பேமிலிமேன் சீசன் 2: தமிழ், தெலுங்கில் வெளியாகாதது ஏன்?

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

பெரும் எதிர் பார்ப்புகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது 'தி ஃபேமிலிமேன்' இணையத்தொடரின் இரண்டாவது சீசன். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தொடரின் வசனங்கள் மற்றும் ஒலி வடிவம் காண கிடைக்கின்றன. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இன்னும் வெளியாகவில்லை. இதற்கு காரணம் தொடரை ஒட்டி எழுந்த சர்ச்சையா அல்லது தொழில்நுட்ப கோளாறா?

'தி ஃபேமிலிமேன்' கதை என்ன?

தேசிய புலனாய்வு பிரிவின் அதிகாரியான ஸ்ரீகாந்த் திவாரி தன்னுடைய வேலையின் சவால்களையும் குடும்பத்தையும் எப்படி சமாளிக்கிறார், இது இரண்டிலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எப்படி கையாள்கிறார் என்பதுதான் இந்த இணையத்தொடரின் ஒன்லைன். முதல் சீசன் வெற்றியடைந்த நிலையில், இரண்டாவது சீசன் கொரோனா பொதுமுடக்கத்தால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலான காத்திருப்பிற்கு பிறகு, நேற்று (ஜூன்3) வெளியாகி இருக்கிறது இதன் இரண்டாவது சீசன்.

இணையத்தில் எழுந்த எதிர்ப்பு

மனோஜ் பாஜ்பாயி, ப்ரியாமணி, ஷரிப் ஹஸ்மி, நீரஜ் மாதவ் உள்ளிட்ட பலரும் முதல் சீசனில் நடித்திருக்க, இரண்டாவது சீசனில் நடிகை சமந்தா உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இரண்டாவது சீசனில் கதையின் பெரும்பகுதி சென்னையில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இதன் ட்ரைலர் வெளியானது. அதில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளை கொண்டு சமூக வலைதளங்களில் சர்ச்சையும், தொடரை வெளியிடக்கூடாது என எதிர்ப்பும் கிளம்பியது.

ட்ரைலர் காட்சிகளின்படி, நடிகை சமந்தா இலங்கையை சேர்ந்த தமிழ்ப் போராளி ராஜி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் இவரது கதாபாத்திரமும், ட்ரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்களும் தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவதாக எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து, இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சமந்தாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இந்த இணையத்தொடர் வெளியீட்டை தடை செய்ய வேண்டும் என கோரியும் சமூக வலைதளங்களில் பிரசாரம் டிரெண்ட் ஆனது.

இதுமட்டுமில்லாமல் வைகோ, சீமான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இதன் வெளியீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவிக்க பிரச்சனை இன்னும் தீவிரமானது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பாக, தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், 'இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்த தொடர் வெளியாவதை தடை செய்ய வேண்டும்' என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக மனோ தங்கராஜிடம் பிபிசி தமிழுக்காக பேசியபோது, 'தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாகவும், வரலாற்றை திரிப்பதுமாக இருக்கும் இதன் ட்ரைலர் காட்சிகள் வெளியானதற்கு பின்பு நிச்சயம் சர்ச்சைகளை கிளப்பும். அதுபோன்ற சலனங்கள் உருவாவதையும், தமிழர்களின் உணர்வுகள் பாதிக்கப்படுவதையும் தமிழ்நாடு அரசு விரும்பவில்லை. அதற்கே இந்த தடை' என கூறியிருந்தார்.

படக்குழு தரப்பின் விளக்கம் என்ன?

'ட்ரைலர் காட்சிகளை வைத்து மட்டுமே முடிவெடுக்க வேண்டாம். தொடர் வெளியானதும் முழுதாக பாருங்கள். எந்த இடத்திலும் தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தவில்லை' என இதன் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே சமூகவலைதளங்களில் தெரிவித்திருந்தனர்.

மேலும், நடிகை ப்ரியாமணியிடம் 'தி ஃபேமிலி மேன்' தொடருக்காக பிபிசி தமிழுக்காகப் பேசினோம். சர்ச்சை தொடர்பான கேள்வி எழுப்பியபோது, 'சர்ச்சை தொடர்பான கேள்விகளுக்கு பதில் சொல்ல எங்களுக்கு அனுமதியில்லை' என கூறியிருந்தார். இது தொடர்பாக, இயக்குநர்கள் மற்றும் நடிகை சமந்தா கருத்துக்காகத் தொடர்பு கொண்டபோதும், 'இப்போதுள்ள சர்ச்சை காரணமாக கருத்துத் தெரிவிப்பதில் சிரமம் உள்ளது. தொடர் வெளியானதும் அமேசான் வழிகாட்டுதலின்படி கருத்துத் தெரிவிப்பதா இல்லையா என்பது முடிவு செய்யப்படும்' எனவும் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, 'ட்ரைலர் காட்சிகளை கொண்டே இணையத் தொடருக்கு தடை என்பது படைப்புரிமைக்கு எதிரானது' என்ற கருத்தையும் சமூக வலைதளங்களில் காண முடிந்தது.

தமிழ், தெலுங்கில் வெளியாகாததற்கு என்ன காரணம்?

இந்த நிலையில்தான் பெரும் எதிர் பார்ப்புகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நேற்று (ஜூன்3) அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது 'தி ஃபேமிலி மேன்'. எதிர்பார்த்தது போலவே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவில்லை.

இரண்டாவது சீசன் கதையின் பெரும்பகுதி சென்னையில் நடப்பதாலும், சமந்தா உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள் நடித்திருப்பதாலும் தமிழ், தெலுங்கிலும் வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. ஆனால், இந்தி ஒலி வடிவம் மற்றும் ஆங்கிலத்தில் வசனங்கள் (Subtitles & Audio) மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது.

'இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிடப்படும் என முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது நடக்காதது ஏன்? இது குறித்தும் முன்பே அமேசான் அதிகாரபூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லையே?' என ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 'தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியாவது குறித்த முடிவு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்' என அமேசான் ட்விட்டர் பக்கத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பா அல்லது தொழில்நுட்ப கோளாறா?

இதற்கு, தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்புகள் காரணமாகத்தான் தமிழில் தாமதமாகிறது என்ற பேச்சுகள் இணையத்தில் எழும் அதே நேரம், அமேசான் ப்ரைம் தளத்தின் தொழில்நுட்பத்தில் கோளாறு எனவும் பேச்சுகள் இணையத்தில் உலவுகின்றன.

தமிழ்நாடு அரசின் தடை கோரிக்கைக்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்காமல் இருப்பதால் தமிழ் வடிவம் வெளியாகுமா அல்லது எப்போது வெளியாகும் என்பது விரைவில் அமேசான் தரப்பில் இருந்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த சர்ச்சை தொடர்பாகப் பேச தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜை முன்பு தொடர்பு கொண்டபோது, 'மத்திய அரசு, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை பரிசீலிக்காமல் போனால், தமிழ்நாடு முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவை தெரியப்படுத்துவோம்' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :