You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரணாப் முகர்ஜி புத்தகம் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்துமா? மகனின் எதிர்ப்பால் புதிய சிக்கல்
இந்திய குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் நினைவுகளை விவரிக்கும் வகையில் எழுதப்பட்ட புத்தகத்தை வெளியிடும் விவகாரத்தில் அவரது மகள் ஷர்மிஸ்தாவுக்கும் மூத்த மகன் அபிஜித் முகர்ஜிக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது.
இத்தனைக்கும் இருவரும் ஒரே காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள். ஷர்மிஸ்தா காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆக இருக்கிறார். அபிஜித் முகர்ஜி மேற்கு வங்க எம்.பி ஆக இருந்தவர்.
"இந்த புத்தகத்தை பிரணாப் முகர்ஜி உயிருடன் இருந்தபோதே பார்த்து அதற்கு ஒப்புதல் தெரிவித்து விட்டார்," என்று ஷர்மிஸ்தா கூறுகிறார். மலிவான புகழுக்காக புத்தகத்தை வெளியிட தடை கோருவதை ஏற்க முடியாது என்று அவர் தெரிவிக்கிறார்.
இந்திய குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது நினைவுகளை அலசும் "தி பிரசிடென்ஷியல் இயர்ஸ்" என்ற குடியரசு தலைவர் பதவிக்கால ஆண்டுகள் என்ற புத்தகத்தை அவர் உயிருடன் இருந்த காலத்தில் பிரணாப் எழுதியிருந்தார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த புத்தகத்தை வெளியிட பிரபல பதிப்பகமான ரூபா பதிப்பகம் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.
மேலும், புத்தகத்தின் சில பத்திகளை தமது ட்விட்டர் பக்கத்தில் அந்த பதிப்பக நிர்வாகம் வெளியிட்டது. அதில் குடியரசு தலைவராக தான் பதவிக்கு வந்த பிறகு, காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தங்களின் ஆட்சியை தக்க வைப்பதில் மும்முரமாக இருந்தனர். அத்தகைய சூழலில், காங்கிரஸின் அரசியல் தள்ளாட்டம் கண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அந்த புத்தகத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை "எதேச்சதிகாரம் மிக்கவர்" என்றும் பிரணாப் குறிப்பிட்டிருப்பதாக புத்தக வரிகள் மூலம் தெரிய வந்தது.
இந்த நிலையில் இந்த புத்தக வெளியீட்டுக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள பிரணாப் முகர்ஜியின் மூத்த மகன் அபிஜித் முகர்ஜி, "தி பிரசிடென்ஷியல் இயர்ஸ் புத்தக எழுத்தாளரின் மகன் நான். சில ஊடகங்களில் உலா வரும் உங்களுடைய பதிப்பகம் திட்டமிட்டுள்ள புத்தகத்தின் சில வரிகள் காட்சிப்படுத்தப்படுவதை நீங்கள் நிறுத்த வேண்டும். அந்த புத்தகத்தின் சில பகுதிகள் எனது ஒப்புதலின்றி பிரசுரமாகியுள்ளது," என்று அபிஜித் கூறியுள்ளார்.
ஊடகங்களில் வெளியாகி வரும் புத்தகத்தின் சில பத்திகள், அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ள அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து ரூபா பதிப்பகம், அதன் நிறுவனர் கபிஷ் மிஸ்ரா ஆகியோரை டேக் செய்திருக்கிறார்.
அண்ணனுடன் மோதும் தங்கை
இந்த விவகாரம் தொடர்பாக ரூபா பதிப்பகத்தாருக்கு தனியாக ஒரு கடிதத்தை அபிஜித் எழுதியிருக்கிறார். அதில், "எனது தந்தை காலமாகி விட்டார். அவர் எழுதியதாக கூறப்படும் புத்தகத்தின் முழு பிரதியையும் நான் பார்க்க விரும்புகிறன். எனது தந்தை உயிருடன் இருந்திருந்தாலும், இதையே அவர் செய்திருப்பார். எனவே, புத்தகத்தை அச்சிடும் முன்பாக, அதற்கு நான் ஒப்புதல் தரும்வரை பிரசுரம் செய்யக்கூடாது," என்று அபிஜித் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
எனினும், பிரணாப் முகர்ஜியின் மகளும் அபிஜித்தின் சகோதரியுமான ஷர்மிஸ்தா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்திலேயே அபிஜித்தின் கோரிக்கைக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்.
"எனது தந்தை கைப்பட எழுதிய குறிப்பு, புத்தகத்தின் இறுதி வரைவில் இடம்பெற்றுள்ளது. அதில் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தெளிவாக உள்ளதாக கூறியிருக்கிறார். அவர் வெளியிட்டிருப்பது அவரது சொந்த கருத்துகள். மலிவான புகழைப் பெறும் நோக்கத்துடன் புத்தக வெளியீட்டை யாரும் தடுக்க முயலக்கூடாது. அப்படி செய்வது எனது தந்தைக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அவமரியாதை," என்று ஷர்மிஸ்தா கூறியுள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவில் தனது சகோதரர் அபிஜித் முகர்ஜியின் ட்விட்டர் முகவரியையும் அவர் டேக் செய்திருக்கிறார்.
தடுமாறும் காங்கிரஸ் தலைமை
காங்கிரஸ் கட்சி, ஏற்கெனவே பல்வேறு மாநில தேர்தல்களில் தோல்வியை தழுவிய வேளையில், தற்போது காங்கிரஸ் தலைமை தொடர்பான பிரணாபின் விமர்சனங்கள் எழுத்து வடிவில் வெளியானால், அது அக்கட்சிக்கு மேலும் தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தும் என்று அக்கட்சியினர் கருதுகிறார்கள்.
புத்தகத்தில் இடம்பெற்ற பத்திகளின்படி, 2014ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு அக்கட்சித் தலைவர் சோனியாவையும் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கையும் கடுமையாக சாடியிருக்கிறார் பிரணாப் என பொருள்பட முடிகிறது.
மேலும் சில பத்திகளில், "என்னிடம் பேசிய சில காங்கிரஸ் தலைவர்கள் ஒருவேளை 2004இல் நான் நாட்டின் பிரதமராக ஆக்கப்பட்டிருந்தால், 2014இல் காங்கிரஸ் தோல்வி அடைந்திருக்காது என்று தெரிவித்தனர். ஆனால், அந்த பார்வையுடன் நான் உடன்படவில்லை. என்னை நாட்டின் குடியரசு தலைவராக்கிய பிறகு கட்சித்தலைமை அரசியல் தள்ளாட்டம் கண்டிருந்தது என நான் நம்பினேன். மறுபுறம் மாநிலங்களவைக்கு நீண்ட நாட்களுக்கு வராமல் தவிர்த்த மன்மோகன் சிங், எம்.பி.க்களுடன் தொடர்பற்றவராக இருந்தார்" என்று கூறப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் தோல்வி பற்றிய பிரணாபின் பார்வை
இந்திய குடியரசு தலைவராக பதவி ஏற்கும் முன்பு, மத்தியில் ஆட்சியில் இருந்த கிட்டத்தட்ட எல்லா காங்கிரஸ் அரசிலுமே அமைச்சராக வலம் வந்தவர் பிரணாப் முகர்ஜி. அந்த வகையில், 2014ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வியை தனது பார்வையில் பிரணாப் தனது புத்தகத்தில் மதிப்பிட்டிருக்கிறார்.
பிரணாப் முகர்ஜி தனது புத்தகத்தில், "நாட்டை ஆள பிரதமருக்கே தார்மீக உரிமை உண்டு என நான் நம்புகிறேன். அந்த வகையில் பிரதமரின் பணியும் ஆளுகையும் நிச்சயமாக ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும். ஆனால், பிரதமராக இருந்த மன்மோகன் சிங், கூட்டணி அரசையும் ஆட்சியையும் காப்பாற்றுவதிலேயே மும்முரமாக இருந்தார்," என்று கூறியிருக்கிறார்.
மேலும் மோதி அரசியல் பற்றி குறிப்பிட்ட பிரணாப், "நரேந்திர மோதியின் முதலாவது பதவிக்காலம் எதேச்சதிகார பாணியில் இருந்தது. அதன் தாக்கம் நீதித்துறை, நாடாளுமன்றத்தில் உணர முடிந்தது," என்று கூறியிருந்தார்.
டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த பிரணாப் முகர்ஜிக்கு, கொரோனா தொற்று இருந்தது கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 84.
2004ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க தகுதி பெற்றபோது, நாட்டின் பிரதமர் பதவியை ஏற்க சோனியா காந்தி மறுத்து விட்டார். அப்போது கட்சியிலும் அரசியலிலும் மூத்தவரான பிரணாப் முகர்ஜியே பிரதமராக முன்மொழியப்படுவார் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் மன்மோகன் சிங்கை பிரதமர் பதவி ஏற்க தேர்வு செய்துள்ளதாக சோனியா காந்தி கூறினார்.
இந்திரா காந்தி, நாட்டின் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங்கை ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கான கோப்பில் அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியே கையெழுத்திட்டார்.
இந்த நிலையில், தன்னிடம் அதிகாரியாக பணியாற்றிய மன்மோகன் சிங்கை இந்திய பிரதமராக நியமிக்க சோனியா காந்தி முடிவெடுத்தபோதும் அதை அவர் ஒருபோதும் வெளிப்படையாக ஆட்சேபிக்கவில்லை. தனது 50 வருட இந்திய அரசியல் வரலாறில் அடிமட்டத்தில் இருந்து நாட்டின் குடியரசு தலைவர் பதவிவரை உயர்ந்தவர் பிரணாப் முகர்ஜி. அவர் வகிக்க இயலாமல் போன பதவி "பிரதமர்" மட்டுமே.
ஆனால், அதே பிரணாப் முகர்ஜிக்கு 2017இல் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்கி கெளரவித்தது.
பிற செய்திகள்
- வாடகை பாக்கி: லதா ரஜினிகாந்த் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு
- 180 கோடி நட்சத்திரங்களை எண்ணி முடித்த விண்வெளி தொலை நோக்கி: வியப்பூட்டும் தகவல்கள்
- மதுரை கிராமத்தின் ஓயாத போராட்டம்: எரிவாயு குழாய் திட்டத்துக்கு எதிர்ப்பு
- கொரோனா வைரஸ்: பிளாஸ்மா தெரபியுடன் சில இந்திய மருத்துவர்கள் முரண்படுவது ஏன்?
- கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள்: அடக்கம் செய்ய வேறு நாட்டிடம் உதவி கோரும் இலங்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்