கனடா பெருவெற்றி: கத்தார் 9 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஃபிஃபா உலகக் கோப்பையில் இன்று அதிகாலை நடந்த போட்டியில் தொடரை நடத்தும் நாடுகளுள் ஒன்றான கனடா 6-0 என்ற கோல் கணக்கில் கத்தாருக்கு எதிராக மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

1986 மற்றும் 2022-க்குப் பிறகு தங்களுடைய மூன்றாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடும் கனடா, இதற்கு முன் விளையாடியிருந்த 7 போட்டிகளிலுமே தோல்வியையே தழுவியிருந்தது. 1986 மற்றும் 2022 உலகக் கோப்பைகளில் ஆடிய 3 போட்டிகளிலுமே அந்த அணி தோற்றிருந்தது. இந்த உலகக் கோப்பையில் அவர்களின் முதல் போட்டியில் போஸ்னியா & ஹெர்செகோவினா அணிக்கெதிராக கனடா டிரா செய்திருந்தது. இந்நிலையில், அவர்களின் முதல் ஃபிஃபா உலகக் கோப்பை வெற்றியே இப்படியொரு பெருவெற்றியாக அமைந்திருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் கனடா அணி பி பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது. அடுத்து சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பும் அந்த அணிக்கு பிரகாசமாகியிருக்கிறது.

கனடாவின் இந்த வரலாற்று வெற்றியில் 6 கோல்கள் மட்டுமல்ல, பல்வேறு பரபரப்பான விஷயங்கள் அரங்கேறின. 2 கத்தார் வீரர்கள் சிவப்பு அட்டைக் காட்டப்பட்டு வெளியேறினார்கள். கனடாவின் நட்சத்திர வீரர் ஜோனதன் டேவிட் ஹாட்ரிக் கோல் அடித்தார். ஒரு கத்தார் வீரர் சுய கோல் அடித்தார். அதேசமயம், கனடா அணியின் முக்கிய வீரர் இஸ்மாயில் கோன் காயம்பட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் இனி இத்தொடரில் பங்கேற்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தப் போட்டியில் கனடாவின் வெற்றி அரங்கேறியது எப்படி? என்னவெல்லாம் நடந்தது?

மாற்றம் தந்த மாற்றங்கள்

போஸ்னியா & ஹெர்செகோவினா அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 1-1 டிரா கண்டிருந்தது கனடா. அந்தப் போட்டியில் அவர்களால் வாய்ப்புகளை கோல்களாக மாற்ற முடியாமல் இருந்தது. இந்நிலையில், இந்தப் போட்டிக்கான அணியில் சில மாற்றங்களை செய்தார் ஜெஸ்ஸி மார்ச். கடந்த போட்டியைத் தொடங்கியிருந்த டனி ஒலுவயேசி மற்றும் லியாம் மில்லர் ஆகியோருக்குப் பதிலாக அனுபவ ஸ்டிரைக்கர் சைல் லாரின் மற்றும் அலி அஹமது ஆகியோரை இந்தப் போட்டியில் ஆரம்பத்திலேயே களமிறக்கினார் மார்ச். கடந்த போட்டியில் மாற்று வீரராக வந்த லாரின் கோலடித்து அணிக்கு 1 புள்ளி பெற்றுக் கொடுத்தார்.

இந்த மாற்றங்களுக்கு 16வது நிமிடத்திலேயே பலனும் கிடைத்தது. வலது விங்கில் இருந்து அலிஸ்டெய்ர் ஜான்ஸ்டன் கொடுத்த கிராஸை, பாக்சுக்குள் நின்றிருந்த ஜோனதன் டேவிட் அதை 'வாலி'-ஆக கோல் நோக்கி அடித்தார். அந்தப் பந்து கத்தார் கோல்கீப்பர் மஹ்முத் அபுனாடாவுக்கு நேராகத்தான் சென்றது. ஆனால், அவர் அதை சரியாகப் பிடிக்காமல் போக, அருகே நின்றிருந்த லாரின் சட்டென்று பாய்ந்து பந்தை கோலாக்கினார்.

அதே உத்வேகத்தோடு தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கனடா. 29வது நிமிடத்தில் பாக்ஸுக்கு வெளியே இருந்து கோல் நோக்கி ஒரு ஷாட் அடித்தார் தஜின் புக்கானன். கத்தார் டிஃபண்டர் மீது பட்டு வந்த பந்தை முதல் வாய்ப்பிலேயே கோல் நோக்கி அடித்தார் ஜோனதன் டேவிட். இம்முறை அவர் அடித்த 'வாலி' (volley) கோல் கீப்பரை ஏமாற்றி கோலானது. ஒரு ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோல்களை கனடா அடிப்பது இதுவே முதல் முறை.

கத்தாருக்கு சிக்கல் தந்த சிவப்பு அட்டைகள்

இரண்டாவது கோல் அடித்த அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே இன்னொரு வாய்ப்பையும் உருவாக்கியது கனடா. நடுகளத்தில் இருந்து கத்தார் டிஃபண்டர்களைத் தாண்டி ஒரு பந்தை அனுப்பினார் கோனே. அதை கோலாக்க ஓடிய புக்கானனைத் தடுத்து கீழே தள்ளினார் கத்தார் டிஃபண்டர் ஹோமம் எலாமின். அதனால் நடுவர் உடனடியாக கத்தாருக்கு பெனால்டி வழங்கினார். எலாமினுக்கு மஞ்சள் அட்டை வழங்கினார். இந்த முடிவை சோதித்த விஏஆர் (VAR), அந்த ஃபவுல் பாக்சுக்கு வெளியே நடந்ததாகச் சொல்லி பெனால்டியை ரத்து செய்தது. அதனால், அது ஃப்ரீ கிக்காக மாறியது.

ஆனால் கத்தாருக்கு அதற்கு மேல் சிக்கல் ஏற்பட்டது. எலாமின் கடைசி வீரராக (last man) இருந்து ஃபவுல் செய்ததால், அவரது மஞ்சள் அட்டையை சிவப்பாகவும் மாற்றியது. அதாவது ஒரு வீரர் கோல் நோக்கி செல்லும்போது, கடைசியாக இருக்கும் எதிரணி வீரரால் (கோல் கீப்பர் அல்லாமல்) ஃபவுல் செய்யப்பட்டால், ஒரு எளிய கோல் வாய்ப்பைத் தடுத்ததாகச் சொல்லி அந்த வீரருக்கு சிவப்பு அட்டைக் காட்டப்படும். அதுதான் விதி. இந்தத் தருணத்தில் எலாமிக்கும் புக்கானனுக்கும் கோல் கம்பத்துக்கும் இடையே எந்த கத்தார் வீரரும் இல்லாத காரணத்தில், எலாமி கடைசி ஆளாகக் கருதப்பட்டு அவருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.

ஒரு ஆள் குறைவாக ஆடிய கத்தார் அணியால் அதன்பின் கனடாவின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. அதன் விளைவாக முதல் பாதி ஸ்டாப்பேஜ் டைமின் மூன்றாவது நிமிடத்தில் (45'+3') மூன்றாவது கோலை அடித்தது கனடா. இது முதல் கோலுக்கு சற்றே வித்தியாசமானதாக அமைந்தது. வலது விங்கில் இருந்து ஜான்ஸ்டன் கொடுத்த கிராஸை லாரின் தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தினார். இம்முறை கோல்கீப்பர் அதை நன்றாகத் தடுத்தாலும் பந்து மீண்டும் கோல் கம்பத்துக்கு அருகிலேயே இருந்தது. சட்டென்று பாய்ந்து அதை கோலுக்குள் தள்ளினார் டேவிட். முதல் பாதியில் 3-0 என்ற பெரிய முன்னிலை பெற்றது கனடா.

இரண்டாவது பாதியில் கத்தாரின் சூழ்நிலை மாறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அது மேலும் மோசமானது. 51வது நிமிடத்தில் கனடா நடுகள வீரர் கோனே பந்தை வசப்படுத்தியிருந்த போது டேக்கிள் செய்தார் மடிபோ. கோனே கீழே விழுந்துவிட நடுவர் ஃபவுல் என அறிவித்தார். ஆனால், இந்த ஃபவுல் சாதாரணமாக இருக்கவில்லை. கோனேவின் காலில் எலும்பு முறிவே ஏற்பட்டது. இது அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனால் மடிபோ சிவப்பு அட்டை பெற்றார். தன்னுடைய டேக்கிளால் கோனேவின் கால் உடைந்ததால் அவருமே அதிர்ச்சியாகத்தான் காட்சியளித்தார். கத்தார் 9 வீரர்களோடு ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

சொந்த ஊர் ரசிகர்கள் அவர் பெயரைப் பாட, ஸ்டிரெச்சர் மூலம் களத்திலிருந்து வெளியேறினார் கோனே. இனி அவர் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்பது மிகவும் கடினம் தான்.

ஹாட்ரிக் கோல் அடித்த ஜோனதன் டேவிட்

9 வீரர்களோடு ஆடிய கத்தாருக்கு எதிராக மேலும் கோல்கள் அடித்தது கனடா. 64வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை நேராக கோல் நோக்கி அடித்தார் நாதன் சலிபா. அதை கத்தார் கோல்கீப்பரால் தடுக்க முடியாமல் போக, 4வது கோலும் வந்தது. கோல் அடித்ததும் கோனேவின் ஜெர்ஸியை ரசிகர்களுக்குக் காட்டி அதைக் கொண்டாடினார் சலிபா.

கனடா வீரர்கள் ஒருபக்கம் மாறிமாறி கோல்கள் அடித்துக்கொண்டிருக்க கத்தார் வீரர் ஒருவரே தன் போஸ்ட்டுக்குள் கோலடித்து நிலைமையை மேலும் மோசமாக்கினார். ஆட்டத்தின் 75வது நிமிடத்தில், பெனால்டி ஏரியாவின் வலது பக்கமிருந்து கோல் நோக்கி அடித்தார் புக்கானன். கத்தார் டிஃபண்டர் மீது பட்டு வெளியேறிய பந்தை இடது பக்கமிருந்து கோல் நோக்கி அடித்தார் ஜேக்கப் ஷாஃபெல்பர்க். அந்தப் பந்து இலக்குக்கு வெளியே செல்வதுபோல் தான் இருந்தது. அதை வெளியேற்ற நினைத்து கத்தார் வீரர் மொகமது ஓங்கி அடிக்க, அவருடைய காலணியின் ஓரத்தில் பட்ட பந்து கோல் போஸ்ட்டுக்குள் விழுந்தது. இந்த சுய கோல் கனடாவின் ஐந்தாவது கோலாக மாறியது.

ஸ்டாப்பேஜ் டைமின் இரண்டாவது நிமிடத்தில் தன்னுடைய ஹாட்ரிக்கை நிறைவு செய்தார் ஜோனதன் டேவிட். சலிபா வெளியே இருந்து அடித்த பந்தை கட்டுக்குள் கொண்டுவந்த அவர், எளிதாக அதை கோலாக மாற்றினார். தன் சொந்த மண்ணில் ஹாட்ரிக் அடித்து அசத்தினார் அவர்.

லியோனல் மெஸ்ஸிக்குப் பிறகு இந்த உலகக் கோப்பையில் ஹாட்ரிக் அடித்த இரண்டாவது வீரர் அவர். அதுமட்டுல்ல, உலகக் கோப்பை வரலாற்றில் ஐரோப்பியர் அல்லது தென் அமெரிக்கர் அல்லாத ஒரு வீரர் ஹாட்ரிக் அடிப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன் அமெரிக்காவின் பெர்ட் பெடெனாட் 1930ல் பராகுவேவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்திருந்தார்.

புள்ளிப் பட்டியலில் முதலிடம்

இறுதியில் 6-0 என மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது கனடா. ஒரு உலகக் கோப்பை போட்டியில், போட்டியை நடத்தும் நாடு 6 கோல்கள் அடிப்பது இதுவே இரண்டாவது முறை. இதற்கு முன் 1978-ல் பெருவுக்கு எதிராக அர்ஜென்டினா 6 கோல்கள் அடித்திருந்தது. அவர்களின் முதல் உலகக் கோப்பை வெற்றியே இப்படி மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.

இந்தப் போட்டியின் முடிவால் கனடா பி பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியது. ஸ்விட்சர்லாந்து, கனடா இரு அணிகளும் 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும் சிறந்த கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் கனடா முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது. அதேசமயம் கத்தார் அணி கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

கத்தார் அணியின் பயிற்சியாளர் ஜூலென் லோபடூகிக்கு இந்த முடிவு மறக்கவேண்டிய ஒன்றாக அமைந்தது. ஏனெனில், ஒரு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் ஃபிஃபா உலகக் கோப்பையில் அடைந்த மிகப் பெரிய தோல்வி இதுதான். பார்சிலோனா போன்ற பெரிய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டிருந்த லோபடூகி இப்படியொரு முடிவை இந்தப் போட்டியில் எதிர்பார்த்திருக்கமாட்டார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு