You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூடான் தீ விபத்து: "53 இந்தியர்கள் சிக்கியிருந்தனர்" - வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
சூடான் நாட்டில் தீ விபத்து ஏற்பட்ட செராமிக் தொழிற்சாலையில் விபத்து நடந்த சமயத்தில் 53 இந்தியர்கள் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புப் பகுதியில் இருந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை.
சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் 23 பேர் பலியானதாகவும், 130 பேர் காயம் அடைந்ததாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை அரசு தகவல்களைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும் இந்த விபத்தில் சில இந்தியர்களும் அதில் தமிழர்கள் சிலரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இதனிடையே, "விபத்து பற்றி மேலும் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த தொழிற்சாலையில் 60 இந்தியர்கள் வேலை செய்கின்றனர். விபத்து நடந்த பொழுது அவர்களில் 53 பேர் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புப் பகுதியில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது" என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கையை அறிய முயற்சி செய்து வருகிறோம் என இந்தியா தெரிவித்துள்ளது.
"நமது தூதரகம் தொழிற்சாலை நிர்வாகத்துடன் தொடர்பில் உள்ளது. தூதரக ஊழியர்கள் விபத்து நடந்த இடத்தில் உள்ளனர். நாங்கள் சூடான் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து உயிரிழந்தோரை விரைவாக அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம்," என்று ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி உடனடியாக தலையிட்டு காணாமல் போன தமிழர்கள் குறித்து விரைவில் அடையாளம் காணவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "சூடானில் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பலர் உயிரிழந்திருப்பது ஊடகங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியர்கள் சிலரும் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ள நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்; மேலும் மூன்று பேர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரியவந்துள்ளது," என எடப்பாடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தூதரகம் அனைத்து உதவியையும் செய்து வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
இந்த தீ விபத்தின் காரணமாகத் தொழிற்சாலை முழுவதுமாக அழிந்துவிட்டதாக சூடான் அரசு தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காததே இந்த விபத்துக்குக் காரணம் என சூடான் அரசு கூறியதாக தகவல் வெளியிட்டுள்ளது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: