You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'2 ஆண்டுகள் தேடல்' - அதிர்ஷ்டமே இல்லை என சுரங்கத்தை மூடிய 7 தொழிலாளர்களுக்கு 50 லட்ச ரூபாய் வைரம் கிடைத்தது எப்படி?
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி செய்திகள்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
இந்தியாவின் வைரச் சுரங்கப் பகுதியான பன்னாவில், ஏழு ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை என்றென்றும் மாற்றக்கூடிய ஒரு அதிர்ஷ்டத்தைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்திருந்த நிலத்தில், பெரிய அளவிலான வைரம் ஒன்றைக் கண்டுபிடித்ததாக அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
எடைக்கருவியில் பரிசோதித்தபோது, அந்த வைரம் 17.96 கேரட் எடையுள்ளதாக தெரியவந்தது. பன்னா வைர அலுவலக அதிகாரி ரவி பட்டேல், அது "ரத்தினத் தரம் வாய்ந்த வைரம்" என்றும், இயற்கையாக கிடைக்கும் மிக உயர்தர வைரங்களில் ஒன்றாகும் என்றும் கூறினார்.
அந்த வைரத்தை "மிக மதிப்புமிக்கது" என்று வர்ணித்த அவர், வரும் அக்டோபர் மாதத்தின் முதல் பாதியில் நடைபெறும் ஏலத்தில் அது விற்பனைக்கு விடப்படும் என்றார். அதன் மதிப்பு குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும் அவர் மதிப்பிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பன்னாவில் வைரங்கள் கிடைப்பது மிகவும் அரிதானது அல்ல. இந்தியாவில் பெரும்பாலான வைர வளங்கள் உள்ளன.
ஆனால், பன்னா இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும். அங்கு வாழும் மக்கள் வறுமை, குடிநீர் பற்றாக்குறை மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
நகரத்தில் வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதால், ஒரு அரிய வைரம் கிடைத்தும் தங்களது அதிர்ஷ்டம் மாறும் என்ற நம்பிக்கையில் பலர் சுரங்கத் தோண்டலில் ஈடுபடுகின்றனர். இதனால், பன்னா இன்றும் வைரம் தேடுபவர்களின் முக்கிய இலக்காக உள்ளது.
ஆனால், வைரத்தைக் கண்டுபிடிப்பவர்கள் எப்போதும் அதன் பலனைப் பெறுவதில்லை.
பன்னாவில் பெரும்பாலான சுரங்கத் தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என்றும், அவர்கள் குத்தகைதாரர்களுக்காகப் பணியாற்றுகின்றனர் என்றும், அவர்கள் வைரத்தைக் கண்டுபிடித்தாலும், அதன் மூலம் கிடைக்கும் பணம் தொழிலாளர்களுக்குச் செல்லாமல் குத்தகைதாரருக்கே செல்கிறது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த முறை நடந்த சம்பவம் விதிவிலக்கானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், வைரத்தைக் கண்டுபிடித்தவர்களே அதனால் நேரடியாகப் பயனடைய உள்ளனர்.
பன்னா மாவட்டத்தின் சரோகா கிராமத்தில் உள்ள சுரங்கத்தை அகிலேஷ் பால் மற்றும் அவரது நண்பர்கள் ஆறு பேர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த தொகைக்கு குத்தகைக்கு எடுத்திருந்ததாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு ஆண்டாக மூடப்பட்டிருந்த அந்தச் சுரங்கம் சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்டதாக பால் தெரிவித்தார். கனமழைக்குப் பிறகு திங்கள்கிழமை சுரங்கத்தைப் பார்வையிட்டபோது, அந்தக் கல்லை (வைரத்தை) அவர் கண்டுபிடித்தார்.
"சுமார் இரண்டு ஆண்டுகளாக அங்கு தோண்டிக் கொண்டிருந்தோம். ஆனால் எங்களுக்கு எந்த அதிர்ஷ்டமும் அமையவில்லை. அதனால் ஓர் ஆண்டுக்கு சுரங்கத்தை மூடிவிட்டோம். அதன் அருகில் புதிய சுரங்கம் ஒன்றைத் தொடங்கினோம்," என்று அவர் கூறினார்.
"புதிய சுரங்கத்தைப் பார்வையிடச் சென்றபோது, பழைய சுரங்கத்துக்குள்ளும் சென்று பார்த்தோம். அங்குதான் அதை கண்டுபிடித்தோம். அது மேலேயே இருந்தது," என்று அவர் கூறினார்.
அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் அடுத்த காலாண்டு ஏலத்தில் இந்த வைரம் விற்பனைக்கு வைக்கப்படும்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் ஏலம் கேட்க முடியும் என்று படேல் தெரிவித்தார்.
விற்பனை மூலம் கிடைக்கும் தொகையில் 12% ராயல்டியை அரசு கழித்துக்கொள்ளும் என்றும், மீதமுள்ள தொகை ஏழு தொழிலாளர்களுக்கும் சமமாகப் பிரிக்கப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கண்டுபிடிப்பு, வறுமையில் வாழ்ந்து வந்த சில தொழிலாளர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றக்கூடியதாக இருக்கலாம்.
அவர்களில் மூன்று பேர் இதுவரை திருமணம் செய்துகொள்ளும் அளவுக்குக் கூட வசதி இல்லாமல் இருந்ததாகவும், தற்போது கிடைக்கவுள்ள இந்த எதிர்பாராத வருமானம் அவர்களுக்கு மணப்பெண்களைத் தேட உதவும் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு