அமெரிக்க சூப்பர் மார்க்கெட் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு சம்பவ இடத்தில் இருந்த 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயரை போலீஸார் வெளியிடவில்லை.
இது இனவெறி நோக்குடன் தூண்டப்பட்ட வெறுப்புணர்வுக் குற்றமாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டை "வன்முறையான பயங்கரவாத செயல்" என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ அழைக்கிறது.
இந்த சம்பவத்திற்கு காரணமாக சந்தேகிக்கப்படும் நபர், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் சனிக்கிழமை பிற்பகல் சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்தார். இந்த தாக்குதலை அவர் இணையத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய ஒரு கேமராவை பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
"இந்தச் சம்பவத்தை வெறுப்புணர்வு குற்றமாகவும், இன ரீதியாக தூண்டப்பட்ட வன்முறை தீவிரவாதமாகவும் கருதி நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பின் பஃப்பலோ அலுவலகத்தின் பொறுப்பு அதிகாரியான ஸ்டீபன் பெலோங்கியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கருப்பின மக்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியை அடைய, சந்தேக நபர் பல மணி நேரம் பயணம் செய்து வந்ததாக நம்பப்படுகிறது. இந்த சம்பவத்தில் 13 பேர் சுடப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் கருப்பினத்தவர்கள் என்று பஃப்பலோ நகர காவல்துறை ஆணையர் ஜோசப் கிராமக்லியா தெரிவித்தார்.
கவச ஆடையுடன் புகுந்த சந்தேக நபர்

பட மூலாதாரம், Getty Images
காயமடைந்தவர்களில், மூன்று பேர் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் காயங்கள் அவர்களுக்கு எதுவும் ஏற்படவில்லை.
சூப்பர் மார்க்கெட்டில் பாதுகாவலராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர், சந்தேக்கிப்படும் நபரை சுட முயற்சித்தார். ஆனால், அங்கு நடந்த துப்பாக்கி சண்டையில் அவரும் கொல்லப்பட்டார்.

பட மூலாதாரம், EPA
சந்தேக நபர் அதிநவீன துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், கவச ஆடை, தலைக்கவசம் போன்றவற்றை அணிந்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த நபர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று எரி பகுதி மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜான் ஃபிளின் கூறினார். சந்தேக நபர் மீது மேலும் சில குற்றச்சாட்டுகள் சேர்க்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
நேரில் பார்த்தது என்ன?
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த க்ராடி லிவீஸ் என்பவர், "ஒருவர் ராணுவ உடையில், வந்து மக்களை நோக்கி சுடுவதை பார்த்தேன்" என்றார்.
இந்த தாக்குதல் நடந்த சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த ஷோன்னில் ஹாரிஸ், தான் பின் கதவு வழியாக தப்பி செல்லும் போது, கிட்டத்தட்ட 70 முறை துப்பாக்கிச் சூடும் சத்ததை கேட்டாதாக தெரிவித்தார்.
"வார இறுதி நாள் என்பதால் கடையில் கூட்டம் அதிகம் இருந்தது. ஒரு கெட்ட கனவாக உணர்ந்தேன்", என்றார்.
முழக்கமிட்ட சந்தேக நபர்
சிபிஎஸ்ஸிடம் பேசிய ஒரு போலீஸ் வட்டாரம், தாக்குதலின் போது அந்த நபர் இனத்தை அவதூறாகப் பேசியதாகக் குற்றம் சாட்டினார்.
"எந்தவொரு சமூகமும் எதிர்கொள்ள முடியாத மிகவும் மோசமான நாளாக இது உள்ளது. நாங்கள் மிகவும் காயப்பட்டுள்ளோம்," என்று பஃப்பலோ நகர மேயர் பைரன் பிரெள செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இத்தகைய வெறுக்கத்தக்க நபரை எமது சமூகத்தையோ எமது நாட்டையோ பிளவுபடுத்துவதற்கு நாம் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.இதற்கிடையே, துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
"அதிபரும் அவரது மனைவியும் உறவுகளை இழந்தவர்களின் குடும்பங்களுக்காகப் பிரார்த்திக்கிறார்கள்," என்று வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












