You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பழனிசாமி தரப்பு செயல்பட்டது" - ஓபிஎஸ் தரப்பின் வாதங்கள்
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஜனவரி 10ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் முன்பு வழக்கு விசாரணை நடைபெற்றது.
ஜனவரி 4ஆம் தேதியில் இருந்து வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முக்கிய வாதங்களும் வைக்கப்பட்டன.
எடப்பாடி பழனிசாமிக்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக வைரமுத்து சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் நேற்றைய தினம் வாதிட்டார்.
பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு மட்டுமே உண்டு என்றும் வாதிட்டனர்.
"ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அப்போது தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், கட்சி விதிகளின்படி, பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் அவைத் தலைவருக்குக் கிடையாது என்றும் எனவே, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் செல்லாது என்றும் அவர் வாதிட்டார்.
மேலும், "ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர். அந்தப் பதவிக்கு தேர்தல் நடத்தப்படாது என்று ஏற்கெனவே அதிமுக விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
அதன் பின்னர், அந்த விதியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செயல்பட்டுள்ளனர்", என்று ஓபிஎஸ் தரப்பு வாதிடப்பட்டது.
வழக்கு விசாரணை இன்றும் தொடர்ந்தது. அப்போது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி வழக்கறிஞர் ரஞ்சித் குமார் தனது வாதங்களை முன்வைத்தபோது, அவை தமிழில் இருந்ததாலும் வழக்கிற்கு முக்கியமானதாகவும் இருப்பதால் அவற்றை யாராவது மொழிபெயர்த்து வாசிக்க முடியுமா என நீதிமன்ற அமர்வு கோரியதாக லைவ் லா குறிப்பிட்டுள்ளது.
மேலும், பொதுக்குழுவின் சிறப்பே அது அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவதுதான் என்றும் செயற்குழுவிற்கு விதிகளைத் திருத்தவோ அல்லது கட்சியின் சட்டவிதிகளின்படி முடிவெடுக்கவோ எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றும் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதங்களை வைத்ததாக லைவ் லா இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
1.5 கோடி முதன்மை உறுப்பினர்களின் நலனில் இருந்து, அவர்கள் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்றும் ரஞ்சித் குமார் தனது வாதத்தில் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் வாதம் நிறைவடைந்த நிலையில், வழக்கு விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கின் பின்னணி:
சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக, இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், சிறப்புத் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயசந்திரன், அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்றும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி & சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து செப்டம்பர் 2ஆம் தேதி தீர்ப்பளித்தனர்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவின் விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்