You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வைரலான 'ஸ்ட்ராவை நக்கிய' செயல் - மாணவருக்கு சிங்கப்பூரில் ரூ.45 ஆயிரம் அபராதம் ஏன்?
- எழுதியவர், ஜோயல் குயின்டோ
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
ஆரஞ்சு ஜூஸ் வழங்கும் இயந்திரத்தில் இருந்து ஸ்ட்ராவை எடுத்து நக்கிவிட்டு மீண்டும் அதை விநியோகிக்கும் பெட்டியிலேயே வைத்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாணவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 600 சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 45 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.
19 வயதான டிடியர் காஸ்பார்ட் ஓவன் மேக்சிமிலியன் என்ற அந்த மாணவர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரில் படித்து வரும் மேக்சிமிலியன், "நகரம் பாதுகாப்பாக இல்லை" என்ற வாசகத்துடன், ஸ்டிராவை எடுத்து வாயில் வைக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பலரும் அருவருப்பும் அதிருப்தியும் தெரிவித்தனர். பின்னர் அது சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் உள்ளூர் செய்தி ஊடகங்களிலும் வெளியாகி கவனம் பெற்றது.
அந்த விற்பனை இயந்திரத்தை இயக்கும் ஐஜூஸ் நிறுவனம், மாணவரின் செயலுக்குப் பிறகு இயந்திரத்தில் இருந்த அனைத்து 500 ஸ்ட்ராக்களும் மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 2,000 சிங்கப்பூர் டாலர் அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்த வழக்கில் அரசு தரப்பும், மாணவர் தரப்பும் அபராதம் விதிக்க வேண்டும் என்றே நீதிமன்றத்தில் வாதிட்டன.
"இவ்வளவு பிரச்னைகளையும் ஏற்படுத்தியதற்கு மேக்சிமிலியன் உண்மையிலேயே வருந்துகிறார். அந்த நேரத்தில் அவருக்கு விளையாட்டாகத் தோன்றிய ஒன்று, மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது என்பதை அவர் உணர்ந்துள்ளார்" என்று அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியதாக 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு கோப்பைக்கு 2 சிங்கப்பூர் டாலர் என்ற விலையில் புதிதாக பிழிந்த ஆரஞ்சு ஜூஸை வழங்கும் ஐஜூஸ் விற்பனை இயந்திரங்கள், சிங்கப்பூரின் வணிகப் பகுதிகள், ரயில் நிலையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பொதுவாகக் காணப்படுகின்றன.
மார்ச் 12-ஆம் தேதி, குத்துச்சண்டை பயிற்சியை முடித்த பிறகு, சிங்கப்பூரின் வசதியான குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றான கோல்ட்ஹில் சென்டரில் உள்ள ஐஜூஸ் இயந்திரத்தில் இருந்து ஸ்ட்ராவை எடுத்த மேக்சிமிலியன், அதை வாயில் வைத்து நக்கிவிட்டு மீண்டும் இயந்திரத்தில் வைத்ததாக சேனல் நியூஸ் ஏசியா தெரிவித்துள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு