You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரெம்டெசிவிர் மருந்தை தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு
ரெம்டெசிவிர் மருந்தைப் பெற அரசு மருத்துவமனைகளில் பெரும் கூட்டம் நிற்பதால், நேரடியாக தனியார் மருத்துவமனைகளுக்கே அந்த மருந்தை அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவுசெய்திருக்கிறது.
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கு தமிழ்நாட்டில் பெரும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. அந்த மருந்தால் பெரிய பலனில்லை என தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறைத் தெரிவித்தாலும் அந்த மருந்தைப் பெறுவதற்காக நோயாளிகளின் உறவினர்கள் அலைமோதுகின்றனர்.
இந்த மருந்தைப் பெறுவதற்காக சென்னையில் நேற்று பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் திரண்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இம்மாதிரி மருந்தைப் பெற கூடுபவர்களால்கூட கொரோனா பரவும் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்த மருந்தின் விநியோகம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு பிறகு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், இந்த ரெம்டெசிவிர் மருந்து ஆக்சிஜன் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே சிறிது பலன் தருவதாகவும் மற்ற நோயாளிகளுக்கு இதனால் பெரிய பலன் இல்லையென்றும் உலக சுதார அமைப்பு கூறியிருந்தது அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மேலும், இந்த மருந்தை மாநில அரசு சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி என ஆறு மாவட்டங்களில் விற்கும் நிலையில், இதைப் பெறுவதற்கான கூட்டம் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதனால், தற்போதுள்ள முறையை மாற்றி தனியார் மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே இந்த மருந்தை வழங்கிட மாநில அரசு முடிவுசெய்துள்ளது. நோயாளிகளின் உறவினர்களிடம் இந்தச் சீட்டை அளித்து, அவர்களை மருந்து வாங்கிவரச் சொல்லக்கூடாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை முதல் தனியார் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பெற்றுவரும் நோயாளிகளின் விவரங்களோடு மருந்துத் தேவையை இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கைகள் பரிசீலித்து முடிவெடுக்கப்பட்டபின் மருத்துவமனையின் பிரதிநிதிகள் தகுந்த இடத்தில் சென்று அந்த மருந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.
இம்மாதிரி பெறப்படும் மருந்துகள் தகுந்த நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதையும் கள்ளச்சந்தையில் விற்காமல் இருப்பதையும் கூடுதல் விலைக்கு நோயாளிகளுக்குக் கொடுக்கப்படாமல் இருப்பதையும் மருத்துவமனைகள் உறுதிசெய்ய வேண்டுமென்றும் அரசு தெரிவித்துள்ளது. இதனை மீறிச் செயல்படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென அரசு எச்சரித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்