You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மொராக்கோவில் இருந்து கடலில் நீந்தி ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயினுக்குள் நுழைந்ததால் ஐரோப்பா அதிர்ச்சி
- எழுதியவர், சாரா ரெயின்ஸ்ஃபோர்ட் (ரோமில் இருந்து)
- எழுதியவர், அலிசியா கர்ரி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செயுட்டாவிற்குள் வியாழக்கிழமை கடல் வழியே நீந்தி நுழைந்ததைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த ஸ்பெயின் ராணுவப் படைகளை அனுப்பி வருகிறது.
புலம்பெயர்ந்தோரின் இந்தத் திடீர் வருகை தங்களுக்கு சுமையாக இருப்பதாக அந்தப் பிராந்தியத்தின் தலைவர் ஜுவான் ஜெசஸ் விவாஸ் கூறினார். ஸ்பெயின் அரசாங்கம் இதில் தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வெள்ளிக்கிழமை இப்பகுதிக்கு செல்கிறார். நிலைமையை உடனடியாக இயல்பு நிலைக்குக் கொண்டுவர அவர் உறுதியளித்துள்ளார்.
வியாழக்கிழமை புலம்பெயர்ந்தோர் நீந்தியும், காற்றடைத்த வளையங்கள் மற்றும் இதர மிதக்கும் உபகரணங்களைப் பயன்படுத்தியும் செயுட்டாவை நோக்கி நீந்தி செல்வதை வீடியோ காட்சிகள் காட்டின. அதே நேரத்தில் மற்றவர்கள் எல்லை வேலியிலுள்ள ஒரு கதவு வழியாக ஓடி வந்தனர்.
மொராக்கோவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள செயுட்டா, ஸ்பெயினின் முக்கிய நிலப்பரப்பிலிருந்து ஜிப்ரால்டர் நீரிணையால் பிரிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோருக்கான ஒரு முக்கிய மையப்புள்ளியாக நீண்ட காலமாக இருந்து வருகிறது.
செயுட்டா அல்லது மெலில்லாவை அடைய முயலும் போது கடலில் இடைமறிக்கப்படும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என்று இந்த மாத தொடக்கத்தில், ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மனிதக் கடத்தல் வலையமைப்புகள் அந்தத் தீர்ப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, " ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் குறிப்பாக இளைஞர்களின் வருகையை ஊக்குவிப்பதாக நம்புவதாக" ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புலப்பெயர்வு உட்பட அனைத்து விஷயங்களிலும் தாங்கள் மொராக்கோவுடன் ஒத்துழைப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. "செயுட்டாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த அனைவரையும் கூடிய விரைவில் திருப்பி ஒப்படைப்பது" உட்பட, இந்த விஷயத்தைக் கையாள்வதற்கான முயற்சிகளை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன என்றும் கூறியுள்ளது.
இந்த எல்லைக் கடப்பின் அளவு குறித்து முரண்பட்ட செய்திகள் உள்ளன, இந்த எண்ணிக்கை நூற்றுக்கணக்கிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வரை வேறுபடுகிறது.
ராய்ட்டர்ஸ் தகவலின்படி, வியாழக்கிழமை அன்று 2,000 முதல் 3,000 பேர் செயுட்டாவிற்குள் நுழைந்ததாக ஸ்பெயின் ஊடகங்கள் மதிப்பிட்டுள்ளன. ஆனால் சிவில் காவல் படை இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை என்று அவை கூறியுள்ளன.
பதற்றம் அதிகரித்ததால், வியாழக்கிழமை பிற்பகுதியில் மோதல்கள் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாயின.
செயுட்டா எல்லைக்கு அருகிலுள்ள மொராக்கோ நகரமான ஃபினிடெக்கில், மொராக்கோ அதிகாரிகள் புலம்பெயர்ந்தோர் எல்லையைக் கடப்பதைத் தடுக்கும் முயற்சியில் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வட ஆப்பிரிக்காவில் உள்ள ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான மெலில்லாவில், பெனி அன்சார் எல்லைப் பகுதியில் மோதல்கள் நடந்ததை உள்ளூர் ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் வீடியோக்கள் உறுதிப்படுத்தின.
இதற்கிடையில், ஸ்பெயினின் பொது ஒளிபரப்பு நிறுவனமான ஆர்டிவிஇ பகல் நேரத்தில் "நூற்றுக்கணக்கானோர்" அந்தப் பகுதிக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் பெரும்பாலும் 1,500-க்கும் மேற்பட்ட இளம் மொராக்கோ புலம்பெயர்ந்தோர் செயுட்டாவை அடைந்துள்ளனர் என்றும் அது கூறியுள்ளது.
சமீபத்திய மாதங்களில் கடலில் இருந்து 60 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக விவாஸ் தெரிவித்ததாக ஆர்டிவிஇ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த திடீர் அதிகரிப்பு மே 2021 உடன் ஒப்பீடுகளைத் தூண்டியுள்ளது. அப்போது சில நாட்களில் சுமார் 8,000 பேர் செயுட்டாவிற்குள் நுழைந்தனர். இது மொராக்கோவுடனான ராஜதந்திர பதற்றங்களை மோசமாக்கியது.
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்பெயினின் செயுட்டா மற்றும் மெலில்லா பகுதிகள், ஆப்பிரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே நில எல்லையாக இருக்கின்றன.
சமீபத்திய ஆண்டுகளில் கண்காணிப்பை அதிகரித்தல், வேலியை வலுப்படுத்துதல் மற்றும் மொராக்கோவுடன் மேம்படுத்தப்பட்ட இருதரப்பு உறவுகள் மூலம் இந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பை ஸ்பெயின் அதிகாரிகள் அதிகரித்துள்ளனர். ஆனாலும் மக்கள் தொடர்ந்து எல்லையைக் கடக்க முயற்சிக்கின்றனர்.
இந்த எல்லை மீறல் இத்தாலியுடன் ஒரு அரசியல் மோதலையும் தூண்டியுள்ளது. ஸ்பெயினை ஷெங்கன் (Schengen) மண்டலத்திலிருந்து தற்காலிகமாக நீக்க வேண்டும் என்று இத்தாலி கோரியுள்ளது. இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி "எல்லைகளையும் குடிமக்களின் பாதுகாப்பையும் காக்க அசாதாரண நடவடிக்கைகளுடன் தலையிடத் தயாராக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், செயுட்டாவில் இருந்து வந்துள்ள காட்சிகள் "அதிர்ச்சியளிக்கின்றன" என்றும், " ஐரோப்பாவின் எல்லைகளின் பாதுகாப்பிற்கு கட்டுப்பாடற்ற சட்டவிரோத குடியேற்றம் ஒரு உறுதியான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது" என்பதை இது காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.
அவரது கருத்துகள் இத்தாலி வெளியுறவு அமைச்சர் அண்டோனியோ தஜானியின் கருத்துகளைப் பிரதிபலித்தன.
தஜானி தனது அரசியல் ஆதாயங்களுக்காகப் புலம்பெயர்வு விவகாரத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாக ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் லூயிஸ் அல்பாரெஸ் குற்றம் சாட்டினார்.
"ஐரோப்பிய ஒற்றுமையை எதிர்பார்க்கும் ஒரு பங்காளியாகவும் நட்பு நாடாகவும் இருக்கும் ஒருவரிடமிருந்து, இதுபோன்ற கட்சி சார்பான வெற்று முழக்கங்கள் முறையற்றவை" என்று அவர் கூறினார்.
புலம்பெயர்ந்தோர் நுழைவின் இந்த திடீர் அதிகரிப்பு மே 2021 உடன் ஒப்பீடுகளைத் தூண்டியுள்ளது. அப்போது சில நாட்களில் சுமார் 8,000 பேர் செயுட்டாவிற்குள் நுழைந்தனர். இது மொராக்கோவுடனான ராஜதந்திர பதற்றங்களை மோசமாக்கியது.
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்பெயினின் செயுட்டா மற்றும் மெலில்லா பகுதிகள், ஆப்பிரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே நில எல்லையாக இருக்கின்றன.
சமீபத்திய ஆண்டுகளில் கண்காணிப்பை அதிகரித்தல், வேலியை வலுப்படுத்துதல் மற்றும் மொராக்கோவுடன் மேம்படுத்தப்பட்ட இருதரப்பு உறவுகள் மூலம் இந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பை ஸ்பெயின் அதிகாரிகள் அதிகரித்துள்ளனர். ஆனாலும் மக்கள் தொடர்ந்து எல்லையைக் கடக்க முயற்சிக்கின்றனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு