விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது? எந்தெந்த கட்சிகள் புறக்கணித்தன?

விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது? எந்தெந்த கட்சிகள் புறக்கணித்தன?

பட மூலாதாரம், DIPR

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா வந்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 8) எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 57 எம்.பி.க்கள் உள்ள நிலையில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 19 எம்.பி.க்கள் மட்டுமே பங்கேற்றனர்.

திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த நிலையில், தவெகவுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதன்படி, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,

கூட்டத்திற்கு பிறகு எம்.பி.க்கள் கூறியது என்ன?

கடந்த முறை போலவே இம்முறையும் இந்த மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கும் என்று நம்புவதாக கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

முதலமைச்சர் தலைமையில் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சிதம்பரம், "தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகவே தொடர வேண்டும் என்பதன் அவசியத்தை இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினோம்," என்றார்.

"ஏற்கெனவே உள்ள எம்.பி.க்களுக்கே நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான போதுமான நேரம் கிடைக்காத சூழலில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் எந்த பயனும் இல்லை," என்றும் அவர் தெரிவித்தார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தொடர்ந்து பேசிய பிரவீன் சக்கரவர்த்தி, "தொகுதி மறுவரையறை என்பது அடுத்த 75 ஆண்டுகளுக்கான பிரச்னை. இத்தகைய முக்கியமான விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தும் நேரத்தில், காவிரி பிரச்னை குறித்து பேசவில்லை என்று கூறுவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்," என்றார்.

"நியாயமான தொகுதி மறுவரையறை என்று ஒன்றே இல்லை," என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாக்கூர் எம்.பி தெரிவித்தார்.

"தொகுதி மறுவரையறை என்பதே தமிழ்நாட்டுக்கு எதிரானது. அதில் 'நியாயமான தொகுதி மறுவரையறை' என்று ஒன்றும் இல்லை," என்றார் அவர்.

மேலும், "இவ்வாறு கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். இது தமிழ்நாட்டின் அதிகாரத்தைப் பறிக்கும் நடவடிக்கையாகும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

கனிமொழி தனது எக்ஸ் பதிவில், 'நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், "நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள உறுப்பினர் எண்ணிக்கை தொடர வேண்டும் என்ற தீர்மானம் எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது,"என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறையை கைவிட வேண்டும். தற்போதுள்ள 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை தொடர வேண்டும். மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவ எண்ணிக்கையும் அவ்வாறே நீடிக்க வேண்டும் என்ற ஒரே கருத்தின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது," என்றார்.

மேலும், "மக்கள் தொகையின் அடிப்படையிலோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தும் அடிப்படையிலோ எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கக் கூடாது என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது," என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,

எதிர்க்கட்சிகள் பங்கேற்காதது ஏன்?

முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி கனிமொழி, "நியாயமான தொகுதி மறுவரையறை" என்ற திமுகவின் முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

"தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே தொகுதி மறுவரையறை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்கள் மூலம் தெரிவித்துவிட்டோம். இந்நிலையில் முதலமைச்சர் கூட்டும் இந்தக் கூட்டத்திற்கான தேவை என்ன?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "காவிரி பிரச்னைக்காக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மேகேதாட்டுக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாமல், காவிரி பிரச்னையை திசைதிருப்பும் நோக்கில் தவெக அரசு நடத்தும் நாடகம்தான் இந்தக் கூட்டம்," என்று குறிப்பிட்ட அவர், இதில் திமுக பங்கேற்காது என்றும் தெரிவித்துள்ளார்.

திமுகவின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள காங்கிரஸ் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே இந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மேகேதாடு பிரச்னைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரி வரும் நிலையில், அதனை செயல்படுத்துவதில் முதலமைச்சருக்கு என்ன தயக்கம்?" என்று கேள்வி எழுப்பினார்.

"தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க வேண்டுமெனில், அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து ஆலோசித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்னை காவிரிதான். இதுதொடர்பாக அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு, கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு