சொத்து குவிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 4 ஆண்டுகள் சிறை

நீதித்துறை

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

(இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றின் சுருக்கத்தை இங்கே வழங்குகிறோம்.)

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் அவரது சொத்துக்களை முடக்கவும் உத்தரவிடப்பட்டது.

1991 முதல் 1996ஆம்‌ ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற அதிமுக தலைமையிலான அரசில், சின்ன சேலம் சட்டமன்ற தொகுதி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக பரமசிவம் இருந்தார். இவர் தனது பதவிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது எழுந்த புகாரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த 1998ஆம் ஆண்டில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பரமசிவம், அவரது மனைவி பூங்கொடி‌ மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை சென்னை சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. பின்னர் இந்த வழக்கு, விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த நான்கு வாரங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில், இதன் தீர்ப்பு இன்று (திங்கட்கிழமை) அளிக்கப்பட்டது. அதில் பரமசிவம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 22 லட்சத்துக்கு (தற்போது மதிப்பு 28.79 லட்சம்) தனது மனைவி பூங்கொடி, மகன் மயில்வாகனன் பாபு, கோவிந்தன் பெயரில் சொத்துக்கள் வாக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து, விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி இளவழகன், குற்றம்சாட்டப்பட்ட பரமசிவத்தின் மனைவி பூங்கொடி உயிருடன் இல்லாத காரணத்தால், பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 33 லட்சத்து 4 ஆயிரத்து 160 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ‌மேலும் மனைவி பூங்கொடி, மகன்கள் இருவர் பெயரில் உள்ள சொத்துக்களை அரசுடைமையாக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். குறிப்பாக அபராத தொகையைக் கட்ட தவறினால்‌, கூடுதலாக ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.

Banner

பொள்ளாச்சி ஜெயராமன், மகன் மீது வழக்கு பதிவு

பொள்ளாச்சி ஜெயராமன்

பட மூலாதாரம், TWITTER

பொள்ளாச்சியில் திமுகவினர் தேர்தல் பிரசாரம் செய்தபோது தகராறு செய்ததாக தமிழக அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் உட்பட அதிமுகவினர் 8 பேர் மீது வடக்கிப்பாளையம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் பார்த்தசாரதி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இவர் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோடு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் தன் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்த முதல் தகவல் அறிக்கையில், 'திமுகவினர் பிரசாரம் செய்து வந்த போது அங்கிருந்த அதிமுகவினர் 'திமுக ஒழிக, திமுக ஒழிக' என கோஷம் எழுப்பினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அங்கிருந்த பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் மற்றும் அவரோடு இருந்த அதிமுகவினர் ஆபாசமாக திட்டியதோடு, 'சர்ச்சைக்குரிய வகையிலும் பேசி தன்னை கொல்ல முயற்ச்சித்தார்' என பார்த்தசாரதி புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் வடக்கிபாளையம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Banner

அவதூறு பேச்சு: டி.டி.வி. தினகரன் மீது வழக்குப்பதிவு

தினகரன்

தமிழக முதல்வர், துணை முதல்வரை தேர்தல் பிரசாரத்தின் போது இழிவாக பேசியதாக அமமுக பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் மீது விழுப்புரம் காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி அமமுக சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கம்பெனி, காந்தி நோட்டை நம்பியே தேர்தலில் நிற்கின்றனர். இங்குள்ள அமைச்சர் 200 கோடி ரூபாயை பதுக்கி வைத்து வாக்குக்கு பணம் கொடுக்க உள்ளார் என்று பேசினார். மேலும் தமிழக துணை முதல்வரை பன்னீர்செல்வத்தை விமர்சித்து பிரசாரத்தில் பேசியதாக டி.டி.வி. தினகரன் மீது புகார் எழுப்பினர். தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், சட்டத்துறை அமைச்சரை இழிவாக பேசியதாக கூறி டிடிவி.தினகரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த பாபு முருகவேல் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், டி.டி.வி. தினகரன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: