டெல்லி தீ விபத்து: தொலைந்த உறவுகளை கண்ணீருடன் தேடும் குடும்பங்கள்
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா, ஜூபைர் அகமது, அலிஸ் டேவீஸ்
- பதவி, பிபிசி செய்திகள்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
டெல்லியில் நான்கு மாடி வணிக கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் பலியாகியுள்ளனர். அந்த வளாகத்தில் சம்பவம் நடந்தபோது இருந்ததாக கருதப்படும் பலரை இன்னும் காணவில்லை.
தீப்பிடித்தபோது 70க்கும் மேற்பட்டோர் உள்ளே இருந்ததாகவும், சிலர் தப்பிக்க ஜன்னல் வழியாக குதித்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.
அலுவலக ஊழியர்களில் பெண்களே பெரும்பான்மையாக இருந்தனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், பாதிக்கப்பட்டிருந்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு வெளியே தகவலுக்காக காத்திருக்கிறார்கள்.

பட மூலாதாரம், EPA
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக அந்த கட்டடத்தில் இயங்கி வந்த சிசிடிவி தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்த இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்து கட்டட உரிமையாளரிடம் பேசவும் போலீசார் முயன்று வருகின்றனர்.

பட மூலாதாரம், AFP/Getty Images
இதற்கிடையே, காணாமல் போன பெண்களில் ஒருவர் 19 வயதான பூஜா. அவரது குடும்பத்தில் வருவாய் ஈட்டும் ஒரே நபர் பூஜா மட்டுமே.
மேற்கு டெல்லியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில், பூஜாவின் 14 வயது சகோதரி மோனி பிபிசியிடம் பேசினார்.
தீ பற்றி கேள்விப்பட்டவுடன் தாயும் தாமும் மருத்துவமனைக்கு ஓடிவந்ததாக மோனி கூறினார்.
"காலை 9 மணிக்கு என் அக்கா அலுவலகம் சென்றிருந்தாள். அவள் அங்கே டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலை செய்தாள். அவளிடம் செல்பேசி இல்லை, அதனால் அவளால் எங்களை அழைக்க முடியவில்லை," என்கிறார் மோனி.

பூஜாவின் தாய் தன் இளைய மகளின் அருகே பேச்சற்றவராக அமைதியாக இருந்தார். ஒருவேளை என் அக்கா உயிருடன் கிடைக்காவிட்டால், எங்களுடைய குடும்பத்தின் கதி என்னாகும் என்று மோனி நம்மிடையே பேசும்போது கேள்வி எழுப்பினார்.
வெள்ளிக்கிழமை சம்பவத்தின்போது அந்த கட்டடத்தில் பூஜாவைப் போல 100க்கும் மேற்பட்டோர் இருந்ததாக நம்பப்படுகிறது.

முஸ்கான் என்ற தமது 21 வயது சகோதரி உள்ளே இருந்து செல்பேசி மூலம் அழைத்ததையடுத்து வெளியே இருந்த அவரது சகோதரர் இஸ்மாயில் எரியும் கட்டடத்திற்குள் ஓடினார்.
"நான் அங்கு சென்றதும் அவள் கட்டடத்துக்குள் சிக்கியிருப்பதைப் பார்த்தேன். பின் கதவு வழியாக தப்பிக்குமாறு அவளிடம் சொன்னேன். ஆனால் எனது குரல் அவளுக்கு கேட்கவில்லை," என்கிறார் இஸ்மாயில்.

பட மூலாதாரம், ANI
இப்போது இஸ்மாயில் மற்றும் அவரது உறவினர்கள் ஒவ்வோர் மருத்துவமனையாக முஸ்கானைத் தேடி வருகிறார்கள். தீயை அணைத்த பிறகு எரிந்த கட்டடத்திற்குள் சென்று பார்த்தார். ஆனால், அங்கு உடைந்த கண்ணாடியில் தன் கையை காயப்படுத்திக் கொண்டு திரும்பினார்.
"நாங்கள் இப்போது அவளைத் தேடி சோர்வாக இருக்கிறோம். எந்த தகவலும் கிடைக்கவில்லை. நாங்கள் அவளைக் காப்பாற்றியிருக்கலாம் என்றே விரும்பினோம்," என்று இஸ்மாயில் கூறினார்.
'தப்பிக்க கதவு இல்லை'
மருத்துவமனையில் காத்திருந்த மற்றொரு பெண் சுனிதா, தனது 20 வயது மகள் சோனத்தை காணவில்லை என்று கூறினார்.

இரண்டாவது மாடியில் பணிபுரியும் தனது மகளை எல்லா இடங்களிலும் தேடியும், அவளுக்கு என்ன நடந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கண்ணீர் விட்டு அழுதார் சுனிதா.
தீ விபத்து ஏற்பட்ட போது அலுவலக ஊழியர்கள் பலர் இரண்டாவது மாடியில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். இங்குதான் பெரும்பாலான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
"கட்டடம் தீப்பிடித்தபோது, தப்பிக்க வழி இல்லை," என்று அவர் கூறினார். "அப்படியிருக்க என் மகளால் எப்படி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்?" என்கிறார் அவர்.
அலுவலகத்தில் இருந்த இரண்டு பொறியாளர்கள், "கட்டடத்தின் ஒரே வழி குப்பைகளால் அடைக்கப்பட்டிருந்தது, மேலும் தீயில் இருந்து தப்பிக்க முதல் மாடியில் இருந்து சிலர் குதிக்க வேண்டியிருந்தது," என்றனர்.

பட மூலாதாரம், AFP/Getty Images
"அங்கும் தீ பரவியதன் காரணமாக புகை நிரம்பியிருந்தது. முதல் மாடி ஜன்னல்களின் கண்ணாடியை உடைத்து தரையில் குதிப்பது மட்டுமே அங்கிருந்தவர்களுக்கு ஒரே வழி," என்றும் அவர்கள் கூறினர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதி, இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு தருவதாக அறிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், "அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிய" உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை பயன்படுத்தப்படும் என்று கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரை ஏழு சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
உள்ளூர் அதிகாரி ஜோகி ராம் ஜெயின் கூறுகையில், "மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்துக்கு தீ பாதுகாப்பு சான்றிதழ் பெறப்படவில்லை என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன," என்றார்.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்






















