சீரம் இன்ஸ்ட்டியூட் நிறுவனத்தில் தீ விபத்து; கோவிட் தடுப்பூசிகளுக்கு பாதிப்பு இல்லை

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குதான் கொரோனா தொற்றுக்கு எதிரான கோவீஷீல்ட் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தில் தற்போது தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இத்தீவிபத்து அந்நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட நிர்வாக கட்டடத்தில்தான் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து தொடர்பாக சீரம் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் ஆதர் பூனாவாலா செய்துள்ள ட்வீட்டில், "இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. மேலும் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை. அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். கட்டடத்தின் சில தளங்கள் மட்டும் சேதமாகியுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன.

தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

"சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவன வளாகத்தில் பல்வேறு கட்டடங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றில்தான் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். இதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது" என புனேவின் காவல் உதவி ஆணையர் ரவீந்திர ஷிஸ்வே தெரிவித்திருக்கிறார்.

"சீரம் நிறுவனத்தில் டெர்மினல் - 1ல் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. அதிகளவிலான புகையால் மீட்புப்பணிகளில் பல தடைகள் இருப்பதாக" புனே நகர துணை ஆணையர் நம்ரதா பாட்லிம் தெரிவித்துள்ளார்.

"தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்" என தீயணைப்புத்துறை அதிகாரி பிரசாந்த் ரன்பிசே கூறியுள்ளார்.

எதனால் இந்த தீபத்து ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாக தெரியவரவில்லை என்றும் கோவிட் தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் கட்டடத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது நிம்மதியான விஷயம் என்றும் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைச்சர் ராஜேந்தி சின்ஹான் கூறியுள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்ட் - ஆஸ்ட்ரசெனகாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் இங்குதான் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான தடுப்பூசிகள் இங்கு தயார் செய்யப்படுகின்றன.

இந்தியா மட்டும் அல்லாது பல நாடுகளும் இங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகளையே சார்ந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :