சாக்லேட் சாப்பிட்டால் வருமா? முகப்பரு இருந்தால் நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத விஷயங்கள்

முகப்பரு ஏன் வருகிறது?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மருத்துவர் ஹிமானி, கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

16 வயதான ராகுலுக்கு தேர்வுக் காலத்தில் நெற்றி மற்றும் மூக்கைச் சுற்றி சிறிய வெள்ளை, கருப்பு புடைப்புகள் தோன்றின. ஆரம்பத்தில் அவற்றை அவர் பெரிதாக கவனிக்கவில்லை. சில நாட்களில் அவை சிவந்து வலியையும் ஏற்படுத்தத் தொடங்கின. கையால் அழுத்திப் கிள்ளியதால் வீக்கம் மேலும் அதிகரித்தது.

இளம்வயதில் முகப்பரு வருவது இயல்பானதுதான். ஆனால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.

"முகத்தில் இரண்டு மூன்று பருக்கள்தானே... தானாகவே மறைந்துவிடும்" என்று பலர் நினைக்கிறார்கள். சிலர் பற்பசை தடவுகிறார்கள், முகத்தை அதிகமாகத் தேய்க்கிறார்கள், பருக்களை கிள்ளுகிறார்கள் அல்லது யாரோ பயன்படுத்திய கிரீம்களை தாமாக வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதன் விளைவாக, பருக்கள் குறைவதற்குப் பதிலாக கரும்புள்ளிகள், தழும்புகள், பள்ளங்கள் போன்ற நிரந்தர பாதிப்புகள் உருவாகக்கூடும்.

முகப்பரு என்பது அழகியல் பிரச்னை மட்டுமல்ல. இது தோலில் உள்ள முடி வேர்கள் மற்றும் எண்ணெய்ச் சுரப்பிகளை பாதிக்கும் நீண்டகால தோல் பாதிப்பாகும்.

சரியான நேரத்தில் சிகிச்சைப் பெற்றால், முகப்பருவை கட்டுப்படுத்துவதோடு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தழும்புகளையும் தவிர்க்க முடியும்.

முகப்பரு எவ்வாறு உருவாகிறது?

தோலில் உள்ள ஒவ்வொரு முடி வேரின் அருகிலும் ஒரு சிறிய எண்ணெய்ச் சுரப்பி உள்ளது. இது "செபம்" (Sebum) என்ற இயற்கை எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இது தோலை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.

பருவமடையும் வயதில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களின் தாக்கத்தால் செபம் அதிகமாக சுரக்கிறது. அதே நேரத்தில் இறந்த தோல் செல்கள் முடி வேர்களின் துளைகளில் தேங்கினால், தோல் துளைகள் அடைபடுகின்றன.

அதிக செபம், இறந்த தோல் செல்களின் தேக்கம், முடி வேர்களின் அடைப்பு, அழற்சி மற்றும் கியூட்டிபாக்டீரியம் ஆக்னஸ் (Cutibacterium acnes) என்ற பாக்டீரியாவின் செயல்பாடு ஆகியவை இணைந்து முகப்பருவை உருவாக்குகின்றன.

இதன் விளைவாக சிறிய சிவப்பு பருக்கள், சீழ் கொண்ட பருக்கள் போன்றவை தோன்றலாம்.

சிலருக்கு கடுமையான நிலைகளில் முடிச்சு போன்ற பருக்கள் அல்லது நீர்க்கட்டிகள் உருவாகி நிரந்தர தழும்புகளுக்குக் காரணமாகலாம்.

அதாவது, முகப்பரு என்பது "அழுக்கு காரணமாக மட்டுமே" ஏற்படுவது அல்ல.

முகப்பரு ஏன் வருகிறது?

பட மூலாதாரம், Getty Images

முகப்பருவின் வகைகள் என்ன?

வெள்ளைப் பருக்கள் (Whiteheads):

தோல் துளைகள் முழுமையாக அடைக்கப்பட்டதால் தோன்றும் சிறிய வெள்ளை புடைப்புகள்.

கருப்பு பருக்கள் (Blackheads):

தோல் துளைகள் திறந்த நிலையில் இருந்து, அதன் உள்ளே இருப்பவை காற்றுடன் வினைபுரிவதால் கருப்பாகத் தோன்றும். இது அழுக்கு தேங்கியதற்கான அடையாளமல்ல.

பாப்யூல்ஸ் (Papules):

சிவப்பு நிறத்திலும் வீக்கத்துடனும் காணப்படும் சிறிய பருக்கள்.

பஸ்ட்யூல்ஸ் (Pustules):

மேல்பகுதியில் வெள்ளை அல்லது மஞ்சள் நிற சீழ் கொண்ட பருக்கள்.

நோடியூல்ஸ் / சிஸ்ட்கள் (Nodules / Cysts):

தோலின் ஆழத்தில் உருவாகும் பெரிய மற்றும் வலி தரும் கட்டிகள். இவை தழும்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன.

முகப்பரு எவ்வளவு பொதுவானது?

முகப்பரு ஏன் வருகிறது?

பட மூலாதாரம், Getty Images

உலகளவில் மிகவும் பொதுவாகக் காணப்படும் தோல் நோய்களில் முகப்பரு ஒன்றாகும்.

2019 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய நோய்ச் சுமை (Global Burden of Disease) குறித்த ஆய்வின்படி, உலகம் முழுவதும் சுமார் 23.12 கோடி பேர் முகப்பருவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இது 1990-ஐ ஒப்பிடும்போது சுமார் 48 சதவீதம் அதிகமாகும்.

பிரிட்டனின் சுகாதாரம் மற்றும் பராமரிப்புக்கான தேசிய நிறுவன (UK National Institute for Health and Care Excellence) வழிகாட்டுதல்களின்படி, 11 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 80 சதவீதம் பேருக்கு வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் முகப்பரு ஏற்படும்.

அமெரிக்க தோல் மருத்துவ அகாடமியின் தகவல்படி, அமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 கோடி பேர் முகப்பருவால் பாதிக்கப்படுகின்றனர். இளம்பருவத்தினரில் 85 சதவீதம் பேருக்கு இது காணப்படுகிறது.

இந்தியாவிலும் முகப்பரு மிகவும் பொதுவான பிரச்னையாகும். குறிப்பாக 18 முதல் 25 வயதுக்கிடையே இது அதிகமாகக் காணப்படுகிறது.

முகப்பரு வருவதற்கான காரணங்கள் என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

1. ஹார்மோன்கள்

பருவமடையும் காலத்தில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிப்பதால் எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகமாக இயங்குகின்றன.

2. குடும்பப் பின்னணி

பெற்றோருக்கு முகப்பரு இருந்தால், குழந்தைகளுக்கும் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.

3. அதிக செபம் சுரத்தல்

அதிக எண்ணெய்ச் சுரப்பு தோல் துளைகளை அடைக்கக் கூடும்.

4. இறந்த தோல் செல்களின் தேக்கம்

இது முடி வேர்களின் துளைகளை மூடிவிடுகிறது.

5. அழற்சி மற்றும் பாக்டீரியா

முகப்பரு என்பது வெறும் பாக்டீரியா தொற்று மட்டும் அல்ல; அழற்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது.

6. சில ஹார்மோன் கோளாறுகள்

பெண்களுக்கு திடீரென கடுமையான முகப்பரு, ஒழுங்கற்ற மாதவிடாய், முகத்தில் அதிக முடி வளர்ச்சி போன்றவை இருந்தால், பிசிஓஎஸ் (PCOS) போன்ற ஹார்மோன் பிரச்னைகள் குறித்து மருத்துவரை அணுக வேண்டும்.

7. சில மருந்துகள்

கார்டிகோஸ்டீராய்டுகள், ஹார்மோன் மருந்துகள், லித்தியம் போன்றவை முகப்பருவைப் போன்ற தடிப்புகளை ஏற்படுத்தலாம்.

8. மனஅழுத்தம்

மனஅழுத்தம் நேரடி காரணமல்ல. ஆனால் ஏற்கனவே உள்ள முகப்பருவை மோசமாக்கக் கூடும்.

9. உணவு

"சாக்லேட் சாப்பிட்டால் முகப்பரு வரும்" என்பதற்கான உறுதியான அறிவியல் ஆதாரம் இல்லை. சில ஆய்வுகளில் அதிக குளுக்கோஸ் கொண்ட உணவுகள் மற்றும் பால் பொருட்களுடன் தொடர்பு காணப்பட்டாலும், எல்லோருக்கும் ஒரே உணவு காரணம் என்று கூற முடியாது.

முகப்பருவைத் தடுக்க என்ன செய்யலாம்?

முகப்பரு ஏன் வருகிறது?

பட மூலாதாரம், Getty Images

முகப்பருவை 100 சதவீதம் தடுக்க முடியாது. ஆனால் அதன் தீவிரத்தை குறைக்கலாம்.

  • தினமும் இரண்டு முறை மென்மையான கிளென்சரால் முகம் கழுவ வேண்டும்.
  • முகத்தை கடுமையாகத் தேய்க்கக் கூடாது.
  • எண்ணெய் அடிப்படையிலான அழகு சாதனங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • மேக்கப் பயன்படுத்தினால் இரவு தூங்குவதற்கு முன் முழுமையாக அகற்ற வேண்டும்.
  • துளைகளை அடைக்காத (Non-comedogenic) மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.
  • பருக்களை கைகளால் அடிக்கடி தொடக்கூடாது.
  • வியர்வை அதிகமாக வந்த பிறகு முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
முகப்பரு ஏன் வருகிறது?

பட மூலாதாரம், Getty Images

என்ன சிகிச்சைகள் உள்ளன?

முகப்பருவின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும்.

லேசான மற்றும் நடுத்தர அளவிலான முகப்பருவுக்கு வெளிப்புறமாகப் பயன்படுத்தும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இவை:

  • பாக்டீரியாவின் வளர்ச்சியை குறைக்க
  • அழற்சியைக் கட்டுப்படுத்த
  • புதிய பருக்கள் உருவாவதைத் தடுக்க உதவுகின்றன.

நடுத்தர அல்லது கடுமையான நிலைகளில்:

  • சில வகை ஆண்டிபயாடிக்
  • சில பெண்களுக்கு ஹார்மோன் சிகிச்சைகள்
  • கடுமையான முகப்பருவுக்கு சிறப்பு மருந்துகள்

போன்றவை தோல் மருத்துவரின் ஆலோசனையின்படி வழங்கப்படலாம்.

சிகிச்சையின் பலன் தெரிய எவ்வளவு நாள் ஆகும்?

முகப்பரு சிகிச்சை தொடங்கிய மறுநாளே மாற்றம் தெரியும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

பெரும்பாலான சிகிச்சைகளுக்கு 8 முதல் 12 வாரங்கள் வரை ஆகலாம்.

எனவே இரண்டு அல்லது மூன்று வாரங்களிலேயே பலன் இல்லை என்று மருந்துகளை மாற்றி மாற்றி பயன்படுத்துவது சரியல்ல.

பருக்களை கிள்ளினால் விரைவில் குணமா?

இல்லை.

பருக்களை கிள்ளுவது அல்லது அழுத்துவது...

  • வீக்கத்தை அதிகரிக்கும்
  • வலியை அதிகப்படுத்தும்
  • கரும்புள்ளிகள் உருவாகச் செய்யும்
  • நிரந்தர தழும்புகள் மற்றும் பள்ளங்கள் ஏற்படுத்தும்
  • ஒரு சிறிய பருவை கிள்ளி அகற்றிவிட்டோம் என்று நினைத்தாலும், அதன் தழும்பு பல ஆண்டுகள் நீடிக்கலாம்.
முகப்பரு ஏன் வருகிறது?

பட மூலாதாரம், Getty Images

முகப்பரு பற்றிய சில நம்பிக்கைகளும் உண்மைகளும் என்ன?

நம்பிக்கை: அசுத்தமான சருமத்தால்தான் முகப்பரு ஏற்படுகிறது.

உண்மை: முகப்பரு என்பது பல காரணிகளால் ஏற்படும் ஒரு சரும நோயாகும். இது அழுக்கினால் மட்டுமே ஏற்படுவதல்ல.

நம்பிக்கை: பருக்களை நசுக்கினால் விரைவில் குணமாகும்.

உண்மை: தழும்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

நம்பிக்கை: சாக்லேட் சாப்பிட்டால் கண்டிப்பாக முகப்பரு வரும்.

உண்மை: அனைவருக்கும் இது பொருந்தாது.

நம்பிக்கை : முகப்பரு பதின்பருவத்து ஆண்களுக்கு மட்டுமே வரும்.

உண்மை: பெண்களுக்கும், பெரியவர்களுக்கும் வரலாம்.

நம்பிக்கை: அடிக்கடி முகம் கழுவினால் முகப்பரு மறையும்.

உண்மை: அதிகமாகக் கழுவுவது எரிச்சலை அதிகரிக்கலாம்.

நம்பிக்கை: பற்பசை தடவினால் முகப்பரு குணமாகும்.

உண்மை: அது தோல் எரிச்சலை அதிகரிக்கலாம்.

முகப்பருவை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

  • தினமும் இரண்டு முறை மென்மையாக முகம் கழுவுங்கள்.
  • துளைகளை அடைக்காத தோல் பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
  • மருத்துவர் பரிந்துரைத்த சிகிச்சையைப் பின்பற்றுங்கள்.
  • சிகிச்சைக்கு போதிய காலம் கொடுங்கள்.
  • கடுமையான முகப்பரு இருந்தால் தோல் மருத்துவரை அணுகுங்கள்.
  • வலி தரும் கட்டிகள், சிஸ்ட்கள் அல்லது தழும்புகள் இருந்தால் தாமதிக்காதீர்கள்.
  • முகப்பருவால் தன்னம்பிக்கை பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் பேசுங்கள்.
முகப்பரு ஏன் வருகிறது?

பட மூலாதாரம், Getty Images

முகப்பரு இருந்தால் என்ன செய்யக் கூடாது?

  • பருக்களை கிள்ளுவது அல்லது அழுத்துவது.
  • அடிக்கடி முகம் கழுவி தேய்ப்பது.
  • பிறருக்குக் கொடுக்கப்பட்ட கிரீம்களைப் பயன்படுத்துவது.
  • மருத்துவரின் ஆலோசனையின்றி ஸ்டீராய்டு கிரீம்களைப் பயன்படுத்துவது.
  • ஆண்டிபயாடிக்கை தானாகத் தொடங்குவது.
  • "100% தீர்வு" என்று விளம்பரம் செய்யப்படும் சிகிச்சைகளை நம்புவது.
  • இரண்டு மூன்று நாட்களிலேயே சிகிச்சையை மாற்றுவது.

முகப்பரு என்பது "இளம்வயதில் எல்லோருக்கும் வரும் சாதாரண விஷயம்" என்று அலட்சியப்படுத்த வேண்டிய பிரச்னை அல்ல. அதே நேரத்தில், ஒவ்வொரு பருவுக்கும் அச்சப்பட்டு மிக அதிக செலவிலான சிகிச்சைகளைத் தேட வேண்டிய அவசியமும் இல்லை.

சரியான நேரத்தில், சரியான சிகிச்சை பெறுவதுதான் முக்கியம்.

பருக்களை கிள்ளாமல், தாமாக மருந்துகள் பயன்படுத்தாமல், தோல் மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றால், தழும்புகள் மற்றும் நிரந்தர பாதிப்புகளைப் பெரும்பாலும் தவிர்க்க முடியும்.

முகப்பரு உள்ள ஒருவரிடம் "முகம் கெட்டுப்போய்விட்டது" என்று கூறுவதை விட, "இது சிகிச்சை செய்யக்கூடிய ஒரு பொதுவான தோல் நோய்" என்று கூறுவது தான் அதிகம் உதவும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு