"பல உயிர்களை காத்தோம், இப்போது வீதியில் போராடுகிறோம்" - வேலைக்காக போராடும் 2,400 செவிலியர்கள்

MRB Nurses Protest
    • எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

"கொரோனா காலத்தில் பல உயிர்களை பாதுகாத்த நாங்கள், இன்று எங்கள் பணி பாதுகாப்புக்காக வீதியில் போராடி வருகிறோம்", இது பணி நீக்கம் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 400 செவிலியர்களுக்காக களத்தில் ஒலிக்கும் செவிலியர் தஸ்நேவிஸின் குரல்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தஸ்நேவிஸ், டிசம்பர் 30ஆம் தேதி பணிக்கு வந்து தனது வழக்கமான கடமைகளை செய்து வந்தார். அவருக்கு அப்போது தெரியாது, இன்று தான் இந்த வேலையில் தனக்கு கடைசி நாள் என்பது. தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட அரசாணை, தஸ்நேவிஸின் கைகளுக்கு கிடைக்கும் போது ஒரு நிமிடம் அவர் அதிர்ந்து தான் போனார்.

தமிழக அரசின் அந்த அரசாணையில், அரசு மருத்துமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அரசாணையின் மூலமாக 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பின் போது தமிழ்நாடு அரசு மருத்துமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்ட செவிலியர்கள் அனைவரும் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 400 செவிலியர்களில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தஸ்நேவிஸ் ஒருவர் ஆவார்.

அரசு கைவிரிப்பு

MRB Nurses Protest

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தஸ்நேவிஸ் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே நடைபெற்ற வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்கள் அனைவரும், தங்களுக்கு நிரந்தர ஒப்பந்த பணியாணை வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து போராடினர்.

 

போராட்ட களத்தில் இருந்த செவிலியர் தஸ்நேவிஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில்," 24 மணி நேரம் கூட முன்னறிவிப்புக்கு நேரம் தராமல் எங்களை வேலையை விட்டு அனுப்பிய இந்த அரசாணையால் நான் உட்பட எனது குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது. 2 குழந்தைக்கு தாயான எனது சம்பளம், வீட்டு வாடகை உள்ளிட்ட அவசியமான தேவைகளை பூர்த்தி செய்ய உதவியாக இருந்து வந்தது. வேலையில்லாத சூழலில் அடுத்த மாத செலவுகளை கணவரின் சம்பளத்தை மட்டும் வைத்து நடத்த முடியுமா என்று கேள்வி இப்போது எழுந்துள்ளது," என்றார்.

"மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக செவிலியர் பணிக்கான தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று இருந்த என்னை, கொரோனா தொற்று அதிகரித்து வந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, செவிலியராக பணியமர்த்தியது.

 நான் உட்பட ஆயிரக்கணக்கான செவிலியர்கள், அரசின் உத்தரவு வந்த மூன்றே நாளில் பணியில் சேர்ந்தோம். தூத்துக்குடியில் இருந்த நான், குடும்பத்தை விட்டு பிரிந்து வேலைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துமனையில் சேர்ந்தேன்.

 கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் உயிரை பொருட்படுத்தாமல், மக்களுக்கு சிகிச்சை அளிக்க உதவினோம். எனது கணவர், மாமியார் உட்பட குடும்ப உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போதும், வீட்டுக்கு செல்லாமல் மருத்துமனையில் நான் பணியில் இருந்தேன்," என்றார் தஸ்நேவிஸ்.

கைது செய்த காவல்துறை

Police Arrests MRB Nurses
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"14 ஆயிரம் ரூபாய் ஊதியத்துடன் பணியில் சேர்ந்த எனக்கு இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்தும், தமிழ்நாடு அரசு ஊதியத்தை உயர்த்தி தரவில்லை. இருந்தும் கொரோனா காலத்தின் போது பணியில் இருந்த எங்களை அரசு கைவிடாது என்று நம்பி இருந்த எனது நம்பிக்கையை ஒரே அரசாணையின் மூலமாக அரசு கலைத்து விட்டது.

இப்போது கையில் போராடுவதை தவிர வேறு வழியில்லாத நிலையில் களத்தில் நிற்கிறேன். கொரோனா தொற்றை வென்று பெயர் பெற்ற தமிழ்நாடு அரசு, அதற்கு உறுதுணையாக இருக்கும் செவிலியர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது," என்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தஸ்நேவிஸ் பேசினார்.

சேலத்தில் போராட்டம் நடத்தி வரும் செவிலியர்களுடன் மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. செவிலியர்களின் கோரிக்கையை அரசிடம் கொண்டு சேர்த்து விரைவில் தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் கூறியதை ஏற்க மறுத்து, செவிலியர்கள் அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்து அப்புறப்படுத்தினர்.

தமிழகம் முழுவதும் போராட்டம்

MRB Nurse Protest

சேலம் தவிர தமிழ்நாட்டில் சென்னை உட்பட அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் சார்பாக இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பாக நேற்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் காலியாக உள்ள செவிலியர்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலமாக நிரப்பி கொள்ளலாம் என்றும், இந்த பணிகளில் பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் விண்ணப்பித்து இணைந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுகாதாரத்துறையின் இந்த அறிவிப்பு தொடர்பாக பேசிய செவிலியர் ஜெனிஃபர், "போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் செவிலியர்களுக்கு நிரந்தர பணியை வழங்காமல் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை வழங்க அரசு முன் வந்து இருப்பது, பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை என்பதை காட்டுகிறது.

புதிய பணியிடங்களை உருவாக்கி எங்களை பணியமர்த்த வேண்டும் என்று எந்த செவிலியரும் போராடவில்லை. மாறாக தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்போது காலியாக உள்ள 2,500 பணியிடங்களை எங்களை வைத்து நிரப்ப வலியுறுத்தி தான் போராடுகிறோம். கைது செய்தாலும் நிரந்தர பணியாணை கிடைக்கும் வரை இந்த போராட்டம் ஓயாது," என்று தெரிவித்தார்.

என்ன சொல்கிறது தமிழ்நாடு அரசு?

Nurse in PPE Kit

பட மூலாதாரம், Getty Images

செவிலியர்களின் போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சேலம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர், இந்த விவகாரத்தில் வேலையிழந்த செவிலியர்களை அரசின் புதிய ஆணைப்படி மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களின் தேவைகேற்ப பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதனை செவிலியர்கள் மறுத்த நிலையில் அடுத்த கட்ட அறிவிப்பை தமிழ்நாடு அரசு தான் வெளியிடும், எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபடும் செவிலியர்களுக்கு தமிழக அரசு பல முறை ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது. ஆனால் நிரந்தர பணி வழங்குவது, தற்போது இருக்கும் நிதிச்சூழலில் கடினம் என்றும் இது குறித்த இறுதி முடிவை முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் கலந்து பேசி எடுப்பார்கள் என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் நம்மிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

புதிய அலையை எப்படி எதிர்கொள்வது?

சீனாவில் புதிய திரிபு கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஜனவரி மாதம் 3வது வாரத்தில் இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என்று இந்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு கொரோனா அலை வரும் போது, அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே தமிழ்நாடு அரசு செவிலியர்களிடம் பேசி உடனியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச்செயலாளர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பணி நிரந்தரம் சாத்தியமில்லை

மா.சுப்பிரமணியன்

பட மூலாதாரம், Twitter/Ma.Subramanian

செவிலியர்கள் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு மருத்துமனைகளில் பணியாற்றிய செவிலியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல.

நீதிமன்றங்களின் உத்தரவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் கடந்த நான்கு மாதங்களாக அவர்களுக்குச் சம்பளம் வழங்குவதில்கூட சிக்கல் நீடித்தது. கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்துவிடவேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

தற்போது சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 2,470 பணியிடங்களில் இந்த செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்படுவார்கள்.

மேலும் கொரோனா காலத்தில் வழங்கிய மாத ஊதியத்தை 14,000 ரூபாயில் இருந்து.18,000 ரூபாயாக உயரவிருக்கிறது. ஆனால் இப்போதைய சூழலில் இந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் என்பது சாத்தியமில்லை, என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, மத்திய பிரதேசம்: தீப்பந்துகளை வீசி ஊரே கொண்டாடும் விநோத திருவிழா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: