பிக்பாஸ் 5: அக்‌ஷரா மீதான தங்க கடத்தல் வழக்கு முதல் நமீதா வெளியேற்றம் வரை - ஹைலைட்ஸ்

அக்சரா

பட மூலாதாரம், Akshara

படக்குறிப்பு, அக்‌ஷரா
    • எழுதியவர், ச. அனந்தப்ரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிறது. இந்த முறை பல போட்டியாளர்கள் பரிட்சயமில்லாத புதுமுகங்களாக இருக்கிறார்கள், ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்குமா என பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். ஆனால், இந்த இரண்டு வாரங்களில் சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடந்திருக்கின்றன. போட்டியாளர்கள் குறித்து சில சர்ச்சைகளும் கிளம்பி இருக்கின்றன. பிக்பாஸ் சீசன்5 இதுவரை கடந்து வந்த பாதை என்ன?

பிக்பாஸ் சீசன் 5 கடந்து வந்த பாதை

நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் போட்டியாளர்களுக்கு தரப்பட்ட முதல் டாஸ்க் 'ஒரு கதை சொல்லட்டுமா?'. இதன் மூலம், போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதையையும் பிக்பாஸ் நிகழ்ச்சி தங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும் எதற்காக இந்த நிகழ்ச்சிக்குள் வந்தார்கள் என்பதையும் சொல்ல வேண்டும்.

இந்தப் பகுதியில் திருநங்கை நமீதாவின் கதை போட்டியாளர்கள் மட்டுமல்லாது, பார்வையாளர்கள் பலரையும் கலங்கடித்தது.

நமீதாவின் நெகிழ்ச்சி கதை

குடும்பத்துக்கு ஒரே ஆண் வாரிசாக பிறந்தவர், எட்டு வயதில் தன் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்திருக்கிறார். பெண்கள் அணியும் உடை அணிய வேண்டும், அவர்களைப் போல அலங்காரம் செய்துகொள்ள வேண்டும் என நினைத்தவருக்கு இதை தன் பெற்றோரிடம் சொல்லலாமா என குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் நமீதாவின் மாற்றத்தை கண்டறிந்த அவரது பெற்றோர் நமீதாவை அடிப்பது, மிரட்டுவது, ஆட்களை வைத்து அவரை கண்காணிப்பது, மனநலம் சரியில்லை என்பதாக சொல்லி மருத்துவமனையில் அடைப்பது என மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அவரை துன்புறுத்தி இருக்கிறார்கள்.

இதோடு சமூகத்தின் கேலி வேறு. தொடர் கொடுமைகளை எல்லாம் எதிர்கொண்ட நமீதா ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி பெண்ணாக தனது வாழ்க்கையை தொடங்குகிறார்.

பின்பு மிஸ் சென்னை, மிஸ் தமிழ்நாடு, சினிமாவில் நடிப்பு என அவர் மீது கவனம் குவிகிறது. பிறகு பெற்றோரும் அவரை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்கிறார்கள்.

"என்னுடைய கதை மூலம் பெற்றோர்கள், சமூகம் என அனைவரும் எங்களை புரிந்து கொண்டு ஒதுக்கி வைக்காமல் மதிப்புடன் நடத்தினாலே போதும். எங்களுக்கான கல்வியை அடைந்து பல துறைகளில் வேலை பெற்று எங்கள் சமூகத்தை மாற்றுவோம்" இப்படி நமீதா உணர்ச்சிமயமாக பேசியது போட்டியாளர்கள் அனைவரிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் நமீதாவின் பேச்சை முழுமையாக ஒளிபரப்பியது பிக்பாஸ் குழு.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் நமீதா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் இருக்கும் வரை திருநங்கைகளுக்காக இந்த சமூகத்தை நோக்கி தனது கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்புவேன் எனவும் நமீதா சொல்லியிருந்தார். ஆனால், அதற்கு அடுத்த இரண்டாவது நாளே நிகழ்ச்சியில் இருந்து நமீதா வெளியேறியது யாரும் எதிர்பாராதது. 'சில தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்' என பிக்பாஸில் அறிவிக்கப்பட்டது.

தொற்று காரணமாக சிகிச்சையில் இருக்கிறார் எனவும், நிகழ்ச்சியின் சக போட்டியாளரான தாமரையுடன் இரவு நடந்த உரையாடலில் பிக்பாஸ் விதிகளை நமீதா மீறியதால் வெளியேற்றப்பட்டார் நமீதா எனவும் பல செய்திகள் வெளியானது. ஆனால், இது குறித்து பிக்பாஸ் குழு எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை

நமீதா மீண்டும் நிகழ்ச்சிக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நமீதா தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பி விட்டதாக தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோ பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெயரை மாற்றிய அக்‌ஷரா - என்ன காரணம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு குறிப்பிடத்தகுந்த போட்டியாளர் அக்‌ஷரா ரெட்டி. இவர் உலக அழகி பட்டம் பெற்றவர். கடந்த சில நாட்களாக அக்‌ஷரா மீது 2013ல் நடைபெற்ற கேரள தங்க கடத்தல் விவகாரத்தோடு சம்பந்தப்படுத்திய பழைய செய்திகள் சமூக வலைதளங்களில் உலவி கொண்டிருக்கின்றன.

என்ன வழக்கு?

2013ஆம் வருடம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்தில் இருந்தவர் ஃபைஸ்.

இவருக்கும் மாடல் ஸ்ரவ்யா சுதாகருக்கும் இடையில் அதிக அளவிலான தொலைபேசி உரையாடல்கள் நடந்தது எனவும், ஸ்ரவ்யா அடிக்கடி வெளிநாடு செல்ல ஃபைஸ் உதவினார் எனவும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் ஸ்ரவ்யா சிபிஐ விசாரணைக்கு அப்போது வந்தார்.

மலையாள நடிகை மைதிலி மூலமே ஃபைஸ் தனக்கு அறிமுகம் எனவும், தங்க கடத்தல் வழக்கில் ஃபைஸ் கைதானதும்தான் தனக்கு இதுகுறித்தே தெரியவந்தது என சிபிஐ விசாரணையில் தெரிவித்ததாக ஊடகங்களிடம் அப்போது பேட்டி கொடுத்தார் ஸ்ரவ்யா.

பின்பு, விசாரணையில் ஸ்ரவ்யாவுக்கும் தங்க கடத்தலுக்கும் சம்பந்தமில்லை என சிபிஐ அறிவித்தது.

அதன் பிறகே ஸ்ரவ்யா தனது பெயரை ‌அக்ஷரா ரெட்டி என மாற்றி கொண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் எனவும் தகவல்கள் வெளியாகின.

அக்சரா

பட மூலாதாரம், Vijay Television

வழக்கை மறைத்தது ஏன்?

நடிகை பாவனி தன்னுடைய கணவர் இறந்தது, இரண்டாவது திருமணம் செய்ய இருந்தது , நடிகை யாஷிகா தனது முன்னாள் காதலி எனவும் அவர் மூலமாகவே தனக்கு பிக்பாஸ் வாய்ப்பு வந்தது என நிரூப் கூறியது என போட்டியாளர்கள் பலரும் தங்களது மறுபக்கத்தையும் மறைக்காமல் பிக்பாஸ் மேடையில் கூறியபோது அக்‌ஷரா மட்டும் தன்னை பற்றிய உண்மைகளை ஏன் மறைக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

அதே சமயம் இன்னொரு பக்கம், மாடலிங் போன்ற துறைகளில் இருப்பவர்கள் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்வது வழக்கமான ஒன்றுதான். தங்க கடத்தல் வழக்கில் அக்‌ஷராவுக்கு தொடர்பில்லை என அறிவித்த பின்பும் பழைய செய்தியை இப்போது எடுத்து வருவது அவசியம் இல்லாதது. அதேபோல, அக்‌ஷரா என பெயர் மாற்றியதற்கு என்ன காரணம் என அவரேதான் சொல்ல வேண்டும் என இன்னொரு பக்கம் அக்‌ஷராவின் ரசிகர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் வாதிடுகின்றனர்.

*நாடியா சாங் கதை பொய்யானதா?*

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த மலேசியாவை சேர்ந்த மாடல் நாடியா சாங் கடந்த வாரம் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். 'ஒரு கதை சொல்லட்டுமா?' டாஸ்க்கில் நாடியா தன்னுடைய 15வது வயதில் மலேசியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்ததாகவும், அங்கு ஒரு பிரச்சனையில் சிக்கி போலீஸாரிடம் அடிவாங்கியதாகவும் இதெல்லாம் தன்னுடைய அம்மாவினால்தான் எனவும் தான் கடந்த வந்த பாதை குறித்து பேசினார்.

மலேசியாவில் மட்டுமல்ல எங்கேயும் 18 வயதுக்கு குறைவான சிறுவர், சிறுமிகளை வேலைக்கு எடுக்க மாட்டார்கள் எனவும் போலீஸார் பெண்களை அதுவும் குழந்தைகளை அடிக்க மாட்டார்கள். நாடியா சொல்வதெல்லாம் நம்பும் படியாக இல்லை என பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வரும் மலேசியாவை சேர்ந்த தமிழர் ஒருவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு பகிர்ந்த வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் 5 சுவாரஸ்யத்தை எட்டவில்லை

நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களே ஆன நிலையில் நிகழ்ச்சி குறித்தும் கட்டுரையில் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் பற்றியும் செய்தி வாசிப்பாளரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனின் போட்டியாளருமான ஃபாத்திமா பாபுவிடம் பேசிய போது நிகழ்ச்சி இன்னும் அதன் சுவாரஸ்யத்தை அடையவில்லை என்றார். நமீதாவின் வெளியேற்றம் எதிர்பாராத ஒன்று என்றவர் நிகழ்ச்சியை பார்த்து யார் இருக்க வேண்டும் என ஓட்டு மூலம் முடிவு செய்பவர்கள் பார்வையாளர்கள்தான். அதனால் உண்மையாக காரணத்தை பிக்பாஸ் குழு தெரிவிக்க வேண்டும் என்கிறார். "பிக்பாஸ்ஸில் நமீதா இருந்தவரை நிகழ்ச்சிக்கு நல்ல கண்டெண்ட் கொடுத்தார் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் வெளியேறியதில் பார்வையாளராக எனக்கு வருத்தம்தான். வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நமீதா மீண்டும் வருவார் என்பது நிச்சயமாக நடக்காது என்பதுதான் என் கணிப்பு.

அக்‌ஷராவை பொருத்தவரை தற்போது பேசப்படும் தங்க கடத்தல் வழக்கில் எந்த அளவுக்கு சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பது தெரியாது. போட்டியாளராக ஒருவரை தேர்வு செய்யும் போது அவர் மீது எந்த வழக்கும், சர்ச்சைகளும் இல்லை என்பதை உறுதி செய்த பின்புதான் அனுமதிப்பார்கள். அக்‌ஷரா விஷயத்தில் அவர் குற்றம் இல்லை என நிரூபிக்கப்பட்டிருந்தால் பழைய விஷயத்தை கிளறுவது தேவை இல்லாததுதான்.

பிக்பாஸ் 5
படக்குறிப்பு, ஃபாத்திமா பாபு

இன்னொரு பக்கம் நாடியா சாங் குறித்து தனியாக யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒரு நபர் பேசியிருப்பது நெறிமுறை இல்லாதது. அந்த யூடியூபர் தன்னுடைய தனிப்பட்ட கவனத்திற்காக பேசியிருக்கிறார். இதில் நாடியாவை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது எல்லாம் கேட்கவே அருவருப்பாக இருக்கிறது" என்கிறார்.

மற்ற சீசன்களை விட இந்த ஐந்தாவது சீசன் எப்படி இருக்கிறது என கேட்டபோது, "இரண்டு வாரங்கள் தானே ஆகியிருக்கறது? நிகழ்ச்சியின் ஒலி வடிவம் இன்னும் சரியாக வேண்டும். அதேபோல, எடிட்டிங்கில் பல காட்சிகள் அடுத்தடுத்து ஒன்றாமலேயே இருக்கிறது. யார் எதற்கு ஒரு விஷயத்தை இப்போது பேசி கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதே சிரமமாக இருக்கிறது. அபிஷேக் எதற்கெடுத்தாலும் கத்தி கொண்டிருப்பது பார்வையாளராக என்னை எரிச்சலூட்டுகிறது. வந்த புதிதில் நன்றாக விளையாடிய நிரூப் தன்னுடைய தனித்தன்மையை தற்போது இழந்து கொண்டு இருக்கிறாரோ என தோன்றுகிறது. பிரியங்காவை நிச்சயம் வெளியேற்ற மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்" என்கிறார் ஃபாத்திமா பாபு.

காணொளிக் குறிப்பு, பாலியல் நடவடிக்கைகளுக்கும் ஆபாசப் படம் பார்ப்பதற்கும் என்ன தொடர்பு?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :