என்று குறிப்பிட்டார் தலைமை நீதிபதி ரமணா.

காலனியாதிக்க காலத்தில் சட்டம் என்பது அரசியல் ஒடுக்குமுறைக்கான கருவியாகப் பயன்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்ட அவர்,

"இறையாண்மை பெற்ற ஒரு அரசால் முன்னெடுக்கப்படும் எந்த ஒரு சட்டமும் சில நீதிமுறை சார்ந்த லட்சியங்களால் அல்லது கோட்பாடுகளால் உறுதி செய்யப்படவேண்டும்," என்று தலைமை நீதிபதி பேசியதாக குறிப்பிட்டுள்ளது தி ஹிந்து.

சமூக ஊடக டிரெண்ட்கள் நிறுவனங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து உரையாடலைத் தொடங்குவது தவிர்க்க முடியாதது என்றும் கூறினார் ரமணா.

சமூக ஊடகத்தில் சத்தமாக ஒலிக்கும் கூச்சல்கள் எது சரி என்பதையோ, பெரும்பான்மை மக்கள் எதை நம்புகிறார்கள் என்பதையோ பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.

"நவீன ஊடகக் கருவிகளுக்கு சத்தத்தை அதிகரிக்கச் செய்யும் திறன் ஏராளமாக இருக்கிறது. ஆனால், அவற்றுக்கு சரியானதையும், தவறானதையும், நல்லதையும், கெட்டதையும், உண்மையையும், போலியையும் பிரித்தறியும் திறன் இல்லை,"என்றும் குறிப்பிட்டார் தலைமை நீதிபதி.

அரசாங்கத்தின் அதிகாரம், நடவடிக்கைகள் மீது கட்டுப்பாட்டை பிரயோகிக்க நீதித்துறைக்கு முழுமையான சுதந்திரம் தேவை என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

"நீதித்துறையை சட்டமியற்றும் அவையோ, நிர்வாக இயந்திரமோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்த முடியாது. இல்லாவிட்டால் சட்டத்தின் ஆட்சி என்பது கற்பனையாகிவிடும்," என்றும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :