You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாஜக எம்எல்ஏக்கள் திரிபுரா முதல்வருக்கு எதிராகப் போர்க்கொடி - பிப்லப் குமார் தேப் பதவி நீடிக்குமா?
முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - பாஜக எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராகப் போர்க்கொடி
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் தேபை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி, சொந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
குறைந்தபட்சம் ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாகக் கட்சித் தலைமையைச் சந்திக்கவேண்டும் என்று கோரியுள்ளனர்.
முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் சர்வாதிகாரி போல செயல்படுவது மட்டுமல்லாமல் அனுபவமற்றவராகவும், மக்கள் ஆதரவைப் பெறாதவராகவும் இருப்பதாக டெல்லியில் உள்ள எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் அந்த சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து தற்போது மாநில அரசின் தலைமையை மாற்றுவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிப்லப் குமார் பிரதமர் நரேந்திர மோதியின் நம்பிக்கை பெற்றவராகக் கருதப்படுகிறார். இப்போதைக்கு அவரது அரசுக்கு ஆபத்து இருப்பதாகத் தெரியவில்லை.
தினத்தந்தி - உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி
உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்ட சம்பவம் குறித்து தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
பெரம்பலூரைச் சேர்ந்த ரோஷ்னிக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள காட்டு கொட்டகை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
வீரராகவன் கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டார். எனவே ரோஷ்னி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
திருமணத்தின்போது ரோஷ்னிக்கு அவரது பெற்றோர் வழங்கிய 43 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை திரும்பக்கேட்டும், கணவர் குடும்பத்தினர் கொடுக்க மறுப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரம்பலூர் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம், ரோஷ்னி இறந்து விட்டதாக கூறி அவருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதனை கண்ட ரோஷ்னியின் உறவினர்கள், தோழிகள் துக்கம் விசாரிப்பதற்காக ரோஷ்னியின் வீட்டிற்கே சென்றுள்ளனர்.
பலர் ரோஷ்னியின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்துள்ளனர். இந்த விவகாரம் ரோஷ்னி குடும்பத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து தனது கணவர் குடும்பத்தினர் மீது காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார் ரோஷ்னி.
தினமணி - நரேந்திர மோதி செயற்கை நுண்ணறிவு குறித்து உரை
'செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்; அதனை ஆயுதப்படைகள், மத அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆயுதமாக பயன்படுத்துவதில் இருந்து உலகை பாதுகாக்க வேண்டும்' என்று பிரதமா் மோதி தெரிவித்தாா் என்கிறது தினமணி செய்தி.
சமூக முன்னேற்றத்துக்கு செயற்கை நுண்ணறிவை பொறுப்புணா்வுடன் பயன்படுத்துவதற்கான (ரெய்ஸ் 2020) உச்சி மாநாடு காணொலி வழியில் 5 நாள்கள் நடைபெறுகிறது. மத்திய அரசு சாா்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டை பிரதமா் மோதி திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.
நரேந்திர மோதி உரை:
வேளாண்மை, அடுத்தகட்ட நகா்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்குதல், பேரிடா் மேலாண்மை அமைப்புகளை வலுவாக்குதல் போன்ற பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய பங்காற்ற வேண்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது அனைவரின் கூட்டுப் பொறுப்பு.
ஆயுதப் படைகள், மத அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை ஆயுதமாக பயன்படுத்துவதில் இருந்து உலகை பாதுகாக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதிக்கும் அதே வேளையில், மனித உணா்வுகளும், மனித கண்டுபிடிப்புகளும் தான் நமது மிகப்பெரிய பலமாக தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்' என்று தெரிவித்தாா் என தினமணி செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- இரவோடு இரவாக ராணுவ அணிவகுப்பு நடத்திய வடகொரியா
- விராட் கோலியும், சிஎஸ்கே பேட்ஸ்மேன்களும் - மாறுபட்ட கதைகளும், முடிவும்
- பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தை: எப்படி நடந்தது அந்த `அதிசயம்`
- ஹாத்ரஸ் வழக்கு: காவல்துறையின் அமைப்பு முறையில் சாதிய வேறுபாடுகள் உள்ளதா?
- கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்துள்ள சீன குழு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: