அதிமுக உயர்மட்டக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன? ஒரே நேரத்தில் கூடிய முக்கிய நிர்வாகிகள்

எடப்பாடி பழனிசாமி அல்லது ஓ. பன்னீர்செல்வம்: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்?

பட மூலாதாரம், DIPR

பிரசுரிக்கப்பட்டது

அதிமுகவில் இன்று நடந்த உயர்மட்டக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, அக்கட்சியின் செயற்குழு செப்டம்பர் 28ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.கவின் தலைமை நிர்வாகிகளின் கூட்டம் வெள்ளிக்கிழமையன்று மாலை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

பொதுவாக இம்மாதிரி தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டங்களுக்கு வெளிப்படையாக அறிவிப்பு வெளியாகாத நிலையில், வியாழக்கிழமை மாலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், கே.பி. முனுசாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

அதிமுக

பட மூலாதாரம், AIADMK

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் 2021 ஏப்ரல் - மே மாதங்களில் நடக்கவிருக்கும் நிலையில், ஆளும் அ.தி.மு.கவின் சார்பில் யார் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்பது குறித்து தொடர்ந்து விவாதங்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று இந்த ஆலோசனைக் கூட்டத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி வந்தபோது, அவருடைய ஆதரவாளர்கள் 'நிரந்தர முதலமைச்சர் எடப்பாடியார் வாழ்க' என்று கேஷமிட்டனர். அதேபோல, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வந்தபோது, 'அம்மாவின் அரசியல் வாரிசு ஓ.பி.எஸ். வாழ்க' என அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி ரீதியாக மாவட்டங்களைப் பிரிப்பது, வழிகாட்டும் குழு அமைப்பது, வரவிருக்கும் தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை முடிவுசெய்வது உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதிமுக

பட மூலாதாரம், AIADMK

அ.தி.மு.க. தற்போது கட்சி ரீதியாக 67 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருச்சி, சென்னை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பத்து மாவட்டங்களை பிரிக்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கோருவதாகத் தெரிகிறது.

அதேபோல, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் ஒன்றாக இணையும்போது 11 பேரைக் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை. அது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும்போது தற்போதைய முதல்வர் எடப்பாடியையே முதல்வர் வேட்பாளராக முன்னிருத்துவதா அல்லது புதிதாக முடிவெடுப்பதா என்ற விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், வரும் செப்டம்பர் 28ஆம் தேதியன்று காலை ஒன்பதே முக்கால் மணிக்கு அ.தி.மு.கவின் செயற்குழு கூட்டம் கூட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: