சிஜேபி போராட்டத்தில் படுகாயமடைந்த 21 வயது மாணவி - குடும்பத்தினர் கூறியது என்ன?

    • எழுதியவர், சுப் ராணா
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) நடத்திய நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின்போது காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையில் 21 வயது மாணவி ஒருவர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற போராட்டப் பேரணியின் போது, காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் தடியடி நடத்தி கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு ராம் மனோகர் லோகியா மற்றும் லேடி ஹார்டிங் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

போராட்டத்தின் போது காயமடைந்த மாணவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், 70-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

மேலும், டெல்லி போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரைச் சேர்ந்த மொத்தம் 118 பேர் இந்தப் போராட்டத்தின் போது காயமடைந்ததாகவும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்தனர்.

யார் அந்த 21 வயது மாணவி?

செவ்வாய்க்கிழமை மாலை, அந்த மாணவியின் தந்தையும் உறவினர்களும் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு வந்தனர். மாணவியின் சகோதரர், தனது சகோதரியின் உடல்நிலை மேம்பட்ட பிறகே பேசுவேன் என்று கூறினார்.

"என் சகோதரியின் முகம் முழுவதும் நீல நிறமாக மாறியுள்ளது. கூட்ட நெரிசலில் மக்கள் அவள் மீது ஏறிச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் இன்னும் எதையும் தெளிவாகச் சொல்லவில்லை. அவள் பேசவும் இல்லை. என் தங்கை இன்னும் வாழ்க்கையில் எதையும் பார்த்ததில்லை. குடும்பத்தில் மூத்த மகன் நான். இது எவ்வளவு வேதனையாக இருக்கிறது என்பதை யாராலும் கற்பனை செய்ய முடியாது." என்றார் அவர்.

அந்த மாணவியின் தாய், தனது 21 வயது மகள் கணினி அறிவியல் மாணவி என்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக படிப்புக்காக வீட்டை விட்டு வெளியே வசித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

"என் மகள் விரைவில் குணமடைய வேண்டும் என்று மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள். இந்த நிலையில் அவளை என்னால் பார்க்க முடியவில்லை. நேற்று என் கண் முன்னே அவளுக்கு மூன்று பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது," என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் அந்த குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தனர்.

"எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம். என் மகள் குணமடைய வேண்டும். நாங்கள் மிகவும் கவலையில் இருக்கிறோம்," என்று மாணவியின் தாய் கூறினார்.

அவருடன் வந்திருந்த அவரது இரு மகன்களும், அந்த மாணவி திங்கள்கிழமை மாலை முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால், மாணவியின் பெயரையோ குடும்ப விவரங்களையோ வெளியிட அவர்கள் மறுத்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு பாதுகாப்புப் பணியாளர்கள் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கருத்து கேட்க முயற்சிக்கப்பட்டபோதும், அவர்கள் பதிலளிக்க மறுத்தனர்.

இதற்கிடையில், சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இடைப்பட்ட இரவில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தடியடியில் காயமடைந்த ஒரு மாணவி ஆபத்தான நிலையில் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்?

ராம் மனோகர் லோகியா மருத்துவமனையும் லேடி ஹார்டிங் மருத்துவமனையும், காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.

எனினும், மருத்துவமனை நிர்வாக ஊழியர்கள் சிலர் பெயர் வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தற்போது மருத்துவமனையில் போராட்டத்தில் காயமடைந்தவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதற்கிடையில், மருத்துவமனை நிர்வாகத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர், இந்த விவகாரம் குறித்து யாரிடமும் பேசக் கூடாது என்று தமக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பெயர் வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில் கூறினார்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு