கோவிட் தடுப்பூசி: அரசின் விதிகளால் தவிக்கும் இந்திய இளம் நோயாளிகள்

    • எழுதியவர், விகாஸ் பாண்டே
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, தனக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளது என்று ஷிக்கா கோயலுக்கு தெரிய வந்தபோது, அவரின் வாழ்க்கை அப்படியே முடங்கிப் போனது.

டெல்லியில் ஒரு ஃபேஷன் நிறுவனத்தின் உரிமையாளராக உள்ள அவர், புற்று நோயின் காரணமாக, தன் வாழ்க்கையில் உள்ள அனைத்தையுமே மாற்றி அமைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார். வேலை, நண்பர்கள், வருங்கால திட்டம் என அனைத்துமே பின்னுக்குத்தள்ளப்பட்டன.

ஆரம்பத்தில் இது அதிர்ச்சியைக் கொடுத்தாலும், தன்னை நிதானப்படுத்திக் கொண்ட அவர், குடும்பம் மற்றும் நண்பர்களின் துணையோடு புற்றுநோயை சமாளிக்க தயாரானார்,

இளம் பெண்கள், தங்களுக்கும் மார்பகப்புற்றுநோய் உள்ளதா என்பதை தொடர்ந்து சோதித்து வரவேண்டும் என்பது குறித்து சமூக வலைதளத்தில் ஒரு பரப்புரையை உருவாக்கினார். அதைத்தொடர்ந்து, அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, பின்பு, பல சுற்றுகளாக கீமோ தெரபி கொடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் அவர் பலமுறை மருத்துவமனைகளுக்கு சென்று வந்தார். அப்போது எல்லாமே நன்றாகவே போய்க்கொண்டு இருந்தன. பின், டெல்லி மற்றும் பல இந்திய மாநிலங்களில் கோவிட் தொற்று அதிகரிக்க ஆரம்பித்தது.

உடனடியாக கோவிட் 19 மற்றும் புற்றுநோய் குறித்த தரவுகளை இணைதளத்தில் தேட ஆரம்பித்தார். கோவிட் பரவலில் பெரிய பாதிப்பை உருவாக்கும் மக்களின் பட்டியலில் தானும் இருப்பதை அறிந்துகொண்ட அவர், தன்னை கோவிட் தாக்கினால், அதன் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதையும் புரிந்து கொண்டார்.

இரண்டு நோய்களையும் சேர்ந்து பெற்றால் உள்ள மோசமான விளைவுகள், அவரை பயமுறுத்தினாலும், இவை மருத்துவமனைகளுக்கு செல்லும்போது, அவரை இரட்டிப்பு கவனத்துடன் இருக்க வைத்தன.

கோவிட் தடுப்பு மருந்தே தனக்கான பாதுகாப்பான வழி என்று கூறும் அவர், தடுப்பு மருந்துக்கு தகுதி பெறுவோரின் பட்டியலில் இல்லாததால், தன்னால் மருந்து எடுத்துக்கொள்ள முடியாது என்கிறார்.

இது இவரின் சூழல் மட்டுமல்ல. இந்தியாவில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, கோவிட் தடுப்பு மருந்துக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இளம் இந்தியர்களின் நிலை இதுதான்.

உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் உள்ள இளைஞர்களாக இருந்தாலும், 45 வயதுக்குட்பட்டோருக்கு இந்திய அரசு இன்னும் கோவிட் தடுப்பு மருந்து அளிக்கவில்லை. இந்த நகர்வு, இத்தகைய இளம் இந்தியர்களை மேலும், கோவிட் பாதிக்கும் வாய்ப்பை அதிகமாக்குகிறது. தனக்கான கோவிட் தடுப்பு மருந்திற்காக பல மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு பேசியபோதும், அது கிடைக்காமல் போனதால் மனமுடைந்துள்ளார் ஷிக்கா.

“நான் மிக திறமையாக செயல்பட்டு புற்றுநோயை தோற்கடித்தேன். அதோடு போராடி வந்த எனக்கு, கோவிட் தொற்று ஏற்படுவதாற்கான ஆபத்து உள்ளது என்ற விஷயம் தூங்க விடாமல் செய்தது.” என்கிறார் அவர்.

இவருக்கு இன்னும் பல சுற்றுகள் கீமோ தெரபி செய்யவேண்டியுள்ளது. அவற்றை மருத்துவமனையில்தான் செய்ய முடியும். ஆனால், அங்கு கோவிட் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பது ஒரு முக்கிய விஷயம்.

அவரைப்போன்ற புற்றுநோயாளிகளுக்கு பாதிப்பிற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இந்தத் தாக்கம் அவர்களை கோவிட் நோய்க்கு எதிராக பலவீனமானவர்களாக்குகிறது.

கோவிட் தடுப்பு மருந்துகள் கொடுக்கும் திட்டத்தில், புற்றுநோயாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று யுரோப்பியன் சொசைட்டி ஆஃப் மெடிக்கல் ஆங்காலஜி உலக நாடுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

குறிப்பிட்ட சில புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பு மருந்து அளிப்பதில் முன்னுரிமை அளிக்குமாறு நேச்சர் பத்திரிகையில் வெளியான ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

பிரிட்டன் போன்ற நாடுகளில், குறிப்பிட்ட சில புற்றுநோய் வகைகள் போன்று, கோவிட் பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகமுள்ள மக்களுக்கு தடுப்பு மருந்து அளிப்பதில் முன்னுரிமை வழங்கியுள்ளன. அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையமும், பிற உயிர்கொல்லி நோய்களால் பாதிகப்பட்டுள்ள 16 முதல் 64 வயதுள்ள மக்களுக்கு கோவிட் தடுப்பு மருந்தில் முன்னுரிமை அளிக்க பரிந்துரை செய்துள்ளது.

நூற்றூக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ள இந்தியாவின் முன்னணி மருந்துவரான கணேஷ் பட், இளம் புற்றுநோயாளிகளுக்கு, அரசு தடுப்பு மருந்து அளிக்காமல் இருப்பது கவலையளிப்பதாக தெரிவிக்கிறார்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள புற்றுநோயாளிகள், கோவிட் பாதிப்பதற்கான அதிகபட்ச ஆபத்துடன் இருப்பார்கள் என்றும், அவர்களுக்கு, புற்றுநோயிலிருந்து குணமடைவதில் தாமதம் ஏற்படலாம் அல்லது உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சதவிகிதமும் அதிகமாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

“அதனால்தான், அவர்களின் உடல்நலனை காப்பது முக்கியமான விஷயமாகிறது. அதன்மூலம், அவர்களின் சிகிச்சை தடையின்றி தொடரும்.” என்கிறார்.

ஆனால், அனைத்து புற்று நோயாளிகளுக்கும், கோவிட் தடுப்பு மருந்து அளிக்கலாம் என்று ஒட்டுமொத்தமாக அனுமதி அளிப்பது சரியான ஒன்றல்ல என்று சில கூறுகின்றனர்.

அக்யூட் லுக்கிமியா மற்றும் ஸ்டெம் செல் மாற்று பெறும் நோயாளிகள் தடுப்பு மருந்து போட்டுக்கொள்வதற்கு முன்பு, தங்களின் மருந்துவர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று மருத்துவர் கணேஷ் பட் கூறுகிறார்.

ஆனால், தற்போது இந்த முடிவை எடுக்கும் இடத்தில் மருத்துவர்கள் இல்லை. மருத்துவ ரீதியான சோதனைகளுக்குப் பின், கோவிட் தடுப்பு மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் வாய்ப்பு, புற்றுநோய் மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்கிறார் மருத்துவர் பட்.

”மிகவும் கவலை அளிக்கிறது என்பதால், முடிந்த வரையில் விரைவாக” தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளுமாறு தனது மருத்துவர் பரிந்துரைத்ததாக கூறுகிறார் ஷிக்கா.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதே, “உளவியல் ரீதியாக கற்பனை செய்துபார்க்க முடியாத அளவிற்கு அழுத்தத்தை உருவாக்கும் நிலையில், கோவிட் தடுப்பு மருந்திற்கான தேடல் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகிறது என்கிறார் அவர்.

“தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது, அந்த கவலையை இன்னும் ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. எங்களையும் இன்னும் மேம்பட்ட நிலையில் கவனித்துக்கொள்ள வேண்டும்.” என்கிறார்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை 45 முதல் 59 வயதிற்குட்பட்டோருக்கான கோவிட் தடுப்பு மருந்து திட்டத்தை அரசு தொடங்கியது. ஆனால், நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள 45 வயதிற்குட்பட்டோர் குறித்து எதுவுமே கூறவில்லை.

தற்போதுள்ள தடுப்பு மருந்து முறை முடிவுக்கு வந்த பிறகு, மேற்கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மருந்துவமனைகளுக்கு வருவதன்மூலம், கோவிட் பாதிக்கக்கூடும் என்பது உண்மை நிலை ஆகியுள்ள சூழலில், புற்றுநோயாளிகள், கோவிட் பாதிப்பதற்கான் வாய்ப்புகள் அதிகமுள்ள நிலையில் இருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொற்றுநோய் வல்லுநரான மருத்துவர் ஓம் ஸிரிவட்சவா, தொடர்ந்து கீமோதெரபி பெறுவதற்காக, உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் போராடும் பல நோயாளிகள் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்கிறார்.

”மருத்துவமனையில் அவர்களுக்கு கோவிட் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது. அவர்களுக்கு உடனடியாக தடுப்பு மருந்து அளிக்கப்பட வேண்டும்.” என்கிறார்.

ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களை கொண்டுள்ள நோயாளிகளுக்கு அரசு ஏன் முதல் முறையிலேயே தடுப்பு மருந்து கொடுக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார் அவர்.

“ஆரம்பத்தில் மருந்து மிகவும் அளவாகவே கிடைத்தது. அதையும் அவர்கள் சமாளிக்க வேண்டும்.”

இதுவரை 55 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இதில் கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் முதல் சுற்று மருந்தை பெற்றுள்ளனர். எட்டு மில்லியன் மக்கள், இரண்டு சுற்று மருந்தையும் பெற்று முழுமையாக தடுப்பு மருந்தை பெற்றுவிட்டனர்.

”45 வயதுக்குட்பட்ட நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் குறித்து கவனம் செலுத்துவதற்கான நேரம் இது.” என்று நம்பிகிறார் மருத்துவர் ஓம்.

இந்த கருத்தை ஆதரித்து பேசும் மருத்துவர் பட், புற்றுநோயாளிகளுக்கு என்று அரசு தனியாக ஒரு கொள்கையை விகுக்க வேண்டும் என்றும், அதில், இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட இரு தடுப்பு மருந்துகளில் எதை எடுத்துக்கொண்டாலும், அதன் இரண்டு சுற்று மருந்துகளுக்கான சரியான இடைவேளை குறித்து முடிவு செய்யப்பட வேண்டும் என்கிறார்கள்.

சமீபத்தில் கிங்ஸ் கல்லூரி மற்றும் பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிட்யூட் ஆகியவை சேர்ந்து நடத்திய ஆய்வில், (ஃபைப்சர் -பையோடெக்) திட வகை புற்றுநோய் உள்ளவர்களுக்கு முதல் சுற்று தடுப்பு மருந்து 39% மற்றும் ரத்தக்கசிவு ஏற்படக்கூடிய புற்றுநோய் உள்ளவர்களுக்கு 13% மட்டுமே ஆண்டிபாடிக்கள் மூன்றாம் வாரம் செயல்படுகின்றன. இதுவே, புற்றுநோய் இல்லாதவர்களுக்கு, ஆண்டிபாடி செயல்பாடு 97% சதவிகிதமாக உள்ளது.”

அதே நோயாளிகளுக்கு மூன்று வார இடைவேளைக்குப் பின் இரண்டாம் சுற்று தடுப்பு மருந்து அளிக்கப்படும் போது, “திடவகை புற்றுநோய் உள்ளவர்களுக்கான ஆண்டிபாடிகளில் 95% என்ற நல்ல செயல்பாடை பார்க்க முடிவதோடு, வெறும் இரண்டே வாரத்தில் ஆண்டிபாடிக்களை கண்டறிய முடிவதாக”ஆய்வு தெரிவிக்கிறது.

“அதே நேரத்தில், மூன்று வாரங்களில் தடுப்பு மருந்து பெறாதவர்களின் உடலில் இத்தகைய மேம்பாட்டை பார்க்க முடிவதில்லை.” என்றும் அது குறிப்பிடுகிறது.

கோவிட் தடுப்பு மருந்து போட்டுக்கொள்ள இருந்த 4-6 வார இடைவேளையை சமீபத்தில் 4-8வார இடைவேளையாக இந்தியா அதிகரித்துள்ளது. ஆனால், எந்த வயது வரம்பிலும், கோவிட் பாதிக்க அதிக வாய்ப்புள்ள மக்களுக்கென எந்த ஒரு தனி கொள்கையும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

உடனடி கோவிட் தடுப்பு மருந்து என்பது இளம் புற்றுநோயாளிகளுக்கு மட்டுமல்ல. இந்தியாவில் டயலிசிஸ் செய்துகொள்வதற்காக, ஆயிரக்கணக்கானோர் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவை உள்ளது.

அவ்வாறு மருத்துவமனைக்கு வந்த பல நோயாளிகளுக்கு கொரோனாவின் முதல் அலையின்போது நோய்த்தொற்று ஏற்பட்டத்தை காண முடிந்ததாக கூறுகிறார், எர்னாகுளம் மருத்துவக்கல்லூரியில் நுரையீரல் துறையில் பணியாற்றும் பேராசிரியர் ஏ.ஃப்தாஹுதீன்.

”அவ்வாறு உள்ள பல நோயாளிகளுக்கு (45 வயதிற்குட்பட்டோர்) தடுப்பு மருந்து கிடைப்பதை நாம் முன்னுரிமை ஆக்கவேண்டும். எல்லோராலும் வீட்டிலேயே டயாலிசிஸ் செய்துகொள்ள முடியாது. அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிட முடியாது. அவர்களுக்கு நம் உதவி தேவை.” என்கிறார்.

” 50 வயதாகும் ஒரு சமாளிக்ககூடிய நீரிழிவு நோய் கொண்ட நோயாளிக்கு கோவிட் தொற்று ஏற்படும் வாய்ப்பு எவ்வளவு உள்ளதோ அதே அளவு வாய்ப்பு 30 வயதுடைய ஒரு புற்றுநோய் அல்லது நுரையீரல் பிரச்னை உள்ள ஒரு நோயாளிக்கும் உள்ளது என்று என்னால் வாதிட முடியும்.”

33 வயதாகும் கே.பி.சரத் அத்தகைய ஒரு நோயாளிதான். அவருக்கு வாரத்திற்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும். ஆனால், கோவிட் தொற்று ஏற்பட்டுவிடும் என்ற கவலை அவருக்கு உள்ளது.

”வயது வரம்பு இல்லாமல், கோவிட் பாதிக்கும் வாய்ப்பு அதிகமுள்ள எல்லோருக்காகவும் அரசு தடுப்பு மருந்து அளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” என்கிறார் சரத்.

இதே கருத்தை ஷிக்காவும் ஏற்கிறார், “எங்களால், ஒரு நேரத்தில் ஒரு விஷயம் குறித்தே கவலை கொள்ள முடியும், கோவிடை எதிர்த்து போரிடும் வாய்ப்பை எங்களுக்கு கொடுங்கள்.” என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: