மனிதனுக்கு உண்மையில் எவ்வளவு சூரிய ஒளி தேவை? 4 கேள்வி - பதில்கள்

    • எழுதியவர், கிளாடியா பொசாடா
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சிலருக்கு கோடைக்காலத்தில் தினமும் சில நிமிடங்கள் சூரிய ஒளி போதுமானதாக இருக்கும். மற்றவர்களுக்கு அதைவிட அதிக நேரம் தேவைப்படலாம்.

1923-ஆம் ஆண்டு மத்தியதரைக் கடல் பயணத்துக்குப் பிறகு வெயிலில் குளித்துத் திரும்பிய கோகோ ஷனலின் புகைப்படங்கள், உடலில் வெயிலால் நிறம் மாறும் பழக்கத்தையும் சூரியக் குளியலையும் பிரபலப்படுத்தின. அவரது பழுப்பு நிற சருமம் ஒரு சமூக அந்தஸ்தின் அடையாளமாக மாறியதுடன், சூரிய ஒளி குறித்த மேற்கத்திய சமூகத்தின் பார்வையையும் மாற்றியது.

1900-களின் தொடக்கம் முதல் நடுப்பகுதி வரை, ஹீலியோதெரபி எனப்படும் சூரிய ஒளியை சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் முறை, ரிக்கெட்ஸ் மற்றும் காசநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க சிகிச்சை மையங்களில் பயன்படுத்தப்பட்டது. அப்போது, "ஆரோக்கியமான பழுப்பு நிற சருமம்" என்பது ஊக்குவிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, சூரிய ஒளியுடனான நமது உறவு மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் அதிகரித்த தோல் புற்றுநோய் பாதிப்புகள், சூரிய ஒளி குறித்த மருத்துவ அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தின. இதையடுத்து, சூரிய ஒளியைத் தவிர்ப்பதற்கும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பொது சுகாதாரப் பிரசாரங்கள் மாறின.

அதிகப்படியான சூரிய ஒளி வெளிப்பாடு தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையது என்பதற்கான ஆதாரங்கள் இன்றும் வலுவாக உள்ளன.

இருப்பினும், அண்மைக் கால ஆய்வுகள், "மிதமான சூரிய ஒளி வெளிப்பாடு", அதாவது மதிய நேரத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு சூரிய ஒளியில் இருப்பது, பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பதை காட்டுகின்றன.

இதனால். மனநலம், வைட்டமின் டி அளவு மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு நன்மை அளிக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும், சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பது, இதய-ரத்தக்குழாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிப்பது மற்றும் தூக்கத்தை மேம்படுத்துவது போன்ற பலன்களும் மிதமான சூரிய ஒளி வெளிப்பாட்டுடன் தொடர்புடையதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அப்படியானால், சூரிய ஒளியின் ஆபத்துகளைத் தவிர்த்துக்கொண்டு அதன் நன்மைகளை எவ்வாறு பெறுவது? உண்மையில், நமக்கு எவ்வளவு நேரம் சூரிய ஒளி தேவை?

சூரிய ஒளி நமக்கு ஏன் தேவை?

மிதமான சூரிய ஒளி வெளிப்பாடு, உடலில் வைட்டமின் டி உற்பத்தியாக உதவுகிறது. இது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் தசைகளின் செயல்பாட்டுக்கும் முக்கியமானது. சில ஆய்வுகளின்படி உடலில் அதிக அளவு வைட்டமின் டி இருப்பது, புற்றுநோய் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு குறைவதுடனும், வகை 2 நீரிழிவு நோய் உருவாகும் அபாயம் குறைவதுடனும் தொடர்புடையதாக உள்ளது.

சூரிய ஒளி ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. புற ஊதாக் கதிர்களில் ஒன்றான யூவிஏ கதிர்கள் தோலில் படும்போது, நைட்ரிக் ஆக்சைடு வெளியிடப்படுகிறது. இது ரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது. இதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையக்கூடும்.

20 ஆண்டுகளாக 29,518 ஸ்வீடன் பெண்களைக் கண்காணித்து மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ஓர் ஆய்வில், சூரிய ஒளியைத் தவிர்த்த பெண்கள் மத்தியில் ஏற்படும் உயிரிழப்பு (அனைத்து காரணங்களினாலும்) விகிதம், அதிக அளவு சூரிய ஒளியைப் பெற்ற குழுவினருடன் ஒப்பிடும்போது இரு மடங்காக இருந்தது.

அதேவேளை, செயற்கை சூரியக் குளியல் படுக்கைகளை பயன்படுத்துவது ஒட்டுமொத்த உயிரிழப்பு மற்றும் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரிப்புடன் தொடர்புடையதாக இருந்தது. 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஸ்வீடன் ஆய்வில், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ஒருமுறை அல்லது அதற்கு மேல் செயற்கை சூரியக் குளியல் படுக்கைகளை பயன்படுத்திய பெண்களிடம், அனைத்து காரணங்களினாலும் ஏற்படும் உயிரிழப்பு 90 சதவீதம் அதிகமாக இருந்தது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தின் உடலியல் பேராசிரியர் ரெபெக்கா மேசன், '' போதுமான அளவு வைட்டமின் டி இருப்பது, உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும், உடலுக்குள் ஊடுருவும் நோய்க்கிருமிகளுக்கு எதிராகச் செயல்படவும், நோய் எதிர்ப்பு மண்டலம் நமது சொந்த செல்களையே தாக்காமல் அதைச் சீராக நிர்வகிக்கவும் உதவுகிறது'' என்கிறார்.

சூரிய ஒளி தூக்கத்தை மேம்படுத்துவதோடு, அறிவாற்றல் ஆரோக்கியத்தையும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலை நேர சூரிய ஒளியில் உள்ள நீல நிற ஒளி அலைநீளங்கள், பகல் நேரம் வந்துவிட்டதாக மூளைக்கு உணர்த்துகின்றன. இதனால் கார்டிசோல் அளவு அதிகரிப்பதுடன், தூக்கத்தை ஏற்படுத்தும் மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதன் விளைவாக நாம் அதிக விழிப்புடனும் புத்துணர்ச்சியுடனும் உணர்கிறோம்.

பகல் நேரத்தில் அதிக அளவு இயற்கை ஒளியைப் பெறுவது, அறிவாற்றல் செயல்பாடு, எதிர்வினை வேகம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தக்கூடும். 3.6 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற ஓர் ஆய்வில், பகல் நேரத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் சூரிய ஒளியைப் பெறுவது, டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் அபாயம் குறைவதுடன் தொடர்புடையதாக இருந்தது.

சூரிய ஒளியில் நாம் இருப்பது, மூளையில் செரோட்டோனின் என்ற வேதியியல் தூதுப்பொருளின் அளவையும் அதிகரிக்கிறது. இது நம்மை அமைதியாகவும் அதிக கவனத்துடனும் இருக்க உதவுகிறது.

கடுமையான மனச்சோர்வுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் சூரிய ஒளி அதிகம் கிடைக்கும் அறைகளில் வைக்கப்பட்டபோது, அவர்கள் விரைவாக குணமடைந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், போதுமான அளவு பகல் நேர ஒளியைப் பெறாதது, மனச்சோர்வு அறிகுறிகள் மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

நமக்கு எவ்வளவு சூரிய ஒளி தேவை?

வயது, வாழும் இடம் மற்றும் சருமத்தின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து பரிந்துரைகள் மாறுபட்டாலும், நிபுணர்கள் பொதுவாக குறுகிய நேரம், ஆனால் அடிக்கடி சூரிய ஒளியில் இருப்பதை பரிந்துரைக்கின்றனர்.

வைட்டமின் டி உற்பத்தியைப் பொறுத்தவரை, சூரிய ஒளியில் இருப்பதற்கான மிகவும் பயனுள்ள நேரம் "மதிய நேரம்; குறுகிய நேரம், ஆனால் அடிக்கடி" என்று ரெபெக்கா மேசன் கூறுகிறார். ஏனெனில், அப்போது வைட்டமின் டி உற்பத்திக்கு முக்கியமான யூவிபி கதிர்களின் அளவு அதிகமாக இருக்கும்.

வெளிர் நிற சருமம் கொண்டவர்களுக்கு, வாரத்தின் பெரும்பாலான நாட்களில் சில நிமிடங்களுக்கு கைகள், கைப்பகுதி அல்லது கால்களை வெளிப்படுத்தி சூரிய ஒளியில் இருப்பதை மேசன் பரிந்துரைக்கிறார். யூவி கதிர்வீச்சு மிகவும் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள், காலை நேர நடுப்பகுதி அல்லது பிற்பகல் நடுப்பகுதி நேரத்தில் இதைச் செய்யலாம்.

கருமை நிற சருமம் கொண்டவர்களுக்கு அதிக நேரம் சூரிய ஒளி தேவைப்படலாம். காரணம், சருமத்தில் அதிக அளவு இருக்கும் மெலனின், சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி உருவாகும் வேகத்தை குறைக்கிறது. ஒரு ஆய்வின்படி, பிரிட்டனில் வசிக்கும் அடர் பழுப்பு நிற சருமம் கொண்டவர்கள், வசந்த மற்றும் கோடை காலங்களில், போதுமான வைட்டமின் டி உற்பத்திக்காக மதிய நேரத்தில் சுமார் 25 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருக்க வேண்டியிருக்கும்.

மிகவும் வெளிர் நிற சருமம் கொண்டவர்கள், தங்களுக்கோ, குடும்பத்தினருக்கோ மெலனோமா வகை தோல் புற்றுநோய் வரலாறு உள்ளவர்கள் அல்லது உடலில் அதிக அளவு மச்சங்கள் உள்ளவர்கள் தோல் புற்றுநோய் அபாயம் அதிகம் உள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள் என்று மேசன் கூறுகிறார். நோய் எதிர்ப்பு சக்தியை அடக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கும் இதே எச்சரிக்கை பொருந்தும்.

"அவர்களும் சில நிமிடங்கள் சூரிய ஒளியில் இருக்கலாம். ஆனால், நீண்ட நேரம் குறைவான சருமத்தை வெளிப்படுத்துவதை விட, குறுகிய நேரம் அதிக சருமத்தை வெளிப்படுத்தி, அதை அடிக்கடி செய்வது சிறந்தது," என்று அவர் கூறுகிறார்.

இதை மதிய நேரத்திற்கு அருகில் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், அப்போது யூவிஏ கதிர்களுடன் ஒப்பிடும்போது யூவிபி கதிர்களின் விகிதம் அதிகமாக இருக்கும். வைட்டமின் டி உற்பத்திக்கு யூவிபி கதிர்கள் அவசியமானவை. காலை அல்லது மாலை நேரங்களில் யூவிபி குறைவாகவும், சரும முதிர்ச்சி மற்றும் தோல் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடைய யூவிஏ கதிர்கள் ஒப்பீட்டளவில் அதிகமாகவும் இருக்கும்.

ஆனால், அதற்குப் பிறகு "சருமத்தை கவனமாக மூடிக்கொள்ள வேண்டும்" என்று மேசன் வலியுறுத்துகிறார்.

சில அரிதான நிலைகளில், குறிப்பாக அல்பினிசம் போன்ற நிலை கொண்டவர்களுக்கு, பாதுகாப்பற்ற சூரிய ஒளி வெளிப்பாடு பொருத்தமானதாக இருக்காது.

குளிர்காலங்களில், போதுமான வைட்டமின் டி உருவாக அதிக நேரம் வெளியில் இருக்க வேண்டியிருக்கும். இது உடலில் எவ்வளவு சருமம் வெளிப்படுகிறது மற்றும் நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்கிறீர்கள் என்பதையும் பொறுத்தது. மெல்போர்ன் மற்றும் ஹோபார்ட் போன்ற சில பகுதிகளில், குளிர்காலத்தில் குறிப்பிடத்தக்க அளவு வைட்டமின் டி உருவாகத் தேவையான யூவிபி கதிர்கள் போதுமான அளவில் கிடைப்பதில்லை என்று மேசன் கூறுகிறார்.

"நல்ல ஆரோக்கியத்திற்கு நமக்கு சிறிய அல்லது மிதமான அளவு சூரிய ஒளி போதுமானது," என்று ஹார்வர்டு மருத்துவப் பள்ளி மற்றும் பாஸ்டனில் உள்ள பிரிகாம் அண்ட் விமென்ஸ் மருத்துவமனையின் மருத்துவப் பேராசிரியர் ஜோஆன் மான்சன் கூறுகிறார்.

குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நீண்ட நேரம் பாதுகாப்பின்றி சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், உடற்பயிற்சி செய்வது அல்லது வெளியில் அன்றாட வேலைகளைச் செய்வது போன்ற இயல்பான சூரிய ஒளி வெளிப்பாடுகளே போதுமான பலனை அளிக்கக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.

"சூரிய ஒளியின் நன்மை மற்றும் ஆபத்து ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலை, ஒருவரின் சரும வகை மற்றும் நிறத்தைப் பொறுத்து மாறுபடும்," என்று மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தோல் மருத்துவம் மற்றும் ஒளியியல் உயிரியல் பேராசிரியர் லெஸ்லி ரோட்ஸ் கூறுகிறார்.

ஆய்வுகளின்படி, கருமை நிற சருமம் யூவி கதிர்களால் ஏற்படும் டிஎன்ஏ சேதத்திலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. அதேசமயம், வெளிர் நிற சருமம் கொண்டவர்கள் மிகக் குறைந்த அளவிலான யூவி கதிர்களுக்குக் கூட பாதிக்கப்படக்கூடியவர்கள். இதுவே தனிநபர் அடிப்படையிலான சூரிய ஒளி வழிகாட்டுதல்களின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

கருமை நிற சருமம் கொண்டவர்களிடம் அதிக அளவு மெலனின் இருப்பதால், அது தீங்கு விளைவிக்கும் யூவி கதிர்களுக்கு எதிராக இயற்கையான வடிகட்டியாகச் செயல்படுகிறது.

ஆனால், சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு தேவைப்படும் அளவு சருமத்தின் தன்மையைப் பொறுத்து மாறுபட்டாலும், அனைவரும், அதாவது கருமை நிற சருமம் கொண்டவர்களும் கூட சூரிய ஒளியில் இருக்கும் போது கண்ணாடி அணிய வேண்டும் என்று மேசன் கூறுகிறார்.

2024-ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் தங்களது சூரிய ஒளி வழிகாட்டுதல்களைப் புதுப்பித்து, உலகிலேயே முதல் முறையாக அதிக தனிப்பட்ட அணுகுமுறையை ஏற்றுக்கொண்டன. தோல் புற்றுநோய் அபாயம் மற்றும் சரும வகையை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர்.

அதிகப்படியான சூரிய ஒளியால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?

அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பது, உடலில் வைட்டமின் டி உற்பத்தியை அதிகரிக்காது. ஆனால், சூரிய வெப்பத்தால் சருமம் கருகுதல், நிறமாற்றம், முன்கூட்டிய சரும முதிர்ச்சி போன்ற பாதிப்புகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், இது தோல் புற்றுநோய்க்கான முக்கிய காரணியாகவும் கருதப்படுகிறது.

பிரிட்டனில், மிகவும் ஆபத்தான தோல் புற்றுநோய் வகையான மெலனோமா நோயால் ஆண்டுதோறும் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முதல் முறையாக அந்த எண்ணிக்கை 20,000-ஐ கடந்துள்ளது.

கேன்சர் ரிசர்ச் யூகே அமைப்பின் தகவலின்படி, அதிகளவு யூவி கதிர் வெளிப்பாடு மற்றும் செயற்கை சூரியக் குளியல் படுக்கைகள் பயன்படுத்துதல் இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். மெலனோமா பாதிப்புகளில் பத்தில் ஒன்பது பாதிப்புகள் வரை தவிர்க்கக்கூடியவை என்று அந்த அமைப்பு மதிப்பிடுகிறது.

அமெரிக்காவிலும், தோல் புற்றுநோயே மிகவும் பொதுவான புற்றுநோய் வகையாக உள்ளது.

குழந்தைப் பருவம் மற்றும் இளமைக் காலங்களில் சூரிய ஒளி வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், ஒருவரின் வாழ்க்கையின் முதல் 20 ஆண்டுகளில் கிடைக்கும் சூரிய ஒளியின் அளவே, பின்னர் அவருக்கு தோல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பை குறிப்பிடத்தக்க அளவில் தீர்மானிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

அதிகப்படியான சூரிய ஒளி கண்புரையை ஏற்படுத்தக்கூடும். இவை பொதுவாக அறுவைச் சிகிச்சை மூலம் எளிதாக சிகிச்சையளிக்கப்படுகின்றன. ஆனால் சிகிச்சையின்றி விட்டுவிட்டால், இறுதியில் பார்வை இழப்பிற்கும் வழிவகுக்கலாம்.

எனவே, தீங்கு விளைவிக்கும் யூவி கதிர்களிலிருந்து கண்களைப் பாதுகாக்க, யூவி 400 பாதுகாப்பு கொண்ட கண்ணாடிகளை அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

போதுமான அளவு சூரிய ஒளி கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?

கருமை நிற சருமம் கொண்டவர்கள், வெளியில் செல்லும் வாய்ப்பு குறைவாக உள்ளவர்கள், ஒளிச்செறிவுக்கு அதிக உணர்திறன் கொண்டவர்கள் அல்லது உடலை முழுமையாக மூடி வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

நீண்டகால வைட்டமின் டி குறைபாடு, ரிக்கெட்ஸ் அல்லது ஆஸ்டியோமலேசியா போன்ற எலும்பு குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும்.

17-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் ரிக்கெட்ஸ் ஒரு நகர்ப்புற நோயாக உருவெடுத்தது. அப்போது நிலக்கரி பயன்பாடு அதிகமாக இருந்ததால், லண்டன் போன்ற நகரங்கள் புகைமூட்டத்தால் சூழப்பட்டு, சூரியனின் யூவி கதிர்கள் மனிதர்களின் சருமத்தை அடைவது குறைந்திருந்தது.

இருப்பினும், வைட்டமின் டி பற்றாக்குறையை கூடுதல் மாத்திரைகள் அல்லது ஊட்டச்சத்து மருந்துகள் மூலம் எளிதாகச் சரிசெய்ய முடியும். ஆனால், அனைத்து பெரியவர்களும் வைட்டமின் டி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா? என்பது குறித்து இன்னும் விவாதங்கள் நீடிக்கின்றன. இதற்கான பரிந்துரைகள் வயது மற்றும் நாடு சார்ந்த சுகாதார வழிகாட்டுதல்களைப் பொறுத்து மாறுபடுகின்றன.

அதேநேரத்தில், அதிக அளவு வைட்டமின் டி எடுத்துக்கொள்வதும் ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் 4,000 IU (100 மைக்ரோகிராம்) அளவைத் தாண்டி எடுத்துக்கொள்வது தீங்கு விளைவிக்கக்கூடும். இது ஹைப்பர்கால்சீமியா எனப்படும் நிலையில் முடிவடையலாம். அப்போது ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரித்து, எலும்புகள் பலவீனமடைவதோடு, சிறுநீரகங்கள் மற்றும் இதயத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

ரெபெக்கா மேசன் வலியுறுத்துவது போல, "குறைவாகவும், ஆனால் அடிக்கடியும்" சூரிய ஒளியைப் பெறுவதுதான் சிறந்த அணுகுமுறை.

மதிய நேரத்தில் குறுகிய நேரங்களுக்கு அடிக்கடி சூரிய ஒளியில் இருப்பது, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் நீண்ட நேர வெளிப்பாட்டைத் தவிர்ப்பது (குறிப்பாக பகலின் அதிக வெப்பம் மற்றும் அதிக யூவி கதிர்கள் உள்ள நேரங்களில்) சூரிய ஒளியின் நன்மைகளைப் பெற உதவும். அதே நேரத்தில், சூரிய வெப்பத்தால் சருமம் கருகுதல் மற்றும் தோல் புற்றுநோய் போன்ற ஆபத்துகளையும் குறைக்க முடியும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு