You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி': நிபுணர்கள் கூறும் நடைமுறை சவால்கள்
தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தப் பரிந்துரை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்தான மாநில அரசின் யோசனை ஆரோக்கியமானதாகத் தோன்றினாலும் அதில் நடைமுறை சிக்கல்களும் சவால்களும் இருப்பதாக கல்வியாளர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். அவர்கள் கூறியது என்ன? அதற்கு அமைச்சர் அளித்த ராஜ்மோகன் பதில் என்ன?
சத்துணவுத் திட்டத்தில் தற்போது கிடைக்கும் ஊட்டச்சத்துகள்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், ஏழு முதல் ஒன்பது வயது வரையிலான குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு சுமார் 1,700 கிலோகலோரி ஆற்றலும் 23.3 கிராம் புரதமும் தேவை எனப் பரிந்துரைக்கிறது.
அதேபோல, "10-12 வயதுடைய குழந்தைகளுக்கு ஏறக்குறைய 2,060-2,220 கிலோகலோரி ஆற்றல் மற்றும் 31.8-32.8 கிராம் புரதம் தேவைப்படுகிறது. 13-15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அதைவிட அதிகமான ஆற்றலும் சுமார் 43-45 கிராம் புரதச்சத்தும் தேவைப்படுகிறது," என்று தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் தரவுகள் கூறுகின்றன.
"தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் தொடக்கப்பள்ளி மதிய உணவுத் திட்டம் ஒரு மாணவருக்கு சுமார் 557 கிலோகலோரி ஆற்றலும் 18.92 கிராம் புரதச்சத்தும் கிடைப்பதை உறுதி செய்கின்றன. அதேபோல, நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, சுமார் 735 கிலோகலோரி ஆற்றல், 22.77 கிராம் புரதச்சத்து கிடைப்பதை உறுதி செய்கிறது." என்று தமிழ்நாடு சமூக நலத்துறை 2025-26 அறிக்கை கூறுகிறது.
சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், முட்டை ஆகியவை வழங்கபடுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இவைபோக, "காலை உணவில் காய்கறி உப்புமா, சாம்பார், பொங்கல் போன்றவை வழங்கப்படுவதாகவும், இதன் மூலம் சுமார் 293 கிலோகலோரி ஆற்றலும் 9.85 கிராம் புரதச்சத்தும் கிடைப்பது உறுதி செய்யப்படுவதாகவும்" முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கோழி இறைச்சி உயர்தர புரதத்தையும் முக்கியமான நுண் ஊட்டச்சத்துகளையும் வழங்கக்கூடும். ஆனால், சிக்கன் பிரியாணியின் ஊட்டச்சத்து மதிப்பு என்பது அதிலுள்ள இறைச்சி, அரிசி, காய்கறிகள், எண்ணெய், உப்பு ஆகியவற்றின் அளவைப் பொறுத்தே அமையும்," என்று ஊட்டச்சத்து நிபுணர் ரேஷ்மா அலீம் விளக்கினார்.
இதுகுறித்துப் பேசிய அவர், "மிகக் குறைந்த அளவிலான இறைச்சியுடன் அதிகளவு அரிசியைக் கொண்ட உணவு, குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கத்திற்கு உதவாது. அதுமட்டுமின்றி, சிக்கன் போன்ற இறைச்சிகளை காய்கறிகள், முட்டை ஆகியவற்றைப் போல இயல்பாக வைத்திருக்க முடியாது. சில மணிநேரமாகவே இருந்தாலும், அவற்றை முறையாக அழுகிவிடாமல் பராமரிக்கப் போதிய வெப்பநிலை மேலாண்மை அவசியம்." என்று எச்சரித்தார்.
மிக முக்கியமாக "ஒருவேளை தொடக்கப்பள்ளி அல்லது நடுநிலைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இறைச்சித் துண்டு அல்லது எலும்புகள் அவர்களின் தொண்டையில் சிக்கும் ஆபத்தும் உள்ளது." என்றார் அவர்.
சிக்கன் பிரியாணி வழங்குவதில் உள்ள நடைமுறை சவால்கள்
பள்ளியில் வழங்கப்படும் உணவுகள் கற்றலை மேம்படுத்தும் என்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
"குழந்தைகளுக்கு சுவை மிகுந்த உணவை வழங்குவதில் எவ்வித தவறும் இல்லை என்றாலும், ஏற்கெனவே போதிய ஊட்டச்சத்துகளை வழங்கக்கூடிய உணவு வழங்கல் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. அதோடு அரசுப் பள்ளிகளில் சமூகத்தின் பலதரப்பட்ட மாணவர்கள் இருப்பார்கள் என்பதால் சைவ உணவு சாப்பிடுவோருக்கும் இறைச்சிக்கு நிகரான மாற்றீடுகளைத் திட்டமிட வேண்டியது அவசியம்" என்றும் கல்வியாளர் நெடுஞ்செழியன் அறிவுறுத்துகிறார்.
இவைபோக, "பள்ளிகளில் இறைச்சி வழங்கத் தொடங்கும்போது, வீணாகும் கழிவுகளைச் சாப்பிட நாய்கள் கூடத் தொடங்கும். இது பள்ளிகளின் சுகாதாரம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிவிடும்," என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் (UDISE+) 2024-25 அறிக்கையை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் 95,353 மாணவர்கள் பயிலும் 3,671 ஒரேயொரு ஆசிரியரைக் கொண்ட பள்ளிகள் இருப்பதாக கூறும் கல்வியாளர்கள், "அத்தகைய பள்ளிகளில் பணியில் இருக்கும் ஒற்றை ஆசிரியரே பல்வேறு வகுப்புகளையும் எடுப்பது, நிர்வாகப் பணிகள், உணவு மேற்பார்வை, பள்ளிப் பதிவேடுகள் ஆகியவற்றை நிர்வகிப்பது என அனைத்தையும் செய்ய வேண்டியிருக்கும்" என்கின்றனர்.
"ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் இத்தகைய பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலைகள் மற்றும் தேவைகளில் கவனம் செலுத்துவதே, இப்போது தலையாய தேவையாக உள்ளது" என்று நெடுஞ்செழியன் வலியுறுத்துகிறார்.
அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சிக்கன் பிரியாணி வழங்க பரிசீலனை என்று அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி அளித்ததுமே அதுகுறித்து பலவாறான விவாதங்கள் சமூக ஊடகங்களில் கிளம்பின. இதைத் தொடர்ந்து, அதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்த பரிசீலனை மட்டுமே நடந்து வருவதாகவும் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
"அரசுப் பள்ளிகளில் இருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான முன்மொழிதலை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளேன். அதன்படி விரைவில் அரசுப் பள்ளிகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்," என்றும் அவர் கூறியுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு