You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை, துப்பாக்கிச் சூடு சத்தம், கைதி மரணம் - என்ன நடந்தது?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள மஹர சிறைச்சாலையில் இன்று (ஆகஸ்ட் 1) பிற்பகல் ஏற்பட்ட அமைதியின்மையால் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து ராகமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
மஹர சிறைச்சாலைக்குள் இன்று பிற்பகல் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதன்போது, நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலதிகமாக போலீசார், விசேட அதிரடிப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், ராகமை போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறைச்சாலை கட்டடத் தொகுதியில் தீ பரவியதை அவதானிக்க முடிந்தது. அத்துடன், சிறைச்சாலைக்குள் துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாக சிறைச்சாலை வளாகத்தில் கூடியிருந்த கைதிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், துப்பாக்கி பிரயோகங்கள் நடாத்தப்பட்டமை தொடர்பில் தமக்குத் தகவல் கிடைக்கவில்லை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.
சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறுகின்றது.
சிறைச்சாலை வளாகத்தில் கண்ணீருடன் இருக்கும் உறவினர்கள்
மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை வளாகத்தில் கூடியுள்ளனர். சிறைச்சாலை நுழைவாயிலில் கூடியுள்ள கைதிகளின் உறவினர்கள், கோஷங்களை எழுப்பி, தமது உறவினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இதன்போது, நுழைவாயிலுக்கு அருகில் இருந்த பெண் ஒருவர் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
''எங்களுக்கு என்ன நடக்கின்றது எனத் தெரியாது. எங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகின்றது என்றும் தெரியாது. அங்கிருந்து சத்தம் மட்டும்தான் எங்களுக்குக் கேட்கின்றது" என்று சிறைச்சாலை வளாகத்திலுள்ள கைதி ஒருவரின் உறவினர் பெண் ஒருவர் கூச்சலிட்டு அழுதார்.
அதைத் தொடர்ந்து, உறவினர்களை அங்கிருந்து செல்லுமாறு பாதுகாப்புப் பிரிவினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் போது, உறவினர்களுக்கும் பாதுகாப்புப் பிரிவினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அங்கு மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இருப்பினும், கைதிகளின் உறவினர்களுக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும் இடையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன், சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட அமைதியின்மையும் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.
நீதி அமைச்சர் பதில்
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவம் தொடர்பில் தமக்குத் தகவல் கிடைத்து வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.
''கைதிகள் சிலர் கூரை மீது ஏறியுள்ளதாகத் தகவல் கிடைக்கின்றது. அதிகாரிகள், சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்" என்று நீதி அமைச்சர் பிபிசி சிங்கள சேவையிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்னை ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பான தகவல் இதுவரை தனக்குத் தெரிய வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
மஹர சிறைச்சாலை மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
போலீசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், போலீஸ் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொள்ளும் வாகனங்களும் சம்பவ இடத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - 28 பேர் மரணம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த மாதம் 5, 6 ஆகிய தேதிகளில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 28 பேர் உயிரிழந்திருந்தார்கள். இந்தச் சம்பவத்தில் சுமார் 100 பேர் வரை காயமடைந்திருந்தார்கள்.
கைதிகளுக்கு இடையில் ஆரம்பமான மோதல் பின்னர் கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையிலான மோதலாக மாற்றமடைந்தது. சிறைச்சாலை அதிகாரிகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து, அவர்கள் மீது கைதிகள் முதலில் தாக்குதல் நடாத்தியதை அடுத்தே இந்த மோதல் சம்பவம் வலுப்பெற்றிருந்தது.
இதன்போது நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக போலீசார் துப்பாக்கி பிரயோகங்களை நடாத்தியிருந்தனர். இந்தச் சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்தனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களில் 17 பேர் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்திருந்ததாக மரணப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்திருந்ததாக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின்போது தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், ஏனைய 11 பேரும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டபோது ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்ததாகவும் மரணப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு