You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய்க்கு போட்டியாக தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? நிபுணர்கள் பார்வை
நடிகர் தனுஷின் சமீபத்திய செயல்பாடுகள், பேச்சு மற்றும் அவரைப் பற்றி வெளிவந்த கருத்துகள் ஆகியவை அவரின் அரசியல் வருகைக்கான "அறிகுறியா" என சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இதனிடையே, கோவை மாவட்டத்தில் தொகுதிவாரியாக தனுஷ் நற்பணி மன்ற உறுப்பினர்கள் சேர்க்கை துவங்கியிருப்பது இந்த விவாதத்தை வலுப்படுத்தியுள்ளது.
ஆனால், இது வழக்கமாக நடக்கும் விஷயம்தான் என்றும், முன்பு மாவட்ட வாரியாக நடந்ததை தற்போது தொகுதிவாரியாக சேர்ப்பதாகவும் கூறுகிறார் திரைப்பட இயக்குநரும், அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கத்தின் தலைவருமான சுப்பிரமணியம் சிவா.
அரசியலில் வருவது பற்றி தனுஷ்தான் முடிவெடுப்பார் என்றும் அவர் பிபிசியிடம் கூறினார். இதுபற்றி தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் பேசிய போது, ''நீங்கள் சொல்லித்தான் இப்படி ஒரு தகவல் பரவிக்கொண்டிருப்பதே எனக்குத் தெரிகிறது.'' என்றார்.
தொடர் செயல்பாடுகள்
கடந்த ஜூலை 28ஆம் தேதி தனுஷ் தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். அப்போது ரசிகர்களிடம் பேசும் போது சில விஷயங்களை அவர் குறிப்பிட்டார்.
அப்போது பேசிய தனுஷ், ''நம் ஒற்றுமைக்கு பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் இருக்கிறது. பிறந்தநாளுக்கு வந்தோம், புகைப்படம் எடுத்தோம் என்றில்லாமல் உங்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் உதவுங்கள். நலத்திட்ட உதவிகளைச் செய்யுங்கள். அதற்கு எல்லோரும் கைகோர்க்க வேண்டும். அதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.'' என்று பேசியிருந்தார்.
அவருடைய இந்த பேச்சு, சமூக ஊடகங்களில் பரவி தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என்ற விவாதத்துக்கு வித்திட்டது.
நீண்ட காலமாக பயன்பாட்டிலுள்ள ரசிகர் மன்றக் கொடியை அவர் மேடையில் வெளியிட்டதும், திருவள்ளூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கியதும், சென்னையில் தான் படித்த பள்ளிக்கு 3 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டிக்கொடுத்ததும், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தது போன்ற செயல்களிலும் தனுஷ் ஈடுபட்டார்.
தற்போது தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'ஓம்' திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்தடுத்து அவருடைய புதிய படங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக, ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு தனுஷ் தலைமை மன்றம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிய மன்றங்கள் தொடங்கவும், உறுப்பினர்களை சேர்க்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தலைவர் சுப்ரமணியம் சிவா, செயலாளர் ராஜா ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய 5 தொகுதிகளில் தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கம் தொடங்கவும், உறுப்பினர்களை சேர்க்கவும் கோவை மாவட்டத் தலைவர் சங்கரையும், கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதி ஆகியவற்றில் தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கம் தொடங்கவும் உறுப்பினர்களை சேர்க்கவும் கோவை தெற்கு மாவட்டத்தலைவர் சதீஸ்குமாரையும் தொடர்பு கொள்ள வேண்டும். தனுஷ் வழியில் ஒன்றுபட்டு அனைவரும் செயல்படுவோம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை பொதுவெளியில் வெளியான பின்பு, தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என்ற விவாதங்கள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் எழுந்தன. சில ஊர்களில் தனுஷ் ரசிகர்கள் பிரமாண்ட சுவரொட்டிகளையும் ஒட்டி, மக்கள் மத்தியில் இதை பேசுபொருளாக மாற்றினர்.
இதுகுறித்து திரைப்பட இயக்குநரும், அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் தலைவருமான சுப்பிரமணியம் சிவாவிடம் பிபிசி தமிழ் பேசியது.
அதுபற்றி விளக்கிய அவர், ''இது வழக்கமாக நடக்கின்ற நடவடிக்கைதான். முன்பு மாவட்ட வாரியாக நற்பணி மன்றங்கள் தொடங்குவது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது போன்ற வேலைகளைச் செய்து வந்தோம். இப்போது அதை தொகுதிவாரியாக மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். அந்த பணியை கோவையில் துவங்கியிருக்கிறோம்.'' என்றார்.
மாவட்ட வாரியாக நடந்த பணியை சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக மேற்கொள்வது ஏன், தனுஷ் அரசியலுக்கு வருவதாக யூகம் குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, ''ரசிகர்கள்தான் இந்த கோரிக்கையை முன் வைத்தார்கள். அது மட்டுமின்றி, தொகுதி வாரியாக இவ்வளவு பேர் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று பொதுவான தகவலை நிர்வாகிகள் பகிர்வார்கள். அதனால் ஒரு தொகுதிக்கு எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை அறிவதற்குமான முயற்சிதான் இது.'' என்றார்.
மற்றபடி இதற்காக சிறப்புப் படிவங்கள் என்று எதையும் தயார் செய்யவில்லை என்று கூறிய சுப்ரமணியம் சிவா, வழக்கமான படிவங்களில் பெயர், முகவரி, ஆதார் எண், ரத்த வகை, கல்வித்தகுதி, தொழில் போன்ற தகவல்கள்தான் சேகரிக்கப்படுகின்றன என்றார்.
தனுஷ் ரசிகர் மன்றங்கள் துவங்கி, 20 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதாகக் கூறிய அவர், அன்னதானம், ரத்ததானம், ஏழை மாணவர்களுக்கு உதவுவது, கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது போன்றவற்றை நற்பணி மன்றங்கள் செய்து வருவதாகக் கூறினார். தமிழகம் முழுவதும் 52 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, 52 தலைமை மன்றங்கள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு தலைமை மன்றத்தின் கீழும் 25 முதல் 30 நற்பணி மன்றங்கள் செயல்படுவதாகவும் அவர் தகவல் பகிர்ந்தார்.
''இதுவரை பதிவு செய்திருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை மட்டுமே 10 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும். மன்றத்தில் உறுப்பினராக இல்லாமல் பலர் ரசிகர்களாக இருப்பார்கள். அவர்களைப் போன்றவர்களையும் மன்றத்தில் இணைக்கும் முயற்சியாகத்தான் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த நடவடிக்கை, அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது. நான் தலைவராக இருந்தாலும் முக்கிய முடிவுகளை தனுஷ்தான் எடுப்பார். அரசியலுக்கு வருவதும் அவர் முடிவுதான்.'' என்றார் சுப்ரமணியம் சிவா.
நடிகர்களின் புதிய நம்பிக்கை
தனுஷின் இந்த நடவடிக்கைகள், கண்டிப்பாக அரசியலுக்கான நகர்வுதான் என்கிறார், எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சுகுணா திவாகர். "விஜய்தான் முதலில் நலத்திட்ட உதவிகளை தொகுதிவாரியாகச் செய்யத் துவங்கினார், அதையே தனுஷ் பின்பற்றுவதால் இது அரசியல் நகர்வுக்கான முயற்சிதான்" என்கிறார் அவர். தமிழ்ச்சினிமா மற்றும் திராவிட இயக்க அரசியல் குறித்து பல்வேறு நூல்களை எழுதியுள்ள சுகுணா திவாகர், சில திரைப்படங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.
பிபிசியிடம் பேசிய சுகுணா திவாகர், ''எம்ஜிஆருக்குப் பின் ஜெயலலிதாவைத் தவிர, அரசியல் கட்சி துவங்கிய சிவாஜி, பாக்கியராஜ், ராஜேந்தர், சரத்குமார், கமல் என யாராலும் ஜெயிக்க முடியவில்லை. இதனால் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருவதற்கு நடிகர்கள் தயங்கிய காலம் இருந்தது. ஜெயலலிதா, கருணாநிதிக்குப் பின் தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாகக் கூறியே, ரஜினியை அரசியலுக்கு இழுத்தனர். அவரும் வரவில்லை. ஆனால் விஜய் ஜெயித்தபின், சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து ஜெயிக்கலாம் என்பது மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் உள்ளிட்ட பலரும் இனி அரசியலுக்கு வரலாம்.'' என்றார்.
''அது மட்டுமின்றி முதல் தேர்தலிலேயே தவெக வென்றதால், பெரிய கட்சிக்கு கட்டமைப்பு, களப்பணி, தொடர் உழைப்பு எதுவும் தேவையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. சமூக ஊடகங்கள் வாயிலாகவே பரப்புரை செய்து ஜெயிக்கலாம் என்ற நம்பிக்கையில், சின்னச்சின்ன நற்பணிகளைச் செய்து, அதைப் பெரியளவில் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யத்துவங்கிவிட்டார்கள். தேர்தல் முடிவு வந்த இரு நாட்களில் சாலிகிராமத்தில் தனுஷ் ரசிகர்கள் தினசரி அன்னதானம் தொடங்கியது ஓர் உதாரணம்.'' என்றார் சுகுணா திவாகர்.
தனுஷ் அரசியலுக்கு வரும்பட்சத்தில், அவருக்கு பட்டியலின மக்களிடம் பெரும் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறும் சுகுணா திவாகர், அசுரன், கர்ணன் போன்ற சில அரசியல் சமூகப்படங்களும் தனுஷுக்கு அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டுகிறார். அவருடைய ஆரம்ப காலப்படங்களிலிருந்தே அவருக்கு இத்தகைய ஓர் அடையாளம் தொடர்ந்து வருகிறது என்று கூறிய சுகுணா திவாகர், விஜய் போன்றே "பக்கத்து வீட்டுப்பையன்" போன்ற ஒரு தோற்றமும் தனுஷுக்கு அரசியலிலும் கைகொடுக்குமென்கிறார்.
விஜய் - தனுஷுக்கு இடையேயான வித்தியாசங்கள்
ஆனால் சினிமாவில் விஜய், தனுஷ் இருவருக்கும், இருவருடைய ரசிகர்களுக்குமான வித்தியாசங்கள் நிறைய இருப்பதை பட்டியலிடுகிறார், எழுத்தாளர் ஜா.தீபா. எம்ஜிஆர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் போன்று 'நல்லவன் வாழ்வான்' என்று மக்கள் நினைத்த காலம் மலையேறி விட்டதாகக் கூறும் அவர், யார் தங்களை எப்படி பிரபலப் படுத்திக்கொள்கிறார்கள் (Popularity) என்பதை வைத்தே, ஒருவருக்கு ரசிகர்கள் திரள்கிறார்கள் என்கிறார். தீபா, கதை டூ திரைக்கதை, ஒளி வித்தகர்கள் என சினிமா குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
பிபிசியிடம் பேசிய ஜா.தீபா, ''எம்ஜிஆர் சாயல் உள்ள படங்களில் விஜய் அதிகமாக நடித்ததில்லை. அவருடைய படங்களை அவர்தான் வழிநடத்துவார், அதில் பலவிதமான கதாபாத்திரங்கள் இருக்கும், அதுதான் அவருக்கு பெரும் புகழையும், சிறியவர் முதல் பெரியவர் வரையிலான பரவலான ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கித் தந்தது. அவருடைய ஆரம்பகாலப் படங்களில் ரசிகர்களானவர்களே இன்று வரை ரசிகர்களாகத் தொடரக் காரணம், ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதைப் பார்த்து விஜய் படங்களைத் தேர்வு செய்ததுதான்.'' என்கிறார்.
"ஆனால் தனுஷ் தனக்கு எது பொருந்தும் என்பதைப் பார்த்தே படங்களைத் தேர்வு செய்தார். ஒரு தொழில்நுட்பக் கலைஞராகவும், நடிகராகவும் தன்னை அந்தப் படத்துடன் பொருத்திப் பார்க்கின்றவராக தனுஷ் இருக்கிறார். எப்போதுமே அவர் தன்னை நடிகராக முன்னிறுத்தவே முயற்சி எடுப்பார். ஆனால் விஜய் ஆரம்பத்திலிருந்தே தன்னை ஒரு நட்சத்திரமாகவே கட்டமைத்துக்கொண்டார். ஒரு நடிகரை மக்கள் ரசிப்பார்கள். ஆனால், நட்சத்திரத்தைத்தான் கொண்டாடுவார்கள். அந்த வகையில் விஜய் ஒரு ஸ்டார். தனுஷ் ஒரு நடிகர்.'' என்றார் ஜா.தீபா.
சினிமாவில் விஜய் அளவுக்கு தனுஷுக்கு ரசிகர் வட்டம் இல்லாவிட்டாலும், அவர் அரசியலுக்கு வரும் பட்சத்தில் பிற நடிகர்களின் ரசிகர்கள் அவரை ஆதரிப்பதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார் பத்திரிகையாளர் சுகுணா திவாகர்.
''விஜயை விரும்பாத சினிமா ரசிகர்கள் உதாரணமாக ரஜினி, அஜித், சூர்யா ரசிகர்கள், அரசியலில் எந்தக் கட்சியையும் பெரிதாகச் சார்ந்திருப்பதில்லை. அந்த வாக்கு வங்கியைக் கவர்வதில் திமுக தோற்றுவிட்டது. விஜயை எதிர்க்கும் ஒரு நடிகராக தனுஷ் அரசியலுக்கு வந்தால் அந்த ரசிகர்கள் இவரை ஆதரிக்க வாய்ப்புள்ளது. என்னுடைய கணிப்பில் அவர் புதிதாக கட்சி துவங்க வாய்ப்பில்லை. ஏதாவது பெரிய கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, அதன் தலைமையைக் கைப்பற்றும் வாய்ப்புள்ளது.'' என்றார் சுகுணா திவாகர்.
வரும் 2031 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்க்குப் போட்டியாக தனுஷ் இருப்பார் என்றும் தனுஷ் அரசியலுக்கு வந்துவிட்டால் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இருக்காது என்றும் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் காணொளி ஒன்றில் கூறியிருந்தார். இவர், முதலமைச்சர் விஜயுடன் அடிக்கடி இணைத்து பேசப்படும் ஜோதிடராவார். முதலமைச்சரின் அரசியல் விவகாரங்களை கவனிப்பதற்காக சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட இவரின் நியமனம் ஒருநாளிலேயே ரத்து செய்யப்பட்டது.
ராதன் பண்டிட்டின் கருத்து குறித்து ஊடகங்களில் கருத்துத் தெரிவித்திருந்த சினிமா பத்திரிகையாளரும், விமர்சகருமான ஜெ.பிஸ்மி, ''அந்தத் தேர்தலில் திமுக–அதிமுக ஆகிய கட்சிகளே இருக்காது என்பது அதீதமான கற்பனை. தனுஷ் ஒரு வேளை அரசியலுக்கு வந்தால், இங்குள்ள ஒரு 'லெட்டர் பேடு' (அடையாள) கட்சிகளில் ஒன்றாக இருக்கும். அவருக்கு இருப்பது சில லட்சம் ரசிகர்கள்தான். அண்ணாமலை போன்றவர்கள் தொடங்கும் புதிய கட்சிகளுக்கு அவர் போட்டியாக இருக்கலாம். ஆனால் விஜய்க்கு போட்டியாக வர வாய்ப்பேயில்லை.'' என்று கூறியிருந்தார்.
தனுஷ் அரசியலுக்கு வருவதாக பரவி வரும் தகவல்கள் குறித்து, அவருடைய தந்தையும், திரைப்பட இயக்குநருமான கஸ்தூரி ராஜாவிடம் பிபிசி பேசியபோது, ''நீங்கள் சொல்லித்தான் இப்படி தகவல்கள் பரவுவதே எனக்குத் தெரியும். இதுபற்றி நீங்கள் எப்படிக் கேள்வி கேட்டாலும் என்னிடமிருந்து எந்த பதிலையும் உங்களால் வாங்க முடியாது.'' என்றார்.
துள்ளுவதோ இளமையில் துவங்கிய திரைப் பயணம்
பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியுள்ள கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு. தற்போது 43 வயதாகும் தனுஷ், கடந்த 2002 ஆம் ஆண்டில் அவருடைய தந்தையின் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானார். அதன்பின் தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படம், அவருக்கு சிறந்த நடிகர்களுள் ஒருவர் என்ற அடையாளத்தைப் பெற்றுத்தந்தது.
அதன்பின் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், வட சென்னை, அசுரன் போன்ற பல படங்கள், அவருக்கு திரைத்துறையில் வெற்றியையும், தனித்துவமான அடையாளத்தையும் கொடுத்தன. எத்தகைய பாத்திரமாக இருந்தாலும் அதற்கேற்ப தன்னை முழுமையாக வடிவமைத்துக் கொள்ளும் திறமையால் தனுஷ், பல முக்கிய இயக்குநர்களின் தேர்வுக்குரியவராக மாறினார். பல்வேறு வெற்றிப் படங்களிலும், விருது பெற்ற படங்களிலும் நாயகனாக இருந்த தனுஷ், தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். அமிதாப் பச்சன் உட்பட சில முக்கிய நடிகர்களுடன் சில இந்திப் படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு பரிமாணங்களிலும் திரைத்துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் தனுஷ், இப்போதும் ஒரே நேரத்தில் பல இயக்குநர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட தனுஷ். 2024 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு