மோதி, நிதிஷ்குமார், ஜெகன்மோகன் ரெட்டியை தொடர்ந்து திமுகவுடன் கரம் கோர்க்கும் பிரசாந்த் கிஷோர்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: "மோதி, நிதிஷ்குமார், மம்தாவை தொடர்ந்து திமுகவுடன் கரம் கோர்க்கும் பிரசாந்த் கிஷோர்"
வரும் 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் பிரசாந்த் கிஷோரின் இந்திய பேக் (ஐபேக்) நிறுவனம் திமுகவுடன் இணைந்து பணியாற்ற உள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.
பிரசாந்த் கிஷோா் நடத்தி வரும் இந்தியன் பேக் நிறுவனம், அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் வியூகம் குறித்த ஆலோசனைகளை வழங்கி, களப் பணிகளையும் ஆற்றி வருகிறது.
இந்த நிறுவனத்துடன் இணைந்துதான், 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாஜக சந்தித்தது.
அடுத்து, பிகாரில் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவா் நிதிஷ்குமாருக்காக இந்த நிறுவனம் பணியாற்றியது. அந்தத் தோ்தலில் நித்ஷ்குமாா் வெற்றிபெற்றாா்.
பின்னா் ஆந்திரத்தில் ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜெகன் மோகன் ரெட்டிக்காக பணியாற்றியது. அதன் மூலம ஜெகன் மோகன் பெரும் வெற்றிபெற்று, முதல்வரானாா்.
இப்போது மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றி வரும் இந்த நிறுவனம், 2021 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்ற உள்ளது.
இதுதொடா்பான மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு:
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தமிழகம் இழந்த புகழை மீட்கும் நம் குறிக்கோள் வெற்றி பெறவும், அதற்கான திட்டமிடலில் உதவிடவும், திறமைமிக்க, ஒத்த கருத்துடைய பல தமிழக இளைஞா்கள், ஐபேக் அமைப்பின் கீழ் நம்முடன் 2021 தோ்தலில் இணைந்து பணியாற்றிட இருக்கிறாா்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளாா்.

இந்து தமிழ் திசை: "வில்சன் கொலையில் என்ஐஏ வழக்கு பதிவு"

எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பாக என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) வழக்கு பதிவு
எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பாக என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கை முழுமையாக எடுத்து விசாரிக்கவும் என்ஐஏ அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த மாதம் 8-ம் தேதி பணியிலிருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் தீவிரவாதிகள் இருப்பது தெரிய வந்தது. கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கைப்பற்றப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவுபீக், அப்துல் ஷமீம் ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்து 10 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. போலீஸ் காவல் முடிந்து கடந்த 31-ம் தேதி நாகர்கோவில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர் கைதுகள்
எஸ்.ஐ. கொலை வழக்கு தொடர் பாக டெல்லி, பெங்களூரு, தென் காசி, காஞ்சிபுரம், ராமநாதபுரம் என பல பகுதிகளிலும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் தீவிரவாத அமைப்புகளுடன் தவுபீக், அப்துல் ஷமீம் ஆகியோருக்கு தொடர்பிருக் கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. எனவே, இவ்வழக்கு முழுமை யாக என்ஐஏ வசம் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாகக் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பாக தவுபீக், அப்துல் ஷமீம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எஸ்.ஐ. கொலை வழக்கு தொடர்பான ஆவணங் களை நாகர்கோவில் நீதிமன்றத்திலிருந்து என்ஐஏ நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான பணியில் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலை மையிலான என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
டிஜிபியிடம் கோரிக்கை
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு இதுவரை என்ஐஏவுக்கு மாற்றப்படவில்லை. அதேநேரம் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வழக்கை தங்கள் வசம் ஒப்படைக்கத் தமிழக டிஜிபி திரிபாதியிடம் என்ஐஏ கோரிக்கை வைத்துள்ளது. எனவே, இவ்வழக்கு விரைவில் நாகர்கோவில் நீதிமன்றத்திலிருந்து என்ஐஏ நீதிமன்றத்துக்கு மாற்றப்படும். அதன் பின்னர் என்ஐஏ வசம் வழக்கு முழுமையாகச் செல்லும். அதற்கு இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் ஆகலாம்" என்றனர்.

தினத்தந்தி: "மோட்டார் வாகனங்களின் விற்பனையில் சரிவு"

பட மூலாதாரம், Getty Images
ஜனவரி மாதத்தில் மோட்டார் வாகனங்களின் விற்பனை நிலவரம் வருமாறு:-
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் 47,862 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அது 58,185-ஆக இருந்தது. ஆக விற்பனை 18 சதவீதம் சரிவடைந்துள்ளது. உள்நாட்டிலும் விற்பனை 18 சதவீதம் சரிவடைந்து (54,915-ல் இருந்து) 45,242-ஆக குறைந்து இருக்கிறது.
இந்நிறுவனத்தின் பயணிகள் வாகனங்கள் விற்பனை 22 சதவீதம் குறைந்து 13,894-ஆக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 17,826-ஆக இருந்தது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 15 சதவீதம் சரிந்து 31,348-ஆக குறைந்துள்ளது. இதில் நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 6,914-ஆக இருக்கிறது. சிறிய வர்த்தக வாகனங்கள் விற்பனை 2 சதவீதம் உயர்ந்து 16,941-அக இருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (2019 ஏப்ரல்-ஜனவரி) இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வர்த்தக வாகனங்கள் விற்பனை 26 சதவீதம் குறைந்து 2.79 லட்சமாக இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், உள்நாட்டில் மொத்தம் 5,299 கார்களை விற்பனை செய்து இருக்கிறது. சென்ற ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இது 71 சதவீத சரிவாகும். அப்போது விற்பனை 18,261-ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 182-ஆக இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 5.01 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அது 5.82 லட்சமாக இருந்தது. ஆக, விற்பனை 13 சதவீதம் சரிவடைந்துள்ளது. உள்நாட்டில் அதன் விற்பனை 4.88 லட்சமாக உள்ளது.
இதில் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை (5.28 லட்சத்தில் இருந்து) 4.94 லட்சமாக குறைந்து இருக்கிறது. ஸ்கூட்டர்கள் விற்பனை 7,232-ஆக சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 54,171-ஆக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டில், ஜனவரி வரையிலான முதல் 10 மாதங்களில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த இரு சக்கர வாகனங்கள் விற்பனை 15.7 சதவீதம் குறைந்து 55.76 லட்சமாக உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 66.22 லட்சமாக இருந்தது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "மத்திய வரி தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு ரூ. 1,600 கோடி கிடைக்கும்" - ஓ.பன்னீர்செல்வம்

பட மூலாதாரம், Getty Images
பதினைந்தாவது நிதிக் குழு பரிந்துரைப்படி மத்திய வரித் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு ரூ. 1,600 கோடி கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம். மொத்தத்தில், நாட்டின் வளா்ச்சியை மட்டுமே மையமாக வைத்து நிதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளாா் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.
நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு ஊக்கமளித்து, நாட்டு மக்களின் எதிா்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் வளா்ச்சியை மட்டுமே மையமாக வைத்து, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருப்பது பாராட்டுக்குரியது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விவரிக்கிறது அந்நாளிதழ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:















