திருநங்கைக்கு குடும்ப சொத்தில் பங்கு: அரசு உத்தரவால் விடிவு பிறக்குமா? - உண்மைக்கதை

- எழுதியவர், மனோ
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார் குலத்தை சேர்ந்த காந்தி என்பவருக்கு அன்புராஜன், ரவீந்திரன் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு போடுவார்பட்டி கிராமத்தில் பூர்விக சொத்துக்கள் உள்ளன.
இந்த நிலையில் அன்புராஐன் கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை கீழ் பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், திருநங்கை என சான்றிதழ் பெற்று ஊர்வசி என பெயர் மாற்றம் செய்து திருநங்கையாக மாறி இருக்கிறார். மேலும் மதுரை மாவட்ட சமூக நல அலுவலகத்தில், தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரிய உறுப்பினராக உள்ளார்.
தற்போது திருநங்கை ஊர்வசி இவரது குடும்பத்தாரிடம் இருந்து பிரிந்து, மதுரையில் உள்ள அரசடி பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இதனிடையே இவரது தாயார் ராஐாத்தி பெயரிலுள்ள சொத்து, அன்புராஐன் என கூட்டுப்பட்டாவில் தாக்கலாகி இருக்கிறது. இந்த பெயரை காரணம் காட்டி திருநங்கையான ஊர்வசிக்கு சொத்தை பிரித்து தர இவரது சகோதரர்கள் அய்யாத்துரை, ரவீந்திரன் மறுத்து விட்டனர். இது தொடர்பாக உசிலம்பட்டி ஆர்டிஒ அலுவலகத்தில் ஊர்வசி புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை செய்த ஆர்டிஓ ராஜ்குமார் கூட்டுப்பட்டாவில் அன்புராஜன் என்ற பெயரை, அன்புராஐன் (எ) ஊர்வசி என பெயர் திருத்தம் செய்து, திருநங்கை ஊர்வசிக்கு சொத்தில் மூன்றில் ஒரு பங்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் திருநங்கை என பாலினத்தை காரணம் காட்டி சொத்தை தர மறுப்பது சட்டப்படி குற்றம் என்றும், உத்தரவுப்படி செய்யாவிட்டால் சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆர்டிஓ உத்தரவிட்டார். தமிழகத்தில் திருநங்கைக்கு குடும்ப சொத்தில் பங்கு பிரித்து கொடுத்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நான் பாரம்பரிய விவசாய குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன். சிறு வயதிலிருந்து திருநங்கையாக வாழ்ந்து வந்த காரணத்தினால், எனது குடும்பத்தினர் என்னை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் இருந்ததாக கூறுகிறார் திருநங்கை ஊர்வசி.
"கிட்டத்தட்ட 2004ஆம் ஆண்டு எனது வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நாளிலிருந்து, இதுவரை எனது குடும்பத்தார் எனக்கு எந்த உதவியும் செய்ததில்லை. என்னை காணவில்லை என்று கூட அவர்கள் தேடியதில்லை. எனது சகோதரர்கள் என்னோடு பேசினாலோ, நல்ல முறையில் உறவாடினாலோ சொத்தில் பங்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலை எற்படும் என்பதால் என்னோடு அவர்கள் பேசுவதை நிறுத்திவிட்டனர்.
அதன் பிறகு நானும் பல வருடங்களாக முயற்சி செய்து காவல் நிலையம், உயர் அதிகாரிகள் என எல்லோரிடமும் சென்று முறையிட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அதன்பிறகு தற்போது 2019ஆம் திருநங்கைகள் பாதுகாப்பு சட்டத்தின் படி, இந்த வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகளாக நான் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து இருக்கிறேன். அதில் வரும் வருமானத்தில், திருநங்கைகள் மேம்பாட்டிற்காக பல பணிகளை செய்திருக்கிறேன்," என்றார் அவர்.
"விட்டுப்போன கல்வியை கொஞ்சம் கொஞ்சமாக படித்து வந்தேன். மேலும் தனியார் பயிற்சி வகுப்பில் சேர்ந்து, தனித் தேர்விற்காக இப்படி சிறு சிறு வேலைகளை செய்து என் வாழ்க்கையை இதுநாள் வரை கடந்து வந்திருக்கிறேன். ஆனால் எனக்கு ஏற்ற நேரத்தில் கல்வியோ அல்லது பாதுகாப்போ கிடைக்கவில்லை. என் குடும்பம் என்னை பாதுகாக்க மறுத்துவிட்டனர். கல்வி, சொத்துரிமை போன்ற சராசரியாக இருக்குக்கூடிய அனைத்தையும் செய்ய தவறியுள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்கு நடக்கக் கூடிய எந்த விஷயத்தையும் எனக்கு அவர்கள் செய்யாமல் இருந்ததால் எனது வாழ்நாள் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது," என வேதனையுடன் தெரிவிக்கிறார் ஊர்வசி.
எவ்வளவு முயற்சி செய்தும், எனது குடும்பத்தினரிடம் இருந்து எனக்கு எந்த முன்னேற்றம் கிடைக்கவில்லை என்பது கஷ்டமாக இருப்பதாக கூறுகிறார் அவர்.
"இனிவரும் காலங்களில் என்னுடைய பாரம்பரிய குடும்ப தொழிலான விவசாயத்தை செய்ய முடிவு செய்து இருக்கிறேன். அதையும் இயற்கை சார்ந்து மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் ஒரு விழிப்புணர்வு எனக்கு கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் செய்யலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.
அந்த இயற்கையும், விவசாயமும் என்னை பாதுகாக்கும் தாயை போன்றவை என்பதை நான் புரிந்து கொண்டேன். ஏனென்றால் இந்த சொத்து என் தாயார் எனக்காக சம்பாதித்து வைத்தது. என் தகப்பனார், தாத்தாவின் பூர்வீக சொத்திலிருந்து எனக்கு எதுவும் தர முடியாது என்று மறுத்துவிட்டார். ஆனால் தற்போது என் தாயார் உயிருடன் இல்லை. அவர் எனக்காக வைத்திருந்த அந்த சொத்தை, எனது தாயைப் போல பாதுகாப்பேன். என் தாயாரும் விவசாயம் செய்து வந்தார். தற்போது நானும் அவர் வழியில் நடக்க விரும்புகிறேன்," என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஊர்வசி.
"நான் பல வருடங்களாக திருநங்கைகள் மேம்பாட்டு பணியில் ஈடுபட்டு பல நல்ல காரியங்களை என் சமூக மக்களுக்காக செய்திருக்கிறேன். மதுரை மாவட்ட தாய் விழுதுகள் அறக்கட்டளையின் தலைவியாக மூன்று ஆண்டுகள் இருந்திருக்கிறேன். மேலும் பல நிறுவனங்களில் பணிபுரிந்து மக்களுக்க மேம்பாட்டுப் பணியை செய்து இருக்கிறேன். எனக்கென்று வாழாமல், இந்த சமூகத்திற்கு எனது விவசாயத்தை நேர்மையான முறையில் செய்ய விரும்புகிறேன்," எனத் திருநங்கை ஊர்வசி தெரிவித்துள்ளார்.
திருநங்கைகளின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. அவர்களுக்கு அடிப்படை உரிமை முற்றிலும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர் சட்ட வல்லுநர்கள்.

இது குறித்து வழக்கறிஞர் முத்துகுமார் கூறுகையில், "சமூகத்தால் திருநங்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நிலையில், லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவில் சட்டம் இயற்ற மசோதா கொண்டுவரப்பட்டது. எனினும் அது பெயரளவில் மட்டுமே இருந்தது. இதனால் தேசிய சட்டப் பணிகள் ஆணையம் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம உரிமை கொடுக்க வேண்டுமென பொதுநல வழக்கு தாக்கல் செய்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் திருநங்கைகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலாக அங்கீகரித்து கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க உத்தரவிட்டது.
ஆனாலும் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு திருநங்கையை, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என அங்கீகரிப்பது அவர்களது அடிப்படை உரிமையை பாதிக்கும் என்பதால், இது பற்றிய சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது," என்கிறார் அவர்.
திருநங்கைகளுக்கு அவர்களுடைய சொத்திலும் உரிமை தரப்படவில்லை என்ற நிலைமை பரவலாக காணப்படுவதாக கூறுகிறார் வழக்கறிஞர் முத்துகுமார்.
"இந்திய சொத்துரிமை சட்டம் 1988ஆம் அண்டு வரை பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என கூறுகிறது. அதில் 1988ஆம் ஆண்டிற்கு முன்பு திருமணமானவர்களுக்கு பங்கு கொடுக்க தேவையில்லை என்ற நிலையிருந்தது. ஆனால், அது திருத்தப்பட்டு தற்போது பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருநங்கைகளுக்கு சொத்துரிமை பற்றி எதுவும் கூறப்படவில்லை.

திருநங்கை ஒருவர் தனது குடும்பத்தாரிடம் மூதாதையர் சொத்தில் பங்கு கேட்ட போது, திருநங்கைக்கு பங்கு இல்லை என குடும்பத்தினர் மறுத்துள்ளனர். சொத்துரிமை கேட்டு வழக்கு தொடுக்க வேண்டுமென்றால் சொத்து மதிப்பை பொறுத்து நீதிமன்ற கட்டணம் செலுத்த வேண்டும். அந்த திருநங்கைக்கு அந்த அளவுக்கு வசதி இல்லாத காரணத்தினால், மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்கிறார். மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரியிடம் விசாரணைக்கு உத்தரவிடுகிறார். மனுவை விசாரித்த உட்கோட்ட நடுவர், திருநங்கைகள் உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாற்று பாலினத்தை சேர்ந்தவர். ஆகவே, அவர்களுக்கு அடிப்படை உரிமையை பெற்று தருவது அரசின் கடமை. அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது," என வழக்கறிஞர் தெவிக்கிறார்.
திருநங்கைகளுக்கு சொத்துரிமை மறுக்கவோ, சொத்து பிரித்து கொடுக்க தேவையில்லை என்றோ எந்த சட்டமும் சொல்லவில்லை. எனவே பாதிக்கப்பட்ட திருநங்கை தனக்கு சேர வேண்டிய சொத்தினை பெற முழு தகுதி உடையவராகிறார் என்று உட்கோட்ட நடுவர் உத்திரவிட்டு இருப்பதாக வழக்கறிஞர் முத்துகுமார் கூறுகிறார்.
பிற செய்திகள்:
- எவரெஸ்ட் சிகரத்தின் உண்மை உயரம் - முடிவுக்கு வந்த நெடுங்கால சர்ச்சை
- புதிய நாடாளுமன்றக் கட்டடம்: அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோதி
- செளதி அரேபியாவில் இருந்து வரவிருக்கும் புதிய வகை எரிபொருள் - பாதுகாப்பா, ஆபத்தா?
- ஜியோ சிம், அம்பானி, அதானி கம்பெனி பொருள்களை புறக்கணிப்போம்: விவசாயிகள் போராட்ட குழு
- புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல்: அதீத செலவு, வசதிகள் - முக்கிய தகவல்கள்
- 46 ஆயிரம் ஆண்டு பழமையான பழங்குடி குகை: சீரமைத்துத் தர சுரங்க நிறுவனத்துக்கு உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
















