தமிழ்நாடு கொரோனா ஊரடங்கால் பலன் இருந்ததா, இல்லையா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது பெருமளவில் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஊரடங்கு காலகட்டத்திலும் நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்த நிலையில், ஊரடங்கினால் பலன் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாத மத்தியிலேயே தமிழ்நாட்டில் உள்ள மால்கள், திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டன. பிறகு வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி நிறுத்தப்பட்டது. மார்ச் 24ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்பட்டதோடு, முழு ஊரடங்கும் அமலுக்கு வந்தது.
ஊரடங்கு அமலுக்கு வந்தபோது இந்தியாவில் 468 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மார்ச் 23ஆம் தேதி மாலை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் 12 பேருக்கு மட்டுமே நோய் பாதிப்பு இருந்தது.
ஆனால், மாநிலத்தில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படுவதற்கு முதல் நாளில் அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,28,041ஆக உயர்ந்திருந்தது. சிகிச்சையில் இருந்த ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 52,578ஆக இருந்தது.
ஆகவே, இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள், அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, வேலை இழப்பு ஆகியவற்றுக்கு எவ்வித பலனும் இல்லையா என்ற கேள்வி எழவே செய்கிறது.
"முழுமையான ஊரடங்கை அமல்படுத்தாமல் நோயைக் கட்டுப்படுத்தியிருக்கலாமா என்ற கேள்வியை இப்போது கேட்பது எளிது. ஆனால், நோய் பரவ ஆரம்பித்த தருணத்தில் உலகம் முழுவதும் என்ன நடைமுறை இருந்ததோ அதைத்தான் இங்கு பின்பற்ற வேண்டியிருந்தது.
கோவிட் - 19 என்பது உலகிற்குப் புதிய நோய். இந்த நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து இப்போதும் கற்றுக்கொண்டு வருகிறோம். ஆகவே, ஊரடங்கிற்கு பலனில்லையா என்ற கேள்விக்கு பதிலளிப்பது கடினம்" என்கிறார் தமிழக பொதுச் சுகாதாரத் துறையின் இயக்குநராக இருந்த டாக்டர் குழந்தைசாமி.
கொரோனா பரவல் துவங்கியபோது உலகில் மிகச் சில நாடுகளே முழுமையான ஊரடங்கு வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தன.
ஆனால், அம்மாதிரி நிலைப்பாட்டை எடுத்த நாடுகள் துவக்க நாட்களில் மிகப் பெரிய அளவில் உயிரிழப்புகளைச் சந்தித்தன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் குழந்தைசாமி.

பட மூலாதாரம், Getty Images
"இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, ஃப்ரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் முழுமையான ஊரடங்கு பின்பற்றப்படவில்லை. குறிப்பாக அமெரிக்காவில் ஊரடங்கே இல்லையென்று சொல்லலாம். இதன் காரணமாகவே அங்கு அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. மற்ற நாடுகளில் துவக்கத்தில் உயிரிழப்புகள் வெகுவாக அதிகரித்தன என்பதையும் கவனிக்க வேண்டும்" என்கிறார் அவர்.
கோவிட் - 19 நோய்க்கு மருந்து இல்லை என்பதால், இந்நோய் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தபோது மிகக் குறுகிய காலத்தில் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதற்குப் பிறகே நோய்த்தடுப்பின் ஒரு பகுதியாக, மாநிலங்கள், நாடுகளின் எல்லைகளை மூடுவது, ஊரடங்கை அமல்படுத்துவது போன்றவை அரசுகளால் அறிவிக்கப்பட்டன.
தவிர, நோய்ப் பரவல் துவங்கிய காலகட்டத்தில் இந்த நடவடிக்கைகள் உலகளாவிய நடவடிக்கைகளாக, தேசம் தழுவிய நடவடிக்கைகளாக இருந்தன. ஆகவே ஊரடங்கிற்கு எதிராக முடிவெடுப்பது என்பது கிட்டத்தட்ட இயலாத ஒரு காரியமாகவே இருந்தது.
"நோய் பரவ ஆரம்பித்தபோது ஊரடங்கு தேவையில்லையென முடிவெடுத்திருந்தால், மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியா போன்ற நாடுகளில் எவ்விதமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என கூறுவது கடினம். உயிரிழப்புகள் அதிகரித்திருந்தால் நிலைமை மிக மோசமாகியிருக்கும்" என்கிறார் குழந்தைச்சாமி.
தவிர, இந்த ஊரடங்கின் காரணமாக குறிப்பிடத்தக்க சில நன்மைகள் இருந்ததை சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். குறிப்பாக இந்த ஊரடங்கு காலகட்டத்தைப் பயன்படுத்தி பெரும்பாலான அரசுகள் தங்களுடைய பொது சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தின. ஆகவே தளர்வு ஆரம்பித்தவுடன் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும், சிகிச்சை அளிக்க முடிந்தது.

பட மூலாதாரம், Getty Images
"இந்த ஊரடங்கினால் நன்மைகளே இல்லையெனச் சொல்ல முடியாது. ஊரடங்கு இருந்திருக்காவிட்டால் மே மாதத்திலேயே 30-40 லட்சம் பேருக்கு நோய் பரவி, பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். ஊரடங்கின் மூலம் அதைத் தடுத்திருக்கிறோம். தவிர, மருத்துவக் கட்டமைப்புக்கு தன்னைத் தயார் செய்துகொள்வதற்கான நேரமும் கிடைத்தது. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஊரடங்கை அமல்படுத்தியவிதமும், நேரமும் அறிவியல் சார்ந்து இருக்கவில்லை" என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத்.
இந்தியா போன்ற இவ்வளவு பெரிய நாட்டில் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது தவறு என்கிறார் ரவீந்திரநாத். சீனாவுக்கு வெளியே நோய் பரவ ஆரம்பித்தவுடனேயே இந்த ஊரடங்கை அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆரம்பத்தில் சீனாவின் வூஹானிலிருந்து வரும் விமானங்களை மட்டுமே இந்தியா தடை செய்தது; ஆனால், இந்தியாவில் நோய் பெரிதும் பரவியது ஐரோப்பிய நாடுகளில் இருந்துவந்த விமானங்களால்தான். ஆகவே அவற்றையும் தடைசெய்திருக்க வேண்டும் என்கிறார் ரவீந்திரநாத். ஜனவரியிலேயே நோய் பரவல் ஆரம்பித்துவிட்டதால், அப்போதிருந்தே வெளிநாட்டிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தியிருக்க வேண்டும் என்கிறார் ரவீந்திரநாத்.
முதல் இரண்டு ஊரடங்கு காலகட்டத்தின்போது போதிய அளவுக்கு சோதனைகள் செய்யப்படவில்லை; அந்த அளவுக்கு சோதனை கிட்கள் இந்தியாவில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் ரவீந்திரநாத் இதனால் மிக முக்கியமான காலகட்டம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளப்படவில்லை என்கிறார்.
அதேபோல நோய் உச்சத்தில் இருக்கும்போது தளர்வுகளை துவங்கியிருப்பதும் சரியல்ல என்கிறார் அவர். "அந்த நேரத்தில் வெளிமாநில தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊருக்குப் போக அனுமதித்தார்கள். அவர்கள் பெருநகரங்களிலிருந்து தத்தம் கிராமங்களில் நோய்கள் பரவ காரணமாக அமைந்தார்கள்" என்கிறார் ரவீந்திரநாத்.
ஆனால், ஊரடங்கு இல்லாவிட்டால் நிலைமை மிக மோசமாகியிருக்கும் என்பதை அவர் ஏற்கிறார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

பட மூலாதாரம், AFP
"தளர்வுகளை முன்கூட்டியே துவங்கியிருக்கலாம் என இப்போது நாம் சொல்லலாம். ஆனால் அது விவாதத்திற்குரியது. இனிவரும் காலகட்டத்தில் நோய்ப் பரவலை மேலும் கட்டுப்படுத்துவது குறித்துதான் இப்போது நாம் சிந்திக்க வேண்டும்" என்கிறார் குழந்தைசாமி.
எல்லா கட்டடங்களையும் காற்றோட்டம் கொண்ட கட்டடங்களாக மாற்றுவது, பொது இடங்களில் கை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்துவது, தொற்றுக்கு எளிதில் ஆளாகக்கூடியவர்களை பாதுகாப்பாக வைப்பது ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் என்கிறார் குழந்தைசாமி.
கொரோனாவைத் தடுப்பதற்கான முதல் ஊரடங்கு இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஏப்ரல் 14 முதல் மே 3ஆம் தேதிவரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஜூன் 1ஆம் தேதி முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இப்போது நான்காம் கட்ட தளர்வு அமலில் இருக்கிறது.
பிற செய்திகள்:
- "இரான் வசம் அனுமதி அளவைவிட பல மடங்கு செறிவூட்டிய யூரேனியம்"
- அண்ணா சாண்டி: கேரளாவில் பெண்ணுரிமைக்காக நூற்றாண்டுக்கு முன்பு எழுந்த குரல்
- கல்வித்துறையில் புதுமை படைக்கும் தமிழக பெண்கள்
- பொறியியல் அரியர் மாணவர்கள் தேர்ச்சி: தமிழ்நாடு அரசின் விளக்கம் என்ன?
- விடுதலைப்புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்: மகாதீர் வலியுறுத்தல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












