You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருப்பூரில் இயங்கும் 'அறிவியல்பூர்வ மாட்டுச் சந்தை' - வீடியோ
காங்கேயம் இன காளைகள் விற்பதற்காக பிரத்யேகமாகவும் நவீனமாகவும் திருப்பூரில் இயங்கி வருகிறது ஒரு 'அறிவியல்பூர்வ மாட்டுச் சந்தை'.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பழையகோட்டையில் ஞாயிறு தோறும் இயங்கும் பிரத்யேகமான காங்கேயம் இன நாட்டு மாடு சந்தையில் அதிநவீன தொழில்நுட்ப வசதி ஒன்று உள்ளது.
பொதுவாக சந்தைகளில் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் வழிதேடி வந்து வண்டிகட்டிக் கொண்டு நாட்டு மாட்டு இனங்களைப் பார்த்து பார்த்து வாங்கிச் செல்வார்கள். பெரும் சேமிப்பும் அதில் கரையும். மாட்டை விற்கும் போது, இது சினைமாடு எனச் சொல்லி விற்றுவிடுவார்கள். பின், மாடு சினையே ஆகவில்லை என்பதையும், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மாட்டை வாங்கியவர் மனம் நொந்து போவார். பணத்தை மீட்கலாம் எனப் பார்த்தால், விற்றவர் கொடுத்த அலைபேசி எண்ணோ தொடர்பிலேயே இருக்காது.
இதைத் தடுக்கச் சந்தையிலேயே அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் வசதியும், அதைக் கண்காணித்து உறுதி கூற கால்நடை மருத்துவரும் உள்ளனர்.
மாடு உண்மையிலேயே சினை தானா? சினையின் ஆரோக்கியம் எப்படி உள்ளது? இதயத் துடிப்பு உள்ளதா? ரத்த ஓட்டம் உள்ளதா? எப்போது கன்று ஈனும்? என தெரிந்துகொண்டே வாங்கிச் செல்லலாம்.
விற்பவரின் உண்மையான முகவரியோடு ரசீதும் கொடுப்பதால் மோசடிக்கும் வாய்ப்பில்லை. மாட்டை ஏற்றிச் செல்ல வாகன வசதியும் உள்ளது. மாடு வாங்கியபின் பாய்ச்சல் குணமோ, பால் கறக்க நிற்காமலோ இருந்தால் பைசல் செய்ய பணியாட்களும் இங்கு உள்ளனர்.
காலை 11 மணி வரை விவசாயிகள் மட்டுமே நாட்டு மாடு வாங்க முடியும். 11 மணிக்கு மேல் மாட்டை வளர்ப்பதற்காக மட்டுமே வாங்கி விற்கும் வியாபாரிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
தயாரிப்பு: கலைவாணி பன்னீர்செல்வம், பிபிசி தமிழுக்காக
ஒளிப்பதிவும், படத்தொகுப்பும்: மதன் பிரசாத், பிபிசி தமிழுக்காக
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்