You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உன்னாவ் வழக்கு: `குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஏழு நாட்களுக்குள் தண்டிக்கப்படாவிட்டால்....' #GroundReport
- எழுதியவர், சமீர் அத்மஜ் மிஸ்ரா
- பதவி, பிபிசி இந்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
உன்னாவ் பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த வாரம் எரித்துக் கொலை செய்யப்பட்டு அவரது இறுதிச் சடங்குகள் நடந்ததைத் தொடர்ந்து, இந்துநகர் கிராமத்தில் நிலவிய பதற்றம் மெல்ல குறையத் தொடங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிப்பதில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மட்டுமே இப்போது அந்தக் கிராமத்தில் உள்ளனர். இதற்கிடையில், பணியில் அலட்சியமாக இருந்ததற்காக பிகார் காவல் நிலையத்தின் தலைமை அதிகாரி உள்பட ஏழு காவல் துறையினர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையில் நீண்ட பேச்சுவார்த்தை மற்றும் இழுபறிக்குப் பிறகு, அருகில் உள்ள கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பலத்த பாதுகாப்புக்கு இடையே, அவருடைய உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், இறந்த பெண்ணின் சகோதரிக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு வீடு தர வேண்டும் என்றும் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கைகள் வைத்தனர்.
அவர்களுடைய அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். குடும்பத்தினரின் நலிந்த பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தேவையாக உள்ள அனைத்து வசதிகளும் அளிக்கப்படும் என்று, அப்போது அங்கிருந்த போலீஸ் ஆணையர் முகேஷ் மேஷ்ராம் தெரிவித்தார். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் அந்தக் குடும்பத்தினருக்கு இரண்டு வீடுகள் என அவர் அறிவித்தார்.
அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அளித்த வாக்குறுதிகளைத் தொடர்ந்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் அங்கே வர வேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிட்டு, இறந்த பெண்ணின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய அவர்கள் ஒப்புக்கொண்டனர். இருந்தபோதிலும், தங்களுக்கு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் ஏழு நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கெடு விதித்துள்ளனர்.
``குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏழு நாட்களுக்குள் தண்டிக்கப்பட்டு, எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், முதல்வரின் இல்லம் எதிரே நான் தீக்குளிப்பேன்'' என்று இறந்தவரின் சகோதரி கூறினார்.
இறந்த பெண்ணின் உடல் சனிக்கிழமை மாலை உன்னாவ் அருகே இந்துநகர் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்ட போது, கிராமமே சோகத்தில் மூழ்கியது. அவருடைய சகோதரிகளில் ஒருவரும், ஒரு சகோதரரும், தாயாரும் உடன் வந்தனர். அவருடைய தந்தையும், உடன்பிறந்த மற்றவர்களும் கிராமத்திலேயே இருந்தனர்.
வீட்டுக்கு வெளியே வைத்திருந்த அந்த உடல் முழுக்க துணியால் மூடி கட்டப்பட்டிருந்த காட்சி, குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, அங்கிருந்த அனைவருக்குமே கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது. இறந்தவரின் முதிய வயது பெற்றோர்கள் ஆறுதல் கூற முடியாத அளவுக்கு அழுது கொண்டிருந்தனர்.
`எங்கள் மகளுக்கு நீதி வழங்குங்கள்...'
இறுதிச் சடங்கிற்குத் தேவையான பொருள்கள் வரத் தொடங்கியதும், பெருமளவில் காவல் துறையினர் குவிக்கப்படுவதும், இரவு நேரத்தில் இறுதிச் சடங்குகளை நடத்த ஆயத்தங்கள் நடப்பதைக் காட்டுவதாக இருந்தன. இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அதற்குத் தயாராக இல்லை.
இதுபற்றி அரசு நிர்வாகத்துக்குத் தெரிய வந்தபோது, அங்கிருந்த மாவட்ட மாஜிஸ்ட்ரேட் தேவேந்திர பாண்டே, இறுதிச் சடங்கை எப்போது நடத்துவது என்பதை அவருடைய குடும்பத்தினர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
அதே சமயத்தில், உடல் கிராமத்துக்கு கொண்டு வரப்படுவதற்கு சற்று முன்னதாக, அமைச்சர் சுவாமி பிரசாத் மௌரியா, உன்னாவ் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கமலாராணி வருண் ஆகியோர், மாவட்ட அதிகாரிகளுடன் கிராமத்துக்கு வந்து, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சத்துக்கான காசோலையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கினர். இருந்தபோதிலும், தங்களுக்குப் பணம் வேண்டாம் என்றும், மகளின் மரணத்துக்கு நீதி தான் வேண்டும் என்றும் அவருடைய தந்தை கூறினார்.
``என் மகளின் உயிரை பணத்தால் ஈடு செய்துவிட முடியாது. அவளுடைய மரணத்துக்கு நீதி வழங்குங்கள். குற்றவாளிகளைத் தண்டியுங்கள்'' என்று அழுகையின் இடையில் அவர் குறிப்பிட்டார்.
அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், குடும்பத்தினர் மற்றும் செய்தியாளர்கள் தவிர, அவருடைய கூரை வேய்ந்த, களிமண்ணால் கட்டிய வீட்டின் எதிரே பெருமளவு கூட்டம் கூடிவிட்டது. உள்ளூர் தலைவர்கள் பலரும், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களும் அங்கிருந்தனர்.
ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்க சுவாமி பிரசாத் மௌரியா கதவின் அருகே சென்றபோது, சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. சுனில் சாஜனும் அவருடைய கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் வந்து சேர்ந்தனர். நஷ்டஈடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். தங்கள் கட்சி ஆட்சியின் போது இதுபோன்ற நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர் நினைவூட்டத் தொடங்கினார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையிடம் காசோலை ஒப்படைக்கப்பட்டது. அவர் அதை வீட்டுக்குள் கொடுத்து அனுப்பிவிட்டார். ஆனால், சமாஜ்வாதி கட்சியினர் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர். அமைச்சர்கள் சென்றுவிட்ட நிலையில், அதிகாரிகளுடன் சமாஜ்வாதி கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்டநேரம் வாக்குவாதம் நடைபெற்றது. இதற்கிடையில், கட்சியின் தொண்டர் ஒருவரை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தவுடன், உன்னாவ் அருகே இந்துநகர் கிராமத்தில் பதற்றம் திடீரென அதிகரித்தது. மாநிலம் முழுக்கவே மக்கள் கோபம் அதிகரித்தது. பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
உன்னாவுக்கு நேரடியாகச் சென்ற பிரியங்கா காந்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தார். அவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசை கடுமையாகச் சாடினார்.
`பிரியங்கா வந்தார், ஆனால்... '
கிராமத்தில் நுழைந்ததும் உள்ள, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் இருந்து சற்று தொலைவில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினரும் நின்றிருந்தனர். அந்த வழியாக எந்த தலைவர் அல்லது வி.ஐ.பி. சென்றாலும், அவர்களை இந்தக் குடும்பத்தினர் அணுகி, தங்கள் உறவினர்கள் அப்பாவிகள் என்று அறிவிக்க வேண்டும் என்றும், சிபிஐ விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
பிரியங்கா காந்தி திரும்பிச் செல்லும்போது, இந்தக் குடும்பத்தினர் அவரை சூழ்ந்து கொண்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருடைய சகோதரியும் அதில் இருந்தார். ``எங்களுடன் பேசுவதற்கு முதலில் பிரியங்கா காந்தி காரில் இருந்து இறங்கினார். ஆனால், நாங்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் என யாரோ அவரிடம் கூறினர். அதைக் கேட்டதும், பிரியங்கா அமைதியாக காருக்கு திரும்பிச் சென்றுவிட்டார். எங்களுடன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை'' என்று அவர் கூறினார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் காலையில் இருந்தே அங்கு நின்றிருந்தனர். யாரெல்லாம் வந்து போகிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கு யார் போனாலும், அவர்களை தடுத்து நிறுத்தி அழுகையுடன் தங்களுடைய சோகங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்களும் தொடர்ந்து ஊடகங்களுக்குப் பேட்டிகள் அளித்தனர். ஆனால், ஊடகத்தினர் தங்களுடன் பேசினாலும், அவற்றை வெளியிடவில்லை என்றும், தங்களுடைய கருத்துகள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் புகார் கூறினர்.
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மௌரியாவுடன் பேசுவதற்கும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் முயன்றனர். ஆனால், அமைச்சர் அவர்களை கண்டுகொள்ளவில்லை. பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி மௌரியா, ``பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ள பெயர்களின்படியான குற்றவாளிகள் மற்றும் இந்த வழக்கின் மற்ற குற்றவாளிகள் உடனடியாக மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்'' என்று கூறினார்.
அதேசமயத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, அங்கு வந்த பார்வையாளர்கள் மற்றும் ஊடகத்தினருடன் பேசுவதில் பிசியாக இருந்தார். சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பிபிசி செய்தியாளரிடம் அவர் பேசினார். ஒரு நாள் முன்னதாகவும் அவர் பிபிசிக்கு பேட்டி அளித்தார். இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றும் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது அவர் குற்றஞ்சாட்டினார்.
சனிக்கிழமை பிபிசி செய்தியாளரிடம் பேசியபோது, ``அரசு எங்களுக்கு நீதி வழங்க விரும்பினால், ஹைதராபாத் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதைப் போல, அதே முறையில் தண்டிக்க வேண்டும். அப்படி செய்தால் நல்லது. இல்லாவிட்டால், எங்கள் வீட்டின் மீது ஒரு குண்டு போட்டு எங்கள் அனைவரையும் கொன்றுவிட வேண்டும் என்று விரும்புகிறோம்'' என்று கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட குடும்பத்தினர் அச்சம்
ஹைதராபாத் வழக்கில் நடந்ததைப் போல இங்கும் செய்துவிடுவார்களோ என குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினரும் அச்சம் கொண்டுள்ளனர்.
இந்துபூரில் 2,500 பேர் வாழ்கின்றனர். அவர்களில் யாரும் இந்தச் சம்பவம் பற்றி எதுவும் கூற முன்வரவில்லை. இறந்த பெண்ணின் வீட்டில் இருந்து சற்று தொலைவில் பழைய கோயில் ஒன்று உள்ளது. அங்கே சிலர் கூடினர். ``தேவையில்லாத பிரச்சினையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதால், யாரும் எதுவும் சொல்ல தயாராக இல்லை'' என்று அவர்களில் ஒருவர் கூறினார்.
கோயிலுக்கு மறுபுறம் சிறிய மளிகைக் கடை வைத்திருக்கும் ராஜேஷ் கடையை மூடத் தொடங்கியிருந்தார். எங்களைப் பார்த்ததும், சற்று காத்திருந்து எங்களுடன் பேசினார்.
``இந்த வழக்கில் யார் செய்தது சரி, யார் பக்கம் தவறு உள்ளது என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் இதுநாள் வரை எங்கள் கிராமத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை என்பது மட்டும் நிச்சயம். காவல் துறையினர் எங்கள் கிராமத்திற்கு வரும் அளவுக்கு எந்தச் சம்பவமும் நடந்தது கிடையாது. நாங்கள் உண்மையைச் சொல்லியாக வேண்டும். எனவே, இவ்வளவு காவல் துறையினரை எங்கள் கிராமத்தினர் இப்போது தான் முதல்முறையாகப் பார்க்கிறார்கள்'' என்று அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: