கடத்தப்பட்ட அமெரிக்க விமானம்: 34 ஆண்டுகளுக்குப் பின் சம்பந்தப்பட்டவர் கிரீஸில் கைது மற்றும் பிற செய்திகள்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கடத்தப்பட்ட அமெரிக்க விமானம்: 34 ஆண்டுகளுக்குப் பின் சம்பந்தப்பட்டவர் கைது

அமெரிக்கா விமான கடத்தல் ஒன்றில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவர் 34 ஆண்டுகளுக்குப் பின் கிரீஸில் கைது செய்யப்பட்டுள்ளார். டி.டபுள்யூ.ஏ 847 விமானமானது 1985ஆம் ஆண்டு ஏதென்ஸிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் கடத்தப்பட்டது. இஸ்ரேலிய சிறையில் உள்ள முஸ்லீம் கைதிகளை விடுவிக்கக் கோரி அவர்கள் கோரிக்கை வைத்தனர். விமானத்திலிருந்த பயணிகள் சிலரையும் தாக்கினர்.

இதில் அமெரிக்கக் கப்பற்படையைச் சேர்ந்த ஒருவர் இறந்தார். கைது செய்யப்பட்டவர் லெபனானி என்றும், அவருக்கு வயது 65 வயது என்ற தகவல்கள் மட்டும்தான் வெளியாகி உள்ளது. பிற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

கீழடி அகழாய்வு: 'செங்கல் சூளைக்கு மண் தோண்டும்போது கிடைத்த 2600 ஆண்டு வரலாறு'

கீழடியில் செய்யப்பட்ட அகழ்வாய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தங்கள் ஊரில் 2,600 ஆண்டுகால வரலாறு புதைந்து கிடந்தது குறித்து கீழடியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியையும் வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம் ஒன்றுக்கு உரிமையாளரான கருப்பாயி பிபிசி தமிழிடம் பேசுகையில், "முதலில் இந்த இடம் தென்னந்தோப்பாக இருந்தது. வறட்சியின் காரணமாக மரங்கள் கருகி போனதால் செங்கல் சூளைக்கு மணல் எடுப்பதற்காக தோண்டியபோது முதலில் செங்கல் சுவர் ஒன்று காணப்பட்டது," என்றார்.

பண பரிவர்த்தனை வழக்கில் சிம்பன்சி குரங்குகளை கைப்பற்றிய விநோதம்

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றம் செய்த வழக்கு ஒன்றில், மூன்று சிம்பன்சி குரங்குளையும், நான்கு 'மர்மோசெட்' எனப்படும் தென் அமெரிக்காவை பூர்விகமாகக் கொண்ட நீள வால் குரங்குளையும் இந்திய அமலாக்கத் துறை கையகப்படுத்தியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவை கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் விலங்கியல் பூங்காவில் இருந்தன. அவை மேற்கொண்டு அந்தப் பூங்காவிலேயே வைத்துக்கொள்ள பூங்கா அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

அசோக் லேலண்ட்: 'வேறு வேலை தெரியாது'

பொருளாதார சரிவு காரணமாக சென்னையில் உள்ள முன்னணி கனரக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் 16 நாட்கள் விடுமுறை அளித்துள்ள நிலையில், பல தொழிலாளர்கள் சிரமத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணியாற்றிவரும் சுரேஷ்(42) அக்டோபர் மாதம் தீபாவளிக்கு தனது இரண்டு மகள்களுக்கும் பட்டாசு வாங்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்.

சௌதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல்: படைகளை அனுப்புகிறது அமெரிக்கா

சௌதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில், செப்டம்பர் 14 அன்று நடத்தப்பட்ட தாக்குதல் சௌதி பாதுகாப்பு அமைப்புகளின் குறைகளை வெளிக்காட்டியுள்ள நிலையில், அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இரான் புரட்சிக்கர படை என்று அழைக்கப்படும் இரான் ராணுவத்தின் தளபதி மேஜர் ஜென்ரல் ஹுசேன் சலாமி, "எச்சரிக்கையாக இருங்கள், எந்தத் தவறும் செய்யாதீர்கள்," என்று அமெரிக்கா மற்றும் சௌதி அரேபிய அரசுகளுக்கு கூறியுள்ளார்.

ஆபாசமாக பேசுனாதான் 100 ரூவா தருவாங்க

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :