"இரு மொழிக்கொள்கை, தேர்தல் வாக்குறுதி" - இவை பற்றி ஆளுநர் உரையில் கூறப்பட்டது என்ன?

பட மூலாதாரம், TNDIPR
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதலாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது .
முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பின் போது வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்ட நிலையில், இன்று தேசிய கீதம் , தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
சிவப்பு கம்பள வரவேற்பிற்கு பிறகு பேரவையில் நடைபெறும் கூட்டத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றினார். அவர் ஆங்கிலத்தில் உரையாற்றிய பிறகு அதன் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வாசித்தார்.
ஆளுநர் உரையில் வாசிக்கப்பட்டது என்ன?

பட மூலாதாரம், TNDIPR
மோசமான நிதிநிலை இருந்தாலும் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருப்பதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அளித்ததுடன் அவர்களது நலன்களுக்கு அரசு தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்
- இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும்
- உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்குவதற்கு தொடர்ந்து வலியுறுத்தப்படும்
- மாநிலத்தின் நிதி நிலைமை சீரமைக்கப்பட்டு தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக வரும் ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்
- தொழில் முதலீட்டை ஈர்க்க புதிய தொழில்கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்
- ஒன்றிய அரசுக்குச் செலுத்திய வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப் பகிர்வுப் பங்கைத் தரக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும்.
- இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், நியாயமான நிதிப் பகிர்வைப் பெறுவதற்காக, இந்தப் பிரச்சினையை உச்ச நீதிமன்றம் வரை சட்டப்பூர்வமாகக் கொண்டு செல்ல ஒரு சிறப்புச் சட்டக் குழுவும் அமைக்கப்படும்
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்புப் போதைப்பொருள் தடுப்புப் படை அமைப்பதற்கான அரசாணைகளை அரசு வெளியிட்டுள்ளது. போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது..

பட மூலாதாரம், TNDIPR
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் கூட்டம் எவ்விதம் இருக்கும் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆளுநரின் உரைக்கு பின்னர் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்ய அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் சபாநாயகர் தலைமையில் நடைபெறும்.
இந்த கூட்டத்தொடரில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. கூட்டத் தொடருக்கு "வாயத்திறங்க சி.எம்" என்று திமுக எம்எல்ஏக்கள் பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



















