You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குருவாயூர் கோயில், சிருங்கேரி மடத்திற்கு வாரி வழங்கிய திப்பு சுல்தான் மீது 'மத வெறியர்' முத்திரை விழுந்த கதை
- எழுதியவர், கா.அ. மணிக்குமார்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்
வங்காளத்திலும், பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான போர்களிலும், வெற்றி பெற்றிருந்த ஆங்கிலேயர், ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் (1767-1799) கடும் சவாலைச் சந்திக்க வேண்டியிருந்தது.
ஹைதரும் திப்புவும் கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சவால் கொடுக்கும் வல்லமை பெற்றிருந்தாலும் அவர்களது மேலாண்மை தென் இந்தியாவில் மட்டுமே இருந்ததால், அப்பலவீனத்தை உணர்ந்து கூட்டு முயற்சியாக மராத்தியர், ஐதராபாத் நிஜாம் இரண்டாம் ஆசப் ஷா, ஆவாத்தின் நவாப் சூஜா-உத்-தவுலா ஆகியோருடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்கொள்ள எண்ணினர்.
ஆனால் பெருகிவந்த ஹைதர் அலியின் செல்வாக்கைக் கண்டு அஞ்சிய ஆசப் ஷாவும், சூஜா-உத்-தவுலாவும் ஹைதர் அலிக்கு முழு மனதுடன் ஒத்துழைக்க மறுத்தனர். அவமானத்துக்குள்ளாகிய போதும் மராத்தியர்களும் ராஜபுத்திரர்களும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஆங்கிலேயருக்கு ஒத்துழைத்து ஏமாந்தனர்.
மாறாக, எந்தக் கட்டத்திலும் ஆங்கிலேயருடன் இணைந்து இந்திய அரசர்களுக்கு எதிராகப் போரிடுவதில்லை என உறுதியேற்றிருந்த ஹைதரும் திப்புவும் இறுதிவரை அந்நியரான ஆங்கிலேயருடன் போரிட்டு தாய் நாட்டுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்து வரலாற்றில் நிரந்தர இடம் பெற்றனர்.
திப்பு ஒரு கொடுங்கோலன், மத வெறியன் என 1784-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர்களால் சித்தரிக்கப்படவில்லை.
இரண்டாம் மைசூர் போருக்குப் பின் திப்புவை விலை கொடுத்து வாங்கவோ, அடங்க வைக்கவோ முடியாது என உறுதியாக அவர்கள் நம்பிய பிறகே அவரை அரியணையிலிருந்து அகற்ற அவ்வாறாக சித்தரித்ததோடு தாங்கள் அத்தகையதொரு மன்னரிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதாகக் கூறி தங்கள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்தினர்.
இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தை முற்றிலுமாக முறியடித்துவிட்டதாக எண்ணியிருந்த ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்களுடனான திப்புவின் தொடர்பால் அச்சமுற்றனர். எனவே ஆங்கிலேயர்களுக்கு திப்புவே பிரதான எதிரியாகத் தெரிந்தார்.
ஆங்கிலேயருடனான மராத்திய- நிஜாம் அரசுகளின் கூட்டணி
1782இல் ஹைதர் இறந்த பின் ஆட்சிக்கு வந்தார் திப்பு. லெடன்ஹால் தெருவுக்கு (லண்டனில் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் அமைந்திருந்த தெருவின் பெயர்) சிம்மசொப்பனமாக இருந்த திப்பு நடத்திய மூன்றாம் மைசூர் போர் (1790-92), துரதிருஷ்டவசமாக, கிழக்கிந்திய நிறுவனத்திற்கு சாதகமான சூழலில் நடைபெற்றது.
முக்கிய பிராந்திய அரசுகளான மராத்தியர்கள், ஹைதராபாத் நிஜாம் ஆகியோருடன் கூட்டணி அமைப்பதில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ் வெற்றி பெற்றார். மைசூர் ஒரு வலிமையான பிராந்திய சக்தியாக வளர்ந்து வருவதை விரும்பாத இவர்கள் ஆங்கிலேயருடன் இணைந்தனர்.
முந்தைய போரில் திப்புவுக்கு உதவிய பிரெஞ்சு கூட்டாளிகள், இப்போரின்போது பங்கேற்க முடியாத அளவிற்கு அப்போது தொடங்கியிருந்த பிரெஞ்சுப் புரட்சியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அவ்வப்போது சில ராணுவ பின்னடைவுகளைச் சந்தித்த போதிலும், மூன்று ஆண்டுகள் நீடித்த போரின் மூலம், திப்பு கட்டுப்பாட்டில் இருந்த பலமான கோட்டைகளை கார்ன்வாலிஸ் கைப்பற்றி, போரை மைசூரின் மையப்பகுதி வரை கொண்டு சென்றார்.
தனது தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டினம் கைப்பற்றப்படும் நிலை ஏற்பட்டபோது, ஒரு அமைதி உடன்படிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு திப்பு தள்ளப்பட்டார். 1792இல் கையெழுத்தான ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கையின்படி, திப்பு தனது நிலப்பரப்பில் பெரும்பகுதியை இழந்தார்; பெரும் தொகையை இழப்பீடாகச் செலுத்தவும், அமைதி ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் விதமாகத் தனது இரு மகன்களைப் (அப்துல் காலி, மொய்சுதீன்) பிணையக் கைதிகளாக கார்ன்வாலிஸிடம் ஒப்படைக்கவும் அவர் நிர்பந்திக்கப்பட்டார்.
இறுதி மைசூர் போர்
மூன்றாம் மைசூர் போரில் ஏற்பட்ட பெரும் இழப்புகளை ஈடுசெய்ய திப்பு பிரான்ஸ் நாட்டின் புரட்சிகர குடியரசிடமிருந்து ராணுவ உதவியை எதிர்பார்த்தார். ஆனால் எதிர்கால உதவி குறித்த தெளிவற்ற வாக்குறுதிகளைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. திப்புவின் பிரெஞ்சுக்காரர்களுடனான இந்த உறவை, புதிய கவர்னர் ஜெனரல் ரிச்சர்ட் வெல்லஸ்லி ஒரு புதிய போரைத் தொடங்குவதற்கான சாக்காகப் பயன்படுத்தினார்.
நான்காவது மற்றும் இறுதி மைசூர் போர் (1799) தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே கிழக்கிந்திய ராணுவம் பலப்படுத்தப்பட்டது. ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையில் ஹைதராபாத் நிஜாம்-மராத்தியர் படைகளுடன் ஸ்ரீரங்கப்பட்டினம் முற்றுகையிடப்பட்டது.
திப்பு ஆங்கிலேயரிடம் சரணடைய மறுத்து ஸ்ரீரங்கப்பட்டினக் கோட்டையின் மதிலில் இறுதி வரை போரிட்டு 1799-ஆம் ஆண்டு மே மாதம் 14-ஆம் தேதி மரணமடைந்தார்.
திப்பு வாழ்வின் இறுதிக்கட்டத்தில் நேரில் பார்த்ததொரு நிபுணத்துவச் சாட்சியின் படி, "திப்பு தனது தந்தைக்கும், தனக்கும் மற்றும் தன்னுடன் பிரிக்கமுடியாது பிணைந்துள்ள தன் தேசத்திற்கும் உண்மையாகவே பெருமை சேர்க்கும் வகையில் தலைநகரைக் காத்துள்ளார்".
திப்பு சுல்தானின் மரணம், "இனி இந்தியா நம்முடையது" என்று பிரிட்டிஷ் தளபதி ஜார்ஜ் ஹாரிஸ் முழங்குவதற்கு வழிவகுத்தது.
பிளாசி யுத்தம் கிழக்கிந்திய கம்பெனியை நாட்டின் ஒரு பகுதிக்கு அதிகாரத்தில் அமர்த்தியிருந்தது என்றால், ஸ்ரீரங்கப்பட்டினத்தின் வீழ்ச்சி ஆங்கிலேய அதிகாரத்தை தென் இந்தியாவில் மேலானதாகவும் நிரந்தரமானதாகவும் ஆக்கியது.
மேற்கத்திய முறைகளைச் செயல்படுத்திய முதல் இந்திய ஆட்சியாளர்
நிர்வாகத்தில் மேற்கத்திய முறைகளைச் செயல்படுத்த முயன்ற முதல் இந்திய ஆட்சியாளர் அவரே (திப்புவே) என்று இந்தியாவின் மாமனிதர்கள் (Great Men of India) என்ற தொகுப்பில் 'திப்பு சுல்தான்' குறித்து எழுதிய கட்டுரையில் ஹெச்.ஹெச். டாட்வெல் குறிப்பிடுகிறார்.
பொதுவாக திப்புவை அதிகம் விமர்சனம் செய்யும் கர்னல் வில்க்ஸ், "மைசூர் அரசு பாளையக்காரர்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியதாகத் தெரிகிறது; இறுதியில் ஹைதர் அவர்களின் நிலங்களை (பத்தில் ஒரு பங்கைத் தவிர மற்ற அனைத்தையும்) தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்," என பதிவு செய்கிறார்.
திப்புவின் நிலவரிக் கொள்கை
மில் தனது 'இந்திய வரலாறு' (History of India) நூலில், "அவரது (திப்புவின்) நாடு இந்தியாவிலேயே மிகச் சிறப்பாகப் பயிரிடப்பட்டும், அங்குள்ள மக்கள் மிகவும் செழிப்பான நிலையிலும் இருந்தனர்" என்று குறிப்பிடுகிறார். அவரது இந்தக் கருத்தை அக்காலத்தைச் சேர்ந்த பல ஆங்கிலேயர்களும் ஆதரிக்கின்றனர்.
ஹைதர் மேற்கொண்ட முறையான நில அளவையே அவரது வரி விதிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்திருந்தது. அவர் வரித் தொகையை உயர்த்தினாலும் அதை ஒரு முறையான கட்டமைப்பிற்குள் கொண்டு வந்தார். அவரது நிர்வாகத் திறமையால் அவற்றை முழுமையாக வசூலிக்கவும் முடிந்தது.
மொத்த விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கு அரசுக்கும், மூன்றில் ஒரு பங்கு விவசாயிகளுக்கும் எனப் பகிர்ந்தளிக்கப்பட்ட நன்செய் நிலங்களுக்குக் கூட, 'வீரராய பணம்' என்ற நாணய மதிப்பீட்டின் அடிப்படையில் பணமாகவே வரி நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இது வரி வசூலை எளிதாக்கியதால் பழைய பகிர்வு முறையை விடச் சிறந்ததாக இருந்தது.
திப்புவின் நாணயங்கள்
இந்திய நாணய முறையை உருவாக்கியவர்களில் ஒருவராகவும், அதிலும் குறிப்பாக மிகச்சிறந்த கலை நயமிக்க நாணயங்களை உருவாக்கியவராகவும் திப்பு வரலாற்றில் இடம் பெறுகிறார்.
'பணம்' (ஆங்கிலத்தில் 'fanam') புழக்கத்தில் இருந்த ஒரு பொதுவான தங்க நாணயமாகும்; இதன் மதிப்பு பிற்கால நாணய மதிப்பீட்டின்படி 5 அணா 5 பைசாக்களுக்குச் சமமாகும். ஆனால் திப்புவின் ஆட்சிக்காலத்தில் தங்கம், வெள்ளி மற்றும் செம்பு ஆகியவற்றால் ஆன பல புதிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
திப்புவின் நாணயங்களிலேயே அதிக மதிப்புடைய தங்க நாணயம் 'மோகூர்' (mohurs) ஆகும்; இது 4 பகோடாக்களுக்கு (தோராயமாக 14 ரூபாய்) அல்லது ஆங்கில நாணய மதிப்பில் 1 பவுண்டுக்குச் சமமானதாகும். வெள்ளி நாணயங்களைப் பொறுத்தவரை, திப்புவின் 'இரட்டை ரூபாய்' மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது; இது இதுவரை வெளியிடப்பட்ட இந்திய நாணயங்களிலேயே மிகவும் அழகான நாணயம் என கருதப்படுகிறது. இதன் மதிப்பு பிற்கால நாணய மதிப்பீட்டில் 1 ரூபாய் 12 அணாக்களுக்குச் சமமாகும்.
செம்பு நாணயங்களைப் பொறுத்தவரை, பல்வேறு வகையான பைசாக்கள் புழக்கத்தில் இருந்தன.
திப்புவின் பொருளாதார கொள்கை
திப்பு தனது அரசைப் பொருளாதார ரீதியாகச் செழிப்பானதாகவும், தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியதாகவும், ராணுவ ரீதியாக வலிமைமிக்கதாகவும் ஆக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
தனது நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டு நிலம், தொழிற்சாலை, சுரங்கம் அனைத்தையும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சமதர்ம செயல்பாட்டாளராகத் திகழ்ந்தார். நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாத உடைமையாளர்களின் உரிமைகளை மறுத்து நிலத்தில் உழுது பயிரிடுவோர் உரிமைகளை அங்கீகரித்தார்.
நிலவரி வசூல் செய்ய இடைத்தரகர்களை அனுமதிக்காத திப்பு, அரசு வருவாய் அதிகாரியிடம் (Amildar) அப்பொறுப்பைக் கொடுத்து ஊழல் செய்தபோது கடுமையான தண்டனை வழங்கினார்.
மைசூரில் வெட்டியெடுக்கப்பட்ட வெள்ளி, தங்கம், தந்தம், உற்பத்தியான ஏலக்காய், மிளகு, தயாரிக்கப்பட்ட சந்தனப்பொருட்கள், பருத்தி நூல்கள், போன்ற பொருட்களை விற்கவும் அந்நிய நாட்டில் இருந்து ரசாயனப் பொருட்கள், கைத்துப்பாக்கிகள், பீரங்கிகள், வரவழைக்கவும் வணிக மையங்கள் உலகின் பல பகுதிகளில், குறிப்பாக, கராச்சி, ஓமென், பாக்நாத், கான்ஸ்டான்டிநோபிள் நகரங்களில் அமைக்கப்பட்டிருந்தன.
இதைக் கண்காணிக்க ஒன்பது தலைமை வணிகர்களை அரசே நியமித்திருந்தது. பொருட்களை வாங்க, விற்க முகவர்களும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். திப்பு சில வெளிநாட்டு வணிகர்களுடன் நேரடித் தொடர்புகொண்டு மைசூருக்கு வரவழைத்திருக்கிறார். மைசூர் பட்டு இன்று உலகச் சந்தையில் பிரசித்தி பெற்று விளங்குவதற்கு திப்புவின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.
கிழக்கிந்திய கம்பெனியைப் போன்ற ஒரு 'பொதுத்துறை நிறுவனத்தை' உருவாக்க திப்பு தீவிரமாக முயன்றார். இந்த விஷயத்தில், அத்தகைய சாத்தியக்கூறுகளைப் பற்றி முற்றிலும் கவலைப்படாமலும், அக்கறையின்றியும் இருந்த அவரது சமகால இந்திய ஆட்சியாளர்களை விட தொலைநோக்குப் பார்வை கொண்டவராக இருந்தார்.
திப்புவின் விதிமுறைகள் அடங்கிய ஹுக்ம் நாமா, அவர் மைசூருக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த வணிகத் தொழில் நிறுவனங்ககளின் விவகாரங்களில், தனது தனிப்பட்ட கண்காணிப்பையும் கட்டுப்பாட்டையும் நிறுவ முயன்றார்; வணிகப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், இறக்குமதியை ஊக்குவிக்கவும் விரும்பினார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
கடற்படையை உருவாக்கும் முயற்சி
மலபார் கடற்கரையைக் கைப்பற்றியதன் மூலம், அப்பகுதியின் புகழ்பெற்ற துறைமுகங்களும் கப்பல் கட்டும் தளங்களும் மைசூர் அரசின் வசமாயின. 1792-இல் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, திப்பு ஒரு கடற்படையை உருவாக்கும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தினார்.
1796-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இதற்கெனத் தனியாக ஒரு கடற்படை நிர்வாக வாரியம் அமைக்கப்பட்டது; அத்துடன் ஜுமலாபாத், வாஜிதாபாத், மஜிதாபாத் ஆகிய கப்பல் கட்டும் தளங்களிலும் மேற்கு கடற்கரையோரத்திலுள்ள பிற இடங்களிலும் நாற்பது போர்க்கப்பல்களையும் பல சரக்குக் கப்பல்களையும் கட்டுவதற்கான உறுதியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
கப்பல் கட்டுதல் மற்றும் தனது கப்பற்படையை விரிவுபடுத்துவதில் அவர் காட்டிய முக்கியத்துவம், அவரை மீண்டும் அவரது சமகாலத்தவர்களை விட உயர்ந்த இடத்தில் வைப்பது மட்டுமல்லாமல், அவரது வணிக மேம்பாட்டு முயற்சிகள் கப்பல் கட்டும் தொழிலில் செய்யப்பட்ட முதலீடுகளால் உறுதிப்படுத்தப்படுகிறது.
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் சிறப்புக்கவனம்
பிரான்ஸிலிருந்து கைவினைஞர்கள் மற்றும் நிபுணர்களைப் பணிக்கு அமர்த்துமாறும், அங்கிருந்து சில தாவரங்கள் மற்றும் கருவிகளைச் சேகரித்து வருமாறும் திப்பு தனது தூதர்களுக்குப் பணித்திருந்தார்.
காற்றழுத்தமானிகள், வெப்பமானிகள், மூக்கு கண்ணாடிகள், கடிகாரங்கள் மற்றும் அச்சு இயந்திரங்கள் ஆகியவற்றின் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் கேட்டவற்றில் பெரும்பாலானவற்றை, குறிப்பாக அவர் மீண்டும் மீண்டும் கோரிய பொருட்களை, பிரெஞ்சுக்காரர்கள் வழங்கினர்.
தனது தந்தை ஹைதரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே திப்புவின் உடலும் அடக்கம் செய்யப்பட்ட 'லால் பாக்' தோட்டத்தில் உள்ள சைப்ரஸ் மரங்கள், அவரது தூதர்கள் மூலமாகவே பிரான்ஸிலிருந்து கொண்டுவரப்பட்டவை.
வெளிநாட்டு அறிவியல், ராணுவத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மைசூரிலும் ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. திப்புவுக்கு ஐரோப்பிய ஆயுதங்களில் இருந்த ஆர்வம், மைசூரில் தனித்துவமான 'உள்ளூர்' ராக்கெட் வடிவங்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது.
திப்பு ஆங்கிலேயர்க்கு எதிராகப் பயன்படுத்திய ராக்கெட்டின் சிதறிய பகுதிகள் பிரிட்டன் அருங்காட்சியகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பதினாறாம் லூயிக்கு திப்பு பரிசளித்த மைசூரில் தயாரிக்கப்பட்ட இரு கைத்துப்பாக்கிகளின் நேர்த்தியைக் கண்டு பிரெஞ்சு வல்லுநர்கள் அதிசயித்திருக்கின்றனர்.
1780-இல் நடைபெற்ற பொல்லிலூர் போர் மற்றும் 1799-இல் நடைபெற்ற ஸ்ரீரங்கப்பட்டின முற்றுகையின்போது பயன்படுத்தப்பட்ட ராக்கெட்டுகள், ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடியவையாக இருந்தன.
திப்பு சுல்தானின் மத நல்லிணக்கம்
இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை ஏற்காதவர்களை ஹைதர் மற்றும் திப்பு, குறிப்பாகத் திப்பு துன்புறுத்தியதாகப் பல கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், உண்மை நிலை வேறாக இருந்தது. தென்னிந்தியாவில் இஸ்லாத்தைப் பரப்புவதில் ஹைதருக்கு எந்தவிதமான தீவிர ஆர்வமும் இருந்ததாகத் தெரியவில்லை.
அதேவேளையில், திப்புவைப் பற்றிய நியாயமான கண்ணோட்டத்தை ஹெச்.ஹெச். டாட்வெல் எழுதுகையில் "உண்மையில், அவரது செயல்பாடுகளை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து பார்க்கையில், அவர் மதவெறி பிடித்த கொடுங்கோலராகத் தெரியவில்லை. மாறாக, அண்மையில் வெளிப்பட்டிருந்த புதியதொரு சூழலில் இயங்கிய துடிப்பான, முனைப்புமிக்க ஒரு மனிதராகவே அவர் தெரிகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் எஸ்.என். சென் தனது இந்திய வரலாறு குறித்த ஆய்வுகள் (Studies in Indian History) என்ற நூலில், திப்புவால் மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய மதமாற்றங்கள் அனைத்தும் மதரீதியான காரணங்களுக்காக அல்லாமல், அரசியல் நோக்கங்களுக்காகவே செய்யப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் என இரு தரப்பினரும் வெவ்வேறு கண்ணோட்டங்களில் எழுதியவற்றால் திப்புவின் பெயருடன் பல மிகைப்படுத்தப்பட்ட கதைகள் இணைக்கப்பட்டுள்ளன; அவரது ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவில் பெருமளவிலான இஸ்லாமிய மதமாற்றங்கள் நிகழ்ந்தன என்பது மறுக்க முடியாத உண்மை,
ஆனால், அவற்றில் பெரும்பாலானவை சிறைவாசத்தின் கொடுமைகளிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சியாகவோ, அல்லது அரச ஆதரவைப் பெறுவதற்கான வழியாகவோ இருந்தனவே தவிர, உண்மையான மதத் துன்புறுத்தலால் நிகழ்ந்தவை அல்ல.
முஸ்லிம் அல்லாதவர்கள் சிறைபிடிக்கப்பட்டதும் சிறையில் வைக்கப்பட்டதும் பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்காகவே இருந்தன; மதக் காரணங்களுக்காக அவை அரிதாகவே நிகழ்ந்தன. ஹைதர் மற்றும் திப்பு ஆகிய இருவரின் அரசவைகளிலும் பிராமணர்கள் உயர்ந்த இடத்திலேயே இருந்தனர்.
கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களின் 'ஆசஃப்'களாக (நிர்வாகத் தலைவர்களாக) ஒரே நேரத்தில் பிராமணர்களே இருந்தனர்; திப்பு மத விஷயங்களில் நடுநிலையோடு செயல்பட்டார். அரசு உயர் பதவிகளில் பல இந்துக்கள் திப்புவால் நியமனம் செய்யப்பட்டனர். அதில் திவான் பூர்ணய்யா, நிதி அமைச்சர் கிருஷ்ணாராவ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஹைதர் காஞ்சியில் (காஞ்சிபுரம்) ஒரு கோபுரத்தைக் கட்டுவதற்கான அடித்தளத்தை அமைத்தார், அதேவேளையில் திப்பு தெற்கு கனராவில் (South Canara) அழிக்கப்பட்ட தேவாலயங்களைக் கட்டித் தருவதாக உறுதியளித்தார்.
திப்புவின் எல்லைக்கு உள்பட்ட ஒவ்வொரு பகுதியிலும் ஒரு காஜியும், ஒரு பண்டிட்டும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு இந்து நீதிபதியும் ஒரு முஸ்லிம் நீதிபதியும் இருந்தனர். திப்பு இந்து அறநிலையங்களுக்கும் கோவில்களுக்கும் நன்கொடையாக நிலமும் நிதியும் வழங்கினார். குருவாயூர் கோவிலுக்கு 613.2 ஏக்கர் நிலமும் 1428 ரூபாய் 9 அணா 2 பைசா வருடாந்திர மானியமாகவும் கொடுத்ததாக சான்றுகள் உள்ளன.
மராத்திய ராணுவத் தளபதி ரகுநாத ராவ் 1791-ஆம் ஆண்டு சிருங்கேரி மடத்தைச் சூறையாடி கொள்ளையடித்துச் சென்றபோது சங்கராச்சாரியார் திப்புவின் உதவியை நாடினார். திப்பு பணம், உணவுப் பொருட்கள் கொடுத்தது மட்டுமின்றி சாரதா பீடத்தை மீண்டும் கட்டவும் உதவினார்.
சங்கராச்சாரியார் - திப்பு உறவு 1785-இல் சிருங்கேரி மடத்திற்கு திப்பு சர்வமான்யம் வழங்கிக் கௌரவித்ததிலிருந்து தொடர்ந்திருந்தது. சுல்தான், சிருங்கேரி மடத்தின் தலைவரான சுவாமி சச்சிதானந்த பாரதியை 'ஜகத்குரு' (உலகிற்கே குரு) என்று விளித்தார்.
இரண்டாம் ஆங்கிலேய - மைசூர் போரில் (1780-84) திப்பு ஆங்கிலேயருடன் போரிட்டுக் கொண்டிருந்தபோது நாயர்கள் ஆங்கிலேயர்க்கு ஆதரவாக திப்புவை எதிர்த்தனர். போரின் முடிவில் மலபார் திப்புவிடம் ஒப்படைக்கப்பட்டபிறகு சுமார் ஆறு ஆண்டுகள் மலபார் திப்புவின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது.
அப்போது திப்பு மேற்கொண்ட நிலச்சீர்திருத்தம் நிலக்கிழார்களாக (ஜென்மிஸ்) இருந்த நம்பூதிரிகளுக்கும், நாயர்களுக்கும் பாதகமாகவும், குத்தகை விவசாயிகளாக இருந்த மாப்பிள்ளை இஸ்லாமியருக்குச் சாதகமாகவும் இருந்தது.
மேலும் வர்த்தகம், தொழில் மைசூர் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததால் மேல்தட்டு வர்க்கத்தினர் அனைவரும் திப்பு எதிர்ப்பாளர்களாக இருந்தனர். அவர்களது எதிர்ப்பை மத ரீதியாகத் திரித்துப் பதிவு செய்த அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரி மார்க் வில்க்ஸின் கருத்தை ஒட்டியே வரலாறு தொடர்ந்து எழுதப்பட்டு வந்தது.
கட்டாய மதமாற்றத்தைப் பொறுத்தவரை, கூர்க் மற்றும் மலபார் பகுதிகளைச் சேர்ந்த நாயர்கள் ஆறு முறை தங்களுக்குக் கிடைத்த மன்னிப்புச் சலுகையைத் தவறாகப் பயன்படுத்தி ஏழாவது முறையாகக் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது, அவர்களை மதமாற்றம் செய்யும் தண்டனைக்கு உள்ளாக்கியதாகத் திப்புவே ஒப்புக்கொண்டுள்ளார்.
சென்னை ஆளுநரின் பாராட்டு
1783-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஆளுநர் மெக்கார்ட்னி திப்புவின் ஆளுமை குறித்துப் பேசுகையில், "ஹைதரின் வாரிசான இவர், தனது தந்தையின் தீய பழக்கங்களுக்கோ அல்லது கொடுங்கோன்மைக்கோ ஆளாகாத இளமையும் துடிப்பும் கொண்டவர். மக்கள் விரும்பும் சில நடவடிக்கைகள், புதிய ஆட்சியின் மீதான எதிர்பார்ப்புகள் மற்றும் ஐரோப்பிய பாணியிலான ராணுவக் கட்டுப்பாடு ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம், இவர் தனது தந்தையை விடவும் வலிமைமிக்க எதிரியாக உருவெடுக்கக்கூடும் என்று தோன்றுகிறது." என்று கூறியுள்ளார்.
அநேகமாக இந்தக் கண்ணோட்டத்தைக் கருத்தில் கொண்டே, போர் முடிவடைந்த பிறகு திப்புவுடன் ராஜதந்திர ரீதியிலான உறவை வளர்த்துக்கொள்ளும் கொள்கையை மெக்கார்ட்னி ஊக்குவித்தார்.
ராணுவ நடவடிக்கைகளின் போது கிழக்கிந்திய கம்பெனியின் படைகள் திப்புவின் ஆட்சிப் பகுதிகளுக்குள் நுழைந்தபோது, சுல்தானுக்கு எதிராக மக்களிடையே எந்தவிதமான கிளர்ச்சி மனப்பான்மையும் காணப்படவில்லை. மாறாக, திப்புவின் மீது மக்கள் மிகுந்த விசுவாசம் கொண்டிருப்பதையும், படையெடுத்து வந்த படைகளை அவர்கள் வலுவாக எதிர்த்ததையும் கண்டு கம்பெனி ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர்.
1791 ஜூலை 12 அன்று இந்தியாவிலிருந்து வந்த ஒரு கடிதத்தை 'தி மார்னிங் குரோனிக்கிள்' (The Morning Chronicle) இதழ் வெளியிட்டது;
"அனைவராலும் ஒரு கொடுங்கோலர் என்று கூறப்பட்ட திப்பு சுல்தான், உண்மையில் தனது குடிமக்கள் அனைவராலும் நேசிக்கப்படுகிறார் என்பது எங்களுக்கு வியப்பளிக்கிறது; மக்கள் இதுவரை கண்டிராத மிகச் சிறந்த நிர்வாகத்தை அவர் தனது நாட்டில் செயல்படுத்தி வந்ததை எங்கள் ராணுவம் ஆச்சரியத்துடன் அறிந்துகொண்டது.
அங்குள்ள மக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும், செழிப்பாகவும் வாழ்ந்து வந்தனர்; அவரைத் தங்கள் தந்தையைப் போலவே அவர்கள் கருதினர் – அவர்கள் எந்த மாற்றத்தையும் விரும்பவில்லை; உண்மையான குடிமக்கள் எவரும் அவரை விட்டு விலகவோ அல்லது அவரைக் கைவிடவோ இல்லை. இவை மறுக்க முடியாத உண்மைகள்; அங்கு எவ்விதமான ஒடுக்குமுறையும் இருந்ததற்கான சிறு அறிகுறி கூடத் தெரியவில்லை." என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரோடெரிக் மெக்கன்சி தனது வரலாற்று நூலில் இதே கருத்துகளை உறுதிப்படுத்தினார். சுல்தான் மீது சுமத்தப்பட்ட 'கீழ்நிலையில் உள்ளவர்களைக் கொடுமையாக நடத்தியது' என்ற குற்றச்சாட்டு உண்மையானதா, மிகைப்படுத்தப்பட்டதா அல்லது முற்றிலும் கற்பனையானதா என்பது ஒருபுறம் இருக்க, இப்பகுதியைச் சேர்ந்த அவரது குடிமக்கள் ஆட்சியின் மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில் காட்டிய தயக்கம் குறிப்பிடத்தக்கது என்று அவர் குறிப்பிட்டார். கிழக்கத்திய நாடுகளின் மக்கள் பொதுவாக இத்தகைய தயக்கத்தை அரிதாகவே வெளிப்படுத்துவார்கள்.
மேலும் மெக்கன்சி எழுதுகையில், "குர்ஆனின் கோட்பாடுகள் எவ்வளவேனும் மதப்பற்று அல்லது தீவிரப் போக்கு கொண்டவையாக இருந்தபோதிலும்", மைசூர் முழுவதும் கொள்ளையடிக்கப்படாமலோ அல்லது இடிக்கப்படாமலோ இருந்த ஏராளமான அலங்கரிக்கப்பட்ட இந்து ஆலயங்கள் இருந்தன; மக்கள் கம்பெனி படைகளுக்கு ஆதரவளிப்பதற்குப் பதிலாக, தாங்களாகவே முன்வந்து தங்கள் சொந்தப் பகுதிகளை அழித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினர்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பில் தனி இடத்தைப் பெற்றவர் திப்பு சுல்தான். கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகிகள், ராணுவத் தளபதிகள், இங்கிலாந்து நாட்டு மக்கள் ஆகிய அனைவர் மனதிலும் திப்பு ஏற்படுத்தியிருந்த அச்சம் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு நீடித்தது. இரு தலைமுறைக்குப் பின் இங்கிலாந்து சென்ற ராஜா ராம்மோகன் ராய் பிரிஸ்டல் நகர வீதிகளில் சென்றபோது இளைஞர் கூட்டம் ஒன்று 'திப்பு, திப்பு' என கூப்பாடு போட்டுக்கொண்டே அவர் மீது கல் எறிந்தது.
கட்டுரையாளரான கா.அ. மணிக்குமார், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற வரலாற்று பேராசிரியர் ஆவார்..
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் கீழ்க்காணும் நூல்கள் மற்றும் ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன:
- முகமது மொய்னுதீன், ஸ்ரீரங்கப்பட்டினத்தின் வீழ்ச்சி: திப்பு சுல்தானின் மரணத்திற்குப் பிறகு (Sunset of Srirangapattam: After the Death of Tipu Sultan), சங்கம் புக்ஸ், 2000.
- எஃப்.ஏ. நிக்கல்சன், கோயம்புத்தூர் மாவட்டக் கையேடு (Manual of the Coimbatore District), (சென்னை: அரசு அச்சகம், 1887), பக். 93-94.
- எம். ஆரோக்கியசாமி, கொங்கு நாடு: ஆரம்ப காலத்திலிருந்து ஆங்கிலேயர் வருகை வரையிலான கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களின் வரலாறு (The Kongu Country...), (சென்னை, சென்னை பல்கலைக்கழகம், 1956), ப. 403.
- எஃப்.ஏ. நிக்கல்சன், கோயம்புத்தூர் மாவட்டக் கையேடு, ப. 93.
- எம். ஆரோக்கியசாமி, கொங்கு நாடு, ப. 402.
- கா.அ. மணிக்குமார், போற்றுதற்குரிய திப்பு, தீக்கதிர், 23-11-2020.
- இஃப்திகார் ஏ. கான், திப்பு சுல்தானின் அரசு வர்த்தக நிறுவனத்திற்கான விதிமுறைகள் (The Regulations of Tipu Sultan for His State Trading Enterprise), இந்திய வரலாற்றுப் பேராயத்தின் நடவடிக்கைகள், தொகுதி 53 (1992), பக். 225-235.
- ராஜ்குமார், ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானின் கீழான மைசூர் கடற்படை (The Mysore Navy under Hyder Ali and Tipu Sultan), இந்திய வரலாற்றுப் பேராயத்தின் நடவடிக்கைகள், 52-வது அமர்வு, 1991-92, ப. 91.
- எம்.பி. ஸ்ரீதரன், பிரெஞ்சு அதிகாரிகளுக்கு திப்பு எழுதிய கடிதங்கள் (Tipu's Letters to French Officials), இந்திய வரலாற்றுப் பேராயத்தின் நடவடிக்கைகள், தொகுதி 45 (1984), பக். 503-508.
- கா.அ. மணிக்குமார், போற்றுதற்குரிய திப்பு.
- எம். ஆரோக்கியசாமி, கொங்கு நாடு, ப. 394.
- பூபேந்திர யாதவ், பொருளாதார மற்றும் அரசியல் வார இதழ் (Economic and Political Weekly), தொகுதி 25, எண்.52, 1990, பக். 2836.
- கே.என். பணிக்கர், ஆண்டவன் மற்றும் அரசிற்கு எதிராக: மலபாரில் மதம் மற்றும் விவசாயிகளின் எழுச்சிகள், 1836-1921 (Against Lord and State: Religion and Peasant Uprisings in Malabar, 1836-1921), (டெல்லி: ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், 1989), ப. 52.
- மைக்கேல் சொராகோ, கொடுங்கோலன் திப்பு சுல்தான் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அடையாளத்தின் மறுவடிவமைப்பு, 1780-1800 (Tyrant Tipu Sultan and the Reconception of British Imperial Identity, 1780-1800), மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரை, 2013.
- கா.அ. மணிக்குமார், பெரும் கலகத்தின் முன்னறிவிப்பு: வேலூர் புரட்சி, 1806 (Foreshadowing the Great Rebellion: Vellore Revolt, 1806), (ஹைதராபாத்: ஓரியண்ட் பிளாக்ஸ்வான், 2021).
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு