You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியில் தடியடியை மீறி திரண்ட இளைஞர் கூட்டம் மோதி அரசுக்கு சொல்லும் சேதி
- எழுதியவர், பிரவீன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
திங்கட்கிழமை, நாட்டின் தலைநகரின் மையப்பகுதியான மத்திய டெல்லியில் நாள் முழுவதும் பெரும் குழப்பமும் கொந்தளிப்பும் நிலவியது.
கன்னாட் பிளேஸ், ஜன்பத், அல்லது ஜந்தர் மந்தர் என எந்தப் பகுதியாக இருந்தாலும், அங்கு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் கூட்டம் மட்டுமே பரவலாகக் காணப்பட்டது.
பல இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சாலைகள் மூடப்பட்டிருந்த போதிலும், அனைத்து சிரமங்களையும் கடந்து அவர்கள் திங்கள் காலை முதலே ஜந்தர் மந்தரை அடைய முயன்று கொண்டிருந்தனர்.
தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சுகளுக்கு மத்தியிலும், இந்த இளைஞர்கள் காலையிலிருந்து இரவு வரை ஜந்தர் மந்தரில் தொடர்ந்து கூடியிருந்தனர்.
கல்வி முறையில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் எனக் கோரியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரியும், காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் கடந்த ஒரு மாதமாக டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சில நாட்களிலேயே சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான ஆதரவாளர்களைப் பெற்ற இந்தக் காக்ரோச் ஜனதா கட்சி, களத்தில் எந்த அளவிற்கு வலுவாக இருக்கிறது என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.
ஆனால் திங்களன்று அதற்கான பதில் கிடைத்தது.
கல்லூரி மாணவர்களும், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களும் பெருமளவில் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் கேள்விகளுக்கு அரசு தொடர்ந்து மௌனம் சாதிப்பது இனி முடியாத காரியம் என்பதை இதன் மூலம் அவர்கள் நிரூபித்துள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக இந்த இளைஞர் இயக்கத்தைச் செய்தியாக வெளியிட்டு வரும் சுயாதீன பத்திரிகையாளர் ஸ்மிதா சர்மா, "வெறும் கல்வி முறை மட்டும் பிரச்னை அல்ல, விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை போன்ற பிற முக்கியப் பிரச்னைகளையும் அரசால் இனி புறக்கணிக்க முடியாது என்ற வலுவான செய்தியை இந்த மாணவர்கள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக" கருதுகிறார்.
'இளைஞர்கள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை'
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி திங்களன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல காக்ரோச் ஜனதா கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அழைப்பை ஏற்று, ஏராளமான இளைஞர்கள் டெல்லி வீதிகளில் இறங்கிப் போராடினர்.
ஆரம்பத்தில் ஏற்பட்ட அமளிக்கு மத்தியில், அரசு தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக சிஜேபி கூறியது.
அதேநேரத்தில், போராட்டக்காரர்களிடமிருந்து தான் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கை வந்தது என்று மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா இந்த சந்திப்பின் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
"இன்று காலை, முதன்முறையாக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த போராட்டக்காரர்களிடம் இருந்து கோரிக்கை வந்தது, காலை 11:50 மணி முதல் எங்கள் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று அதில் எழுதியிருந்தார்.
"இந்த சந்திப்பு மிகவும் சுமூகமான சூழலில் நடைபெற்றது. அவர்களின் பிரதிநிதிகளுடன் விரிவான வாய்மொழி கலந்துரையாடல் நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணியளவில் அவர்கள் என்னிடம் ஒரு எழுத்துப்பூர்வ மனுவை அளித்தனர். போராட்டக்காரர்கள் அனைவரும் தங்களது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, இயல்பு நிலை திரும்ப நிர்வாகத்திற்கு உதவ வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன்"என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
பெரிய அளவில் இளைஞர்களின் போராட்டம் நடைபெற்ற போதிலும், சிஜேபி-யின் முதன்மை கோரிக்கைகளை மத்திய அரசு இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதற்கிடையில், இளைஞர்கள் வீதிகளில் இறங்கிப் போராடியதால் என்ன சாதித்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
இந்த இயக்கத்தைக் கூர்ந்து கவனித்து வரும் பத்திரிகையாளர்கள் மற்றும் வல்லுநர்களிடமிருந்து இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறிய நாங்கள் முயன்றுள்ளோம்.
இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் திங்கள்கிழமை ஜந்தர் மந்தரில் பேசுகையில், "இன்று ஜந்தர் மந்தரில் நான் காணும் இந்தப் புதிய தலைமுறை எனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த இளைஞர்கள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை. நியாயமான கல்வி முறைக்காகவும், வேலைவாய்ப்பை வழங்கும் பொருளாதாரத்திற்காகவும், மக்களுக்குப் பதிலளிக்கும் கடமை கொண்ட அரசியலுக்காகவும் அவர்கள் போராடி வருகிறார்கள்" என்று கூறினார்.
எச்சரிக்கை மணியா?
இந்தக் கருத்தை வலியுறுத்திப் பேசிய ஸ்மிதா சர்மா, 'திங்கள்கிழமை போராட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான இளைஞர்கள் வீதியில் இறங்குவார்கள் என்று யாருமே எதிர்பார்க்காதது தான்' என்றார்.
ஸ்மிதா ஷர்மாவும் திங்கள்கிழமை நடந்த போராட்டத்தை ஒரு தலைவரற்ற இயக்கமாகப் பார்க்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. சிஜேபி தலைவர்களால் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க முடியவில்லை. மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. தகவல்களைக் கொண்டு சேர்ப்பது கடினமாக இருந்தது.
இந்தப் போராட்டம் கல்வியைப் பற்றியதுதான், ஆனால் இந்த விஷயம் விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் வாக்குத் திருட்டு வரை தீவிரமடைந்தது. இதுகுறித்து 12-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் விவாதித்தனர். இதுவே மிகவும் தனித்துவமான ஒன்றாக இருந்தது" என்றார்.
இந்த இயக்கத்தின் மூலம் எதிர்காலத்தில் அரசுக்கு எழும் சவால் எந்த அளவிற்கு அதிகரிக்கும் என்ற கேள்விக்கு ஸ்மிதா சர்மா பதில் அளிக்கையில், "இந்தப் போராட்டத்திலிருந்து அரசு எந்த ஒரு பாடத்தையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அது மிகப்பெரிய தவறாக இருக்கும். ஏனென்றால் இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி செல்வதில் தீவிரமாக இருந்ததை தெளிவுபடுத்திவிட்டனர். சிஜேபி தலைவர்களே அவர்களை நாடாளுமன்றம் நோக்கிச் செல்வதைத் தடுத்திருந்தாலும், ஜந்தர் மந்தரில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றிருப்பார்கள்" என்றார்.
"அவர்கள் மீது தடியடி நடத்தி, பலப்பிரயோகம் செய்யப்பட்டது. அதையும் மீறி, அவர்கள் மீண்டும் திரும்பி வந்து அவர்களை எதிர்கொண்டனர். இது அரசுக்கு ஒரு தீவிரமான எச்சரிக்கையாகும். அதாவது ஒருவித ஏமாற்றமும் விரக்தியும் நிலவுகிறது, அதைக் கேட்காவிட்டால், இன்று ஒரு பலூனைப் போல வெடித்தது, வரும் நாட்களிலும் மீண்டும் வெடிக்கக்கூடும்"என்றும் குறிப்பிட்டார்.
ஸ்மிதா சர்மாவின் கருத்தை வலியுறுத்தி பேசும் மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி, இளைஞர்களின் இந்த ஆர்ப்பாட்டம் வரும் நாட்களில் மோதி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தப் போகிறது என்கிறார்.
இதுகுறித்துப் பேசிய அவர், "இதுவரை இந்த நாட்டு மக்களை எளிதாகக் கையாண்டு விடலாம் என்று மோதி அரசு கொண்டிருந்த மாயை உடைக்கப்பட்டதுதான் இந்தப் போராட்டத்தின் மிகப்பெரிய சாதனை. மக்கள் வந்து அமைதியாகக் கலைந்து செல்லவில்லை. நாட்டின் ஜனநாயகம் வலிமையானது, அதன் வேர்கள் உறுதியானவை என்பதை அவர்கள் நிருபித்துள்ளனர். அதை அரசால் பலவீனப்படுத்த முடியாது"என்றார்.
"இளைஞர்கள் எந்தவொரு நாட்டிற்கும், நிகழ்காலத்தில் மட்டுமல்லாமல் எதிர்காலத்திலும், அரசாங்கங்களைத் தேர்ந்தெடுப்பதிலோ அல்லது அரசாங்க மாற்றத்திலோ, மிகவும் முக்கியமான மற்றும் தீர்க்கமான பங்கை வகிக்கின்றனர்"
"இது அரசுக்கு ஓர் எச்சரிக்கை மணி. அரசால் மக்களை நீண்ட காலத்திற்குப் புறக்கணிக்க முடியாது. அரசு தனது கடமையை உணர்ந்து பொறுப்பேற்க வேண்டும், இல்லையெனில் மக்கள் வீதிக்கு வரத் தயங்க மாட்டார்கள். இதன் தாக்கம் நீண்ட காலத்திற்கு எதிரொலிக்கும். நமது ஜனநாயகம் நமக்கு ஒரு தானமாக வழங்கப்படவில்லை. நாம் அதைப் போராடிப் பெற்றோம். டெல்லி வீதிகளில் காணப்பட்டதும் நமது ஜனநாயகத்தின் அந்த சக்தி தான்"எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஹேமந்த் அத்ரி, "இந்து-முஸ்லிம் என்ற பெயரில் தனது அரசியலை நடத்த முடியும் என அரசு நினைக்கிறது. ஆனால் அது நடக்காது. மக்கள் மீண்டும் தங்களின் அடிப்படைப் பிரச்னைகளின் பக்கம் திரும்பி வருகிறார்கள். இளைஞர்கள் இந்த வழியில் முன்வந்து நிற்பது அரசுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணி. அரசு தனது செயல்பாடுகளைச் சீரமைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு