கொரோனா: சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நாளை வீடு திரும்புகிறார்

பிரசுரிக்கப்பட்டது

தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக கண்டறியப்பட்டவர் உடல்நிலை தேரிவிட்டதால் நாளை அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவார் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவை திடீரென சோதனை செய்யச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர், அங்குள்ள வசதிகள் போதுமானதாக இருப்பதாகத் தெரிவித்தார். அறிகுறிகள் தென்பட்டவர்களை சோதனை செய்யவும், கண்காணிப்பில் வைக்கவும் வசதிகள் இருப்பதை அமைச்சர் பார்வையிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ''தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்தோம். தற்போது அவர் நலமாக உள்ளதால், அவரை நாளை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பவுள்ளோம். இது ஒரு நல்ல செய்தி'' என்று கூறினார்.

முன்னதாக சென்னையில் பேசிய சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டுப் பயணிகளிடமும் சோதனை செய்யப்படுவதாக தெரிவித்தார். ''வெளிநாட்டு பயணிகள் மட்டுமல்லாது, உள்நாட்டுப் பயணிகளையும் நாங்கள் சோதனை செய்கிறோம். தெர்மல் ஸ்கிரீனிங் சோதனை செய்கிறோம்.

காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கின்றனவா என பயணிகள் தெரிவிப்பதற்கும் படிவங்கள் தருகிறோம். விமான நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரமாக சோதனை செய்கிறோம்,'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: