சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு கோயில் வழிபாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

பிரசுரிக்கப்பட்டது

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி வழிபாட்டுக்குச் செல்ல என்ன விதமான நிபந்தனைகள் பின்பற்றப்படவேண்டும் என்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சனிக்கிழமை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருநள்ளாறு தர்ப்பனேஸ்வரர் கோயில் சனி பகவான் வழிபாட்டுக்குப் பெயர் பெற்றது. இங்கு நடக்கும் சனிப்பெயர்ச்சி வழிபாட்டுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி வழிபாடு நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

இதை ஒட்டி கோயிலில் நாளை முதல் அடுத்த 48 நாட்களுக்குச் சனிப்பெயர்ச்சி வழிபாடு நடத்தப்படுகிறது.

கொரோனா நோய்த் தொற்று சூழலில் கோயிலுக்குள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்களைப் பாதுகாப்பாக அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் நள தீர்த்ததில் நீராட அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பைப் புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டது.

இதனிடையே சனிப்பெயர்ச்சி நிகழ்வின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் இந்த கொரோனா தொற்று சூழலில் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயில் ஸ்தானிகர்கள் சங்க தலைவர் எஸ்.பி.எஸ்.நாதன் என்பவர் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்வும் உத்தரவிட்டிருந்தார்.மேலும் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்துவது தொடர்பாக புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், கோவில் செயல் அலுவலர் மற்றும் புதுச்சேரி, துணைநிலை ஆளுநர், மனுதார் மற்றும் தேவைப்படும் நபர்கள் அடங்கிய கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.இதன் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில், 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை சான்றிதழை பக்தர்கள் சமர்பிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.இந்த முடிவை எதிர்த்து காரைக்காலை சேர்ந்த சிங்காரவேலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த வழக்கு இன்று அவசர வழக்காக, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை எனவும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய விதிப்படி வெப்ப நிலை பரிசோதனை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்ற முடிவு பண விரயத்தை ஏற்படும். இது முழுக்க சாத்தியமற்றது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெப்ப நிலை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் நபர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்து கொரோனா அறிகுறிகள் இல்லாத பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :