You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆயுஷி: "சுட்டுக் கொன்ற அப்பா, கொலைக்கு உதவிய அம்மா - மதுரா எக்ஸ்பிரஸ் சாலையில் சூட்கேசுக்குள் கிடந்த சடலம்" - களத்தில் பிபிசி விசாரணை
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
ஆயுஷி யாதவ் இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால், தனது 20வது பிறந்த நாளை எதிர்வரும் டிசம்பர் 1ஆம் தேதி கொண்டாடியிருப்பார்.
ஆனால் சரியாக ஒன்பது நாட்களுக்கு முன்பு, நவம்பர் 21 அன்று மாலை, மதுரா காவல்துறையின் மேற்பார்வையில் ஆயுஷியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் யமுனா விரைவுச்சாலையின் ஓரத்தில் கிடந்த ஒரு சூட்கேஸில் ஆயுஷியின் உடல் நவம்பர் 18ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.
நவம்பர் 17 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் அவரது வீட்டில், தனது உரிமம் பெற்ற ரிவால்வரால் அவரது தந்தை ஆயுஷியை சுட்டுக் கொன்றதாக போலீசார் கூறுகின்றனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள பதர்பூரில் ஆயுஷி தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார்.
ஆயுஷியின் தந்தை நித்தேஷ் குமார் யாதவ் தனது மனைவியுடன் சேர்ந்து சூட்கேஸில் ஆயுஷியின் உடலை வைத்து அதை வீசியதாக மதுரா காவல்துறை கூறுகிறது.
ஆயுஷியின் அறை முதல் தளத்தில் உள்ளது. இந்த அறையின் தரையில் ரத்தத்தின் தடயங்கள் உள்ளன. அந்த ரத்தம் சுத்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதில் படிந்த கறை ஆதாரமாக இன்னும் உள்ளது.
ரத்தம் தவிர, இந்த அறையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான எந்த ஒரு தடயமும் தெரியவில்லை.
அறை முழுவதும் சீராகக் காட்சியளிக்கிறது. ஆயுஷியின் புத்தகங்கள் நேர்த்தியாக வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களுக்கு இடையில் ரிவால்வர் பற்றிய ஒரு சிறுபுத்தகம் உள்ளது.
புத்தகங்களுக்கு இடையில் 'ஒரு காதல் ஒரு லவ்' டைரியும் உள்ளது. அந்த டைரியின் அட்டையை திருப்பிப்பார்த்தால் சிவப்பு மையால் 'லவ் ஜட்ஜ். தி லைஃப் டிசைனர். கரண் மை காட் ஜி' என்று எழுதப்பட்டிருந்தது.
இது தவிர டைரியின் மற்ற எல்லா பக்கங்களும் காலியாக உள்ளன. ஒரு புத்தகத்தில் ஆயுஷி தனது பெற்றோரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை வைத்திருக்கிறார்.
கண்ணாடி அலமாரியில் பல உதட்டுச்சாயங்கள் வைக்கப்பட்டுளன. அங்கு ஆயுஷியின் பர்ஸ் உள்ளது அதில் பாதி சாப்பிட்ட சாக்லேட் உள்ளது. பர்ஸில் சில குறிப்புகளும் உள்ளன.
அந்த அறையில் ஆயுஷியின் உலகம் இன்னும் இருக்கிறது.
சுவரில் ஆயுஷி தனது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியுடன் குழந்தையாக இருக்கும்போது எடுத்த குடும்ப புகைப்படம் உள்ளது.
படுக்கையில் ஒரு கரடி பொம்மை உள்ளது.
இந்த அறை ஆயுஷியின் உலகம் அவரை இரக்கமில்லாமல் கொன்றதை உணர வைக்கிறது. அவரது கனவுகள் இங்கி கிடக்கும் புத்தகங்கள், குறிப்பேடுகள், பர்ஸ் மற்றும் டைரியில் புதைந்து போயின.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் 'தைரியம்'
ஆயுஷி மிகவும் தைரியமாக தன் வயது இளைஞரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால், சாதி மறுப்பு திருமணம் காரணமாக ஆயுஷி கொல்லப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
அண்டை வீட்டில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான சந்தேகம் கூட ஏற்படவில்லை என்று நித்தேஷ் குமார் யாதவின் பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிவித்தனர்.
''பகலில் கண்டிப்பாக எதுவும் தெரியாது. சுற்றிலும் சத்தம். ஒரு சத்தம் வந்தாலும் அதன் மீது கவனம் போகாது. யாரோ பட்டாசு வெடித்திருப்பார்கள் என்றே தோன்றும்,” என்று அண்டை வீட்டு திவ்யா கூறினார்.
அக்கம்பக்கத்தினரிடம் ஆயுஷியை பற்றிக் கேட்டபோது, அவர் மிகவும் நல்லவர் என்றும் யாரிடமும் அதிகம் பேசமாட்டார் என்றும் சொன்னார்கள்.
ஆயுஷி தினமும் மாலையில் அருகிலுள்ள ராயல் ஜிம்மிற்கு செல்வார் என்று எல்லோரும் சொன்னார்கள். ராயல் ஜிம்மில் இருப்பவர்களிடம் கேட்டபோது, ஆயுஷி அங்கு வருவதை மறுத்தனர்.
சுற்றியிருப்பவர்கள் ஆயுஷியோடும் அந்தக் குடும்பத்தோடும் எந்த விதத்திலும் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பவில்லை.
உத்தர பிரதேசத்தில் உள்ள தேவரியாவை சேர்ந்தவர் நித்தேஷ் குமார் யாதவ்.
நித்தேஷ் தனது மனைவி, மகள் ஆயுஷி மற்றும் மகன் ஆயுஷ் ஆகியோருடன் பதர்பூரில் உள்ள மோல்ட்பந்த் எக்ஸ்டென்ஷனில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இந்தப் பகுதியில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். சாதி மறுப்பு திருமணம் பற்றி இங்கே மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தேன்.
ஜாதியின் பெருமை
அயோத்தியின் இந்திரதேவ் மிஸ்ரா மக்களின் வீடுகளில் பூஜைகள் செய்கிறார்.
வேறு ஜாதி திருமணத்தை அவர் எப்படி பார்க்கிறார் என்று அவரிடம் கேட்டேன்.
“இது ஒரு குற்றம். பெரும் பாவம். கழுதையும் நாயும் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்வது சரியா என்று நீங்கள் பார்க்க வேண்டும். அது பொருத்தமற்றதாக இருக்கும்.
எங்கள் முன்னோர்கள் நல்ல பண்புகளைக் கொண்டிருந்ததால் நாங்கள் பிராமணர்களாக உள்ளோம். எங்கள் சாதியை நினைத்துப் பெருமை கொள்கிறோம். பிள்ளைகளின் முடிவால் இந்தப் பெருமையை அழிய விட மாட்டோம்.
ஆனால் யாரேனும் அழிக்க முடிவு செய்துவிட்டால், அவரிடமிருந்து நான் என்னை விலக்கிக் கொள்வேன்,” என்று இந்திரதேவ் மிஸ்ரா கூறினார்.
“உன் வழியை நீயே பார்த்துக்கொள் என்று சொல்லிவிடுவேன். அவனுடைய விதிக்கே அவனை விட்டுவிடுவேன். உயிரைக் கொல்வது தவறு. என்னால் எமராஜன் ஆகமுடியாது.”
இதைச் சொல்லிவிட்டு இந்திரதேவ் மிஸ்ரா என் சாதியைக் கேட்டார்.
சாதி இல்லை என்று நான் சொன்னேன். "அப்படியானால் நீங்கள் கிறிஸ்தவராகி விட்டீர்களா? ஒரு இந்து சாதி இல்லாமல் இருக்க முடியாது,” என்று மிஸ்ரா கூறினார்.
ஆயுஷி ஜிம்மிற்கு செல்லும் வழியில் ஒரு வயதான பெண்மணி வண்டியில் காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்தார். அவரிடம் பேச ஆரம்பித்தபோது, தான் ஆக்ராவை சேர்ந்தவர் என்று சொன்னார்.
சாதி மறுப்பு திருமணம் குறித்து அவரிடம் கேட்டபோது, அது முற்றிலும் தவறு என்றார்.
“வேறொரு சாதியில் திருமணம் என்றால் ரத்தம் கொதிக்கிறது. பெற்றோர்கள் சிலநேரங்களில் தங்கள் குழந்தைகளைக் கொல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவரவர் சாதிக்குள் திருமணம் நடக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்..
இந்தப் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் சாதிக்கு வெளியே திருமணம் செய்யக் கூடாது என்று கூறினார்கள்.
நித்தேஷின் பக்கத்து வீட்டு பெண் திவ்யா ஒரு தலித். சாதி மறுப்பு திருமணங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, “முஸ்லிம்களை திருமணம் செய்யக் கூடாது என்று எங்களிடம் சொல்லப்படுகிறது.
ஆனால் இந்துக்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணத்திற்குப் பிறகு ஆயுஷி கணவருடன் சென்றிருக்க வேண்டும்.
பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும். அதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறு” என்றார்.
சகோதரரின் வாக்குமூலம்
நித்தேஷின் வயதான பெற்றோரும் அவருடன் ஒன்றாக வாழ்கின்றனர்.
நித்தேஷ் மற்றும் அவரது மனைவி பிரிஜ்பாலாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
நித்தேஷ் குமார் யாதவின் 17 வயது மகன் ஆயுஷ் விசாரணையில் உதவியதாகவும் அவர் தனது பெற்றோர் செய்த குற்றத்தின் முழு கதையையும் சொல்லியதாகவும் மதுரா காவல் கண்காணிப்பாளர் மார்தாண்ட் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆயுஷி பிசிஏ படித்து வந்தார். ஆயுஷியின் நோட்புக்கைப் பார்த்தால், சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்பது அவருடைய கனவு என்று தெரிகிறது.
ஆயுஷி படித்துக்கொண்டிருக்கும்போதே ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரை சேர்ந்த சத்ரபால் சிங் என்பவரை காதலித்தார். இந்த ஜோடி காதலை திருமணமாக மாற்றியது.
காதல் மரணத்திற்கு காரணமா?
ஆயுஷி 22 வயதான சத்ரபால் சிங் என்பவரை ஆர்ய சமாஜ் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதியின் திருமண சான்றிதழ் கிடைத்துள்ளது என்று மதுரா போலீசார் தெரிவித்தனர்.
திருமணத்திற்கு பிறகும் ஆயுஷி தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
தனது மகள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டது நித்தேஷ் குமார் யாதவுக்கு தெரிய வந்தது. இதனால் நித்தேஷ் குமார் யாதவ் கடும் கோபத்தில் இருந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
ஆயுஷிக்கும் அவர் பெற்றோருக்கும் இடையே பல மாதங்களாக பதற்றம் நிலவி வந்தது. நவம்பர் 17ஆம் தேதி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் ஆயுஷி எங்கோ சென்று வந்தார். அவர் வீடு திரும்பியபோது நித்தேஷ் குமார் யாதவ் ஆத்திரமடைந்தார்.
அப்போது நித்தேஷ் குமார் தனது உரிமம் பெற்ற ரிவால்வரால் ஆயுஷியை சுட்டதாக காவல்துறை தெரிவித்தது.
நித்தேஷ் யாதவ் வீட்டில் இப்போது அவருடைய 70 வயதான தாய் மட்டுமே உள்ளார். தாயார் பெயர் ஜாம்வந்தி. ஆயுஷியை யார் என்ன செய்தார்கள் என்று அவரிடம் கேட்டேன்.
சிறிது நேரம் அவர் அமைதியாக இருந்தார். பின்னர் அவர், “எனக்கு எதுவும் தெரியாது. கடந்த 15 நாட்களாக நான் மருத்துவமனையில் இருந்தேன். ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பிய போது, போலீசார் வீட்டிற்கு வந்திருந்தனர். என் மகன் மற்றும் மருமகளை போலீசார் அழைத்துச் சென்று விட்டனர்,” என்கிறார்.
நித்தேஷின் தாய் உண்மையில் 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்தாரா? கவிதா நித்தேஷின் பக்கத்து வீட்டுக்காரர். இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டபோது, “அவர் இங்கேதான் இருந்தார்” என்று பதில் அளித்தார்.
"இங்கு இருந்தாலும் என்ன செய்திருப்பார். மகன் அவரையும் அடிப்பது வழக்கம். மகன் மிகவும் கோபக்காரர். அக்கம்பக்க வீட்டாரிடம் குறைவாகவே பேசுவார். ஒருமுறை அக்கம்பக்கத்தில் ஒருவருடன் சண்டை வந்தபோது ரிவால்வரை வெளியே எடுத்துவிட்டார். வயதான பெற்றோர் கீழ் தளத்தில் வசிக்கின்றனர். ஆயுஷி தனது பெற்றோருடன் மாடியில் வசித்து வந்தார்,” என்று கவிதா மேலும் கூறினார்.
தன் மகன் கோபக்காரர் என்றும் தன்னுடன் சண்டை போடுவது வழக்கம் என்றும் ஆயுஷியின் பாட்டி ஒப்புக்கொள்கிறார்.
“அவள் என்னிடம் பேசுவதில்லை. படிப்பாள். பிறகு தன் அறைக்குச் சென்றுவிடுவாள். அவளுடைய தாய் அவள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தாள். பலமுறை என்னிடம் கொஞ்சம் பணம் கேட்பாள். ஆனால் இப்போது எதுவும் மிச்சமில்லை,” என்று ஜாம்வந்தி தனது பேத்தி ஆயுஷி பற்றி கூறினார்.
மகளை விட ஜாதி பெரியதா?
பதர்பூரில் உள்ள மோல்ட்பந்தின் தெரு எண் 65 இல் நித்தேஷ் யாதவுக்கு இரண்டு வீடுகள் உள்ளன. அவர் ஒன்றில் வசிக்கிறார், மற்றதை வாடகைக்கு விட்டுள்ளார். வாடகை வீட்டில் இருப்பவர்கள் ஆயுஷியைப் பற்றி எதுவும் பேசத் தயாராக இல்லை.
நித்தேஷின் பக்கத்து வீட்டுக்காரர் தனது பெயர் குறிப்பிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பெயரில் பேசினார்.
“குர்ஜர் சிறிய சாதி அல்ல. அந்தப் பெண் யாதவ். இவர்களை பெண் வீட்டார் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். நித்தேஷ் யாதவ் சுடுவதற்கு முன்பு அந்த இளைஞனை சந்தித்திருக்க வேண்டும். இருவரும் இளம் வயதினர். பையனின் பெற்றோரை சந்தித்திருந்தால் விஷயம் சுமூகமாக தீர்க்கப்பட்டிருக்கும்,” என்கிறார் அவர்.
விசாரணையின் போது நித்தேஷ் குமார் யாதவ் வருத்தம் தெரிவித்தாரா என்று மதுரா எஸ்பி மார்தாண்ட் சிங்கிடம் கேட்டபோது அவர், “கண்டிப்பாக வருத்தம் இருந்திருக்கலாம். ஆனால் நடந்தது நடந்துவிட்டது, என்ன வருகிறதோ அதைப் பார்த்துக்கொள்வோம் என்ற மனநிலையில் நித்தேஷ் இருப்பதுபோல எனக்குத் தோன்றியது,” என்றார்.
'சமூகத்தை விட அருங்காட்சியகங்களில் சாதிகள் பாதுகாப்பாக இருக்கும்'
பதர்பூர் மோல்ட்பந்த் பகுதியில் உள்ள சந்தையில் சீமா துணிக்கடை நடத்தி வருகிறார். அவர் ஒரு பிராமணர். பஞ்சாபை சேர்ந்த தலித் ஒருவரை மணந்துள்ளார்.
ஆயுஷியைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “ஆயுஷி தினமும் ஜிம்மிற்கு இந்த வழியாகத்தான் செல்வார். மிகவும் நிதானமாக காணப்படுவார். ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று பார்த்தாலே தெரியும். ஆனால் தந்தை இந்த அளவுக்குப் போவார் என்று நான் நினைக்கவில்லை. என் திருமணம் தொடர்பாக என் அம்மாவும் என்னை மிகவும் ஏசினார். அப்பாவுக்கும் கோபம் இருந்தது. ஆனால் ஒருவரின் உயிரை எப்படி எடுக்க முடியும்?" என்கிறார் அவர்.
“காதல், திருமணம் குறித்து தாங்கள் தான் முடிவெடுப்போம் என்ற நிபந்தனையுடன் பெற்றோர்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில்லை. தங்கள் சாதியின் பெருமையை்ப பேசும் இப்படிப்பட்ட பெற்றோர்கள் குழந்தையைப் பெற்றுக்கொள்ளவே கூடாது. இந்த சாதிகள் சமுதாயத்தை விட அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக இருக்கும்,” என்று சீமா மேலும் தெரிவித்தார்.
ஆயுஷி இப்போது இல்லை. அக்கம் பக்கத்து பெண்களின் பேச்சில் மட்டுமே அவர் இருக்கிறார்.
இப்போது எல்லாமே இயல்பாகக் காட்சியளிக்கின்றன.
மற்றொரு புறம் டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 28 வயதான ஆஃப்தாப் அமின் பூனாவாலா, 27 வயது காதலி ஷ்ரத்தா விகாஸ் வல்கரைக் கொன்று, உடலை பல துண்டுகளாக வெட்டி வீசிய செய்திகள் டெல்லியின் செய்தி சேனல்களில் வந்த வண்ணம் உள்ளன.
ஷ்ரத்தா பெற்றோர் சொல்வதைக் கேட்டிருந்தால் இந்த கதி வந்திருக்காது என்று டிவியில் பேசப்படுகிறது.
பெற்றோர் சொல்வதைக் கேட்டிருந்தால் இப்படி நடந்திருக்காது என்று ஆயுஷி விஷயத்திலும் பலர் சொல்கிறார்கள்.
ஷ்ரத்தாவும் ஆயுஷியும் தங்கள் பங்கு அன்பைப் பெறும் முயற்சியில் உயிரை இழந்துள்ளார்கள்.
காதலனும் தந்தையும் கொலைகாரர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஆனால், பெற்றோர் சொல்வதைக் கேட்டிருக்க வேண்டும் என்ற வாதம் மட்டும் அதன் வலுவை இழக்கவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்