You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தர்மேந்திர பிரதான் ராஜிநாமா ஏன்? விஜய் வெற்றி, ஆர்எஸ்எஸ் உள்பட நிபுணர்கள் கூறும் 5 விஷயங்கள்
- எழுதியவர், இஷாத்ரிதா லாஹிரி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்தியாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் நிகழ்ந்த இளைஞர் போராட்டங்களின் எழுச்சியைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை மதியம் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
முன்னதாக போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்புகளிலிருந்து வந்த கோரிக்கைகளை நிராகரித்து வந்த மோதி அரசுக்கு இது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இத்தகைய நிகழ்வுகள் முன்பு நடக்காத ஒன்றல்ல என்றாலும், மிகவும் அரிதானதே. ஏனெனில் மோதி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் கடந்த 12 ஆண்டுகளில் பொது அழுத்தம் காரணமாக எந்த அமைச்சரும் பதவி விலகியதில்லை.
2018-இல் மீடூ குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து வெளியுறவு இணையமைச்சராக இருந்த எம்ஜே அக்பர் ராஜிநாமா செய்தது தான் சமீபத்திய முன்னுதாரணமாக உள்ளது.
2021-இல் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து மூன்று வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது தான் மக்கள் போராட்டங்களின் விளைவாக அரசு தனது கொள்கையை மாற்றிக் கொண்ட கடைசி நிகழ்வாக உள்ளது.
2020-இல் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் அப்போது இத்தகைய தளர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை.
அப்படியிருக்க இம்முறை போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு பணிந்து போக அரசாங்கத்தை எது நிர்பந்தித்தது? தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டிய சூழல் ஏன் உருவானது என்பதைத் தெரிந்து கொள்ள அரசியல் ஆய்வாளர்களிடம் பிபிசி பேசியது.
1. போராட்டங்களின் அளவு
இந்தப் போராட்டங்களின் எதிர்பாராத அளவு தான் அரசாங்கம் இறங்கி வந்ததற்கு முதன்மையான காரணியாக இருக்கும் எனப் பல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சமூக ஊடகங்களில் தொடங்கிய இயக்கம் நாடு முழுவதும் பரவி பல்வேறு நகரங்களில் கடந்த சில நாட்களாக பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன.
மோதி அரசு தங்களின் அரசியல் மூலதனம் விலகிச் செல்வதாக இந்த நிகழ்வுகளைப் பார்த்தது என்கிறார் அரசியல் எழுத்தாளர் அதிதி ஃபட்னிஸ்.
பிபிசியிடம் பேசிய அவர், "பரந்த அளவிலான இந்த ஆவேசத்தின் வெளிப்பாடு, குறிப்பாக 2024-இல் தனிப் பெரும்பான்மை பெறாத மோதி அரசுக்கு கவலையளிப்பதாக இருந்தது. இதைக் கையாள்வதற்கான உண்மையான திட்டம் எதுவுமில்லை. இன்றைய சமூக ஊடக உலகில், போராட்டங்களின்போது முக்கிய தொடர்பு வடிவமாக இருந்த சமூக ஊடகங்களின் மூலம் செய்திகளும் கருத்துகளும் காட்டுத்தீ போல பரவுகின்றன." என்று தெரிவித்தார்.
இந்தப் போராட்டங்களின் அளவு தான் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தளர்த்தி பிரதானை பதவி விலகுமாறு கேட்க வைத்திருக்கும் என்கிறார் பேராசிரியர் ஹரிஷ் வான்கடே. இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வுகள் மையத்தில் பணியாற்றுகிறார்.
"இந்த இயக்கத்தின் நாடு தழுவிய தன்மை கவலையளிக்கக் கூடிய ஒன்றாக இருந்திருக்கலாம். இன்று இது டெல்லியை மையப்படுத்திய இயக்கம் இல்லை. அரசாங்கம் எப்போதுமே இளைஞர்களை ஒரு முக்கியமான வாக்கு வங்கியாகப் பார்த்து வந்துள்ளது. இளைஞர்கள் தங்களிடம் இவ்வாறு நடந்து கொள்வார்கள் என அவர்கள் நினைத்திருக்கவில்லை. பிரதமரின் இன்ஸ்டாகிராம் பதிவுக்குப் பிறகும் கூட உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை." என்கிறார் வான்கடே.
2. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர்
இந்தச் சூழலை தணிக்க வேண்டும் என அரசாங்கம் விரும்பியதற்கு தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரும் ஒரு காரணம் என்கிறார் எழுத்தாளரும் கட்டுரையாளருமான நீர்ஜா சௌத்ரி.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கடந்த முறை தோல்வியடைந்த தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டு வரும் நம்பிக்கையில் அரசாங்கம் இருக்கிறது. இந்த மசோதாவை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருந்த அரசு இந்தக் கூட்டத்தொடரில் அதனை நிறைவேற்றிவிட வேண்டும் என விரும்புகிறது." என்றார்.
இந்தக் கூட்டத்தொடரில், குறிப்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வீதிகளில் இறங்கிப் போராடியதால் பிம்பம் அவருக்குச் சாதகமாக மாறி வந்தது என்கிறார் பேராசிரியர் வான்கடே.
மேலும் அவர், "இது பல்வேறு வழிகளில் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டியது. இந்த முறை நாடாளுமன்றம் செயல்படாமல் இருந்ததற்கான பொறுப்பு எதிர்க்கட்சிகளுடையது என்று இல்லாமல், அரசாங்கத்தினுடையதாகப் பார்க்கப்பட்டது." எனத் தெரிவித்தார்.
3. அடுத்து வரவிருக்கும் தேர்தல்கள்
அடுத்து வர இருக்கும் தேர்தல்களும் பிரதமர் மற்றும் பாஜகவின் எண்ணங்களில் இருந்திருக்கலாம் என்கிறார் பேராசிரியர் சந்திரசூர் சிங். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடம் கற்பித்து வருகிறார்.
அடுத்த பெரிய மாநிலத் தேர்தல் 2027-இல் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற இருக்கிறது.
"இந்த வெற்றிக் களிப்பில் இருக்கும் எதிர்க்கட்சிகள் உத்தரப் பிரதேச தேர்தலுக்கு முன்பாக அதன் பொலிவை இழப்பார்கள் என அரசாங்கம் நினைக்கிறது. 2029 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. எனவே பிரதமர் இதனால் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் மீள்வதற்கான காலம் அவருக்கு இருக்கிறது." என்கிறார் சிங்.
தமிழ்நாட்டில் விஜய் போல ஜென் ஸி தலைமுறையால் நிகழ்ந்த அரசியல் வெற்றிகளின் உதாரணங்கள் பாஜகவின் எண்ணத்தில் மறைந்திருக்கலாம் என்கிறார் நீர்ஜா சௌத்ரி.
"வாக்காளரில் முதல்முறை மற்றும் இரண்டாம் முறை வாக்காளர்கள் மிகப் பெரிய மற்றும் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றனர். உத்தரப் பிரதேசம் போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலத்தின் தேர்தலுக்கு முன்பாக அவர்களை பகைத்துக் கொள்ள் அரசாங்கம் விரும்பாது," என்று அவர் தெரிவித்தார்.
4. ஆர்எஸ்எஸ்-சின் பங்கு
தேர்தல் அரசியலையும் தாண்டி புதிய தொண்டர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்-இன் முயற்சிகளில் இளைஞர்களே எப்போதும் கவனம் பெற்றுள்ளனர் என்கிறார் பேராசிரியர் சந்திரசூர் சிங்.
பாஜக உடன் பிரித்தறிய முடியாதவாறு ஆர்எஸ்எஸ் பிணைக்கப்பட்டிருப்பதால், கட்சியை நோக்கி இளைஞர்கள் வெளிப்படுத்தும் கோபத்தை அவர்கள் விரும்பியிருக்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஜென் ஸி தலைமுறையை தங்கள் பக்கம் இழுக்க ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. இந்தியா இளைஞர்கள் நிறைந்த நாடு. கல்வித் துறையில் நீண்டகாலமாக இயங்கி வரும் ஆர்எஸ்எஸ் இந்தியாவின் கல்வி நிறுவனங்கள் மீது பிடியை வைத்திருக்க விரும்புகிறார்கள்." என்றார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் மாணவர்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றனர் என்று கூறும் அதிதி ஃபட்னவிஸ், இந்த அளவிற்கான மாணவர்களின் கோபம் அவர்களைப் பாதிக்கும் என்றும் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் மாணவ அமைப்பான அகில் பாரதிய வித்யார்தி பரிஷத்துக்கு (ஏபிவிபி), நாடு முழுவதும் நடைபெறும் இத்தகைய இளைஞர் போராட்டங்களால் இழப்பதற்கு அதிகம் உள்ளது. மாணவர்கள் தான் அவர்கள் கவனம் செலுத்தும் குழுவாக உள்ளனர். இனி நாடு முழுவதும் நடைபெறும் மாணவர் சங்க தேர்தல்கள் மற்றும் அவற்றில் ஏபிவிபி எவ்வாறு சோபிக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்." என்றார்.
5. இந்திய துணைக் கண்டத்தில் மாணவர் போராட்டங்கள்
தர்மேந்திர பிரதான் தனது ராஜிநாமா கடிதத்தில் "சீர்குலைக்கும் சக்திகள்" தங்களின் நோக்கங்களை நிறைவேற்ற போராட்டங்களைப் பயன்படுத்துவதாக குறிப்பிட்டிருந்ததை நீர்ஜா சௌத்ரி சுட்டிக்காட்டுகிறார்.
இது அரசாங்கம் இந்திய துணைக் கண்டம் மற்றும் தெற்காசியாவில் நிலவும் அரசியல் நிலைமையையும் கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கும் என்பதைக் காட்டுவதாக அவர் தெரிவிக்கிறார்.
"வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்கள் மாணவர்களின் போராட்டங்களால் கவிழ நேர்ந்தது. இந்தியா மிகப்பெரிய நாடு என்பதோடு, அதுபோன்றதொரு நிகழ்வு நடப்பதற்கு சாத்தியமில்லாத வகையிலான ஒரு வலுவான ஜனநாயக நாடாகும். ஆனாலும் ஏன் அந்த ஆபத்தான சூழலுக்கு வழிவகுக்க வேண்டும்?" என்றும் அவர் தெரிவித்தார்.
பேராசிரியர் சந்திரசூர் சிங் இந்த அவதானிப்புடன் உடன்படுகிறார். வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் நடந்ததைப் போன்ற சூழலை இந்தியா சந்திப்பதற்கான சாத்தியங்கள் இல்லையென்றாலும் அது அரசாங்கத்தின் எண்ணங்களில் நிச்சயம் வந்துபோகும் என்று அவர் தெரிவிக்கிறார்.
மேலும் அவர், "அத்தகைய சூழல் உலகளவில் பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் மதிப்பைக் குறைத்திருக்கும். அது முதலீடுகளைப் பாதித்து பொருளாதாரத்தை மோசமான நிலையில் தள்ளியிருக்கும்." என்று கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு