பரந்தூர்: விமான நிலையம் அமைக்கும் இடத்தை மாற்ற தமிழக அரசு கோரவில்லையா? திட்டத்தின் நிலை என்ன?

பரந்தூர் விமான நிலைய திட்டம்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு கோரிக்கை எதையும் வைக்கவில்லை என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் இந்தப் பதிலை அளித்துள்ளார்.

அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய வில்சன், "அப்படியானால், தற்போதைய நிலையில் திட்டம் தொடர்வதாகவே பார்க்க வேண்டியுள்ளது," எனத் தெரிவித்தார்.

ஆனால், புதிய விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது தொடர்பாக தமிழ்நாட்டை ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசு விரைவில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக பரந்தூர் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்தத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தாலும், முற்றிலுமாக ரத்து செய்வது தொடர்பாக மாநில அரசு இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் பின்னணி

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முந்தைய திமுக அரசு முன்னெடுத்தது.

பரந்தூர், நாகப்பட்டு, தண்டலம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து மொத்தம் 5,746 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான அரசாணை 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

தொழில்துறை நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதாகக் கூறி, பாதிக்கப்படும் மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு ரூ.1,822.45 கோடி ஒதுக்கியது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், விமான நிலையம் அமைப்பதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை வழங்கியது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 1,700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாக வில்சன் கூறுகிறார்.

இந்தத் திட்டத்துக்கு எதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். விவசாய நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி மாதம், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மே மாத சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்த நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடருமா என்ற கேள்வி எழுந்தது.

பரந்தூர்: விமான நிலையம் அமைக்கும் இடத்தை மாற்ற தமிழக அரசு கோரவில்லையா? திட்டத்தின் நிலை என்ன?
படக்குறிப்பு, தவெக ஆட்சி அமைந்தபிறகு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்தம்

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, விமான நிலையத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக, ஏகனாபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கடந்த மாதம் பிபிசி தமிழ் மேற்கொண்ட கள ஆய்வின்போதும், விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், கிராமங்களில் நிலங்களைப் பத்திரப் பதிவு செய்வதற்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

இதனால் திருமணம், கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக நிலத்தை அடமானம் வைத்து வங்கிக் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுப்ரமணியன் தெரிவித்தார்.

"முந்தைய அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்தால் மட்டுமே எங்களால் பழைய நிலைக்குத் திரும்ப முடியும்," என ஏகனாபுரம் மக்கள் கூறுகின்றனர்.

ஆனால், திட்டத்தை ரத்து செய்வது அல்லது இடத்தை மாற்றுவது தொடர்பாக மாநில அரசு இதுவரை அதிகாரபூர்வ உத்தரவு எதையும் வெளியிடவில்லை.

பரந்தூர்: விமான நிலையம் அமைக்கும் இடத்தை மாற்ற தமிழக அரசு கோரவில்லையா? திட்டத்தின் நிலை என்ன?
படக்குறிப்பு, பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதற்கான அதிகாரபூர்வ உத்தரவு ஏதும் இதுவரை வரவில்லை.

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

திங்கள் கிழமையன்று (ஜூலை 20), பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக திமுக உறுப்பினர் வில்சன் மாநிலங்களவையில் இரண்டு கேள்விகளை எழுப்பினார்.

முதலில், திட்டத்தின் தற்போதைய நிலை, ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மொத்த மதிப்பீட்டுச் செலவு, இதுவரை செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டத்தை நிறைவு செய்வதற்கான காலக்கெடு குறித்து விளக்கம் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த இணையமைச்சர் முரளிதர் மோஹோல், "பரந்தூரில் சர்வதேச பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்கு, 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி கொள்கைரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டதாக" தெரிவித்தார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டிட்கோ சமர்ப்பித்த விண்ணப்பத்தின்படி, திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ரூ.10,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

பசுமைவெளி விமான நிலையங்கள் கொள்கை 2008-இன் கீழ், நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், நிதி திரட்டுதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுதல் ஆகியவை விமான நிலைய மேம்பாட்டாளர் அல்லது மாநில அரசின் பொறுப்பு எனவும் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துதல், அனுமதிகள் மற்றும் நிதி திரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைப் பொறுத்தே திட்டத்தை நிறைவு செய்வதற்கான காலக்கெடு அமையும் என மத்திய அரசு கூறியுள்ளது.

பரந்தூர்: விமான நிலையம் அமைக்கும் இடத்தை மாற்ற தமிழக அரசு கோரவில்லையா? திட்டத்தின் நிலை என்ன?
படக்குறிப்பு, அரசாணையை ரத்து செய்தாம் மட்டுமே தங்களால் பழைய நிலைக்குத் திரும்ப முடியும் என மக்கள் கூறுகின்றனர் (கோப்புப்படம்)

இரண்டாவது கேள்வியாக, பரந்தூருக்குப் பதிலாக வேறு இடத்தில் விமான நிலையம் அமைக்குமாறு தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதா என்று வில்சன் கேட்டார்.

இதற்கு முரளிதர் மோஹோல் "இல்லை" என்று பதிலளித்தார். மத்திய அரசின் இந்தப் பதில், திட்டம் தொடருமா அல்லது இடம் மாற்றப்படுமா என்ற விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

'அரசாணை இல்லாமல் முடிவு செய்ததாகக் கருத முடியாது' – வில்சன்

"திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக மத்திய அரசு கூறவில்லை. மாநில அரசிடம் இருந்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை," என வில்சன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"அத்தகைய அறிவிப்பு வெளியானால், சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து முடிவு செய்வோம்," என்றும் அவர் கூறினார்.

ஜூன் 18-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மாற்று இடம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறியிருந்தார்.

"ஆய்வுக்குப் பிறகு முதலமைச்சரின் ஒப்புதலுடன் அறிவிப்பு வெளியிடப்படும்," என அவர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து வில்சனிடம் கேட்டபோது, "அமைச்சரின் கருத்தை மட்டும் வைத்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. அரசின் முடிவு என்றால் அதற்கான உத்தரவு அல்லது அரசாணை இருக்க வேண்டும்," என்று கூறினார்.

முந்தைய ஆட்சியில் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

"அதிகாரிகளின் உழைப்பும் அரசின் நேரமும் இதில் செலவிடப்பட்டுள்ளன," எனக் கூறிய வில்சன், திட்டம் தொடர்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரை இரு முறை சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்புக் குழுவின் தலைவர் சுப்ரமணியன்
படக்குறிப்பு, பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்புக் குழுவின் தலைவர் சுப்ரமணியன்

விமான நிலையத்தின் தேவையை வலியுறுத்தும் வில்சன்

சென்னை ஒரு முக்கியப் பெருநகரமாகவும், வணிகம், கல்வி, மருத்துவம் மற்றும் தொழில்துறையின் மையமாகவும் இருப்பதால், சர்வதேச தரத்திலான பெரிய விமான நிலையம் தேவை என வில்சன் கூறுகிறார்.

"ஐதராபாத், பெங்களூரு, புனே, குஜராத் போன்ற இடங்களில் சிறந்த விமான நிலையக் கட்டமைப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் உயர்தர துறைமுக வசதி உள்ளது. ஆனால், அதே தரத்திலான விமான நிலையம் இல்லை," என்கிறார் அவர்.

சர்வதேச விமான சேவைகள் அதிகரித்தால், வர்த்தகமும் வேலை வாய்ப்புகளும் பெருகும் என்பது அவரது வாதம். மக்களிடம் அளித்த வாக்குறுதியை மட்டும் காரணமாகக் கொண்டு திட்டத்தைக் கைவிடக் கூடாது எனவும், பாதிக்கப்படும் மக்களுக்குக் கூடுதல் இழப்பீடு வழங்கி திட்டத்தைச் செயல்படுத்தலாம் எனவும் அவர் கூறுகிறார்.

"தமிழ்நாட்டின் நீண்டகால நலனையும் பார்க்க வேண்டும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பல தலைமுறைகளுக்குப் பயன்படும்," என்கிறார் வில்சன்.

மாநில அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்து நீதிமன்றத்தை அணுகுவது குறித்துப் பரிசீலிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள் குறித்த எதிர்ப்பு

பரந்தூர் பகுதியில் வசிக்கும் மக்களைக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சந்தித்த தவெக தலைவர் விஜய், விவசாய நிலங்கள் இல்லாத மற்றும் பாதிப்புகள் குறைவாக உள்ள இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

"வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களைப் பாதிக்கும்," என அவர் அப்போது தெரிவித்தார்.

ஜூன் 18-ஆம் தேதி பேசிய அமைச்சர் நிர்மல்குமாரும், "நீர்நிலைகளை மூடி, விளைநிலங்களை அழித்து திட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியமில்லை," எனக் கூறியிருந்தார்.

இந்தக் கருத்தை மறுத்த வில்சன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திட்டத்தைச் செயல்படுத்த முடியும் என வாதிட்டார்.

"ஒரு காலத்தில் சென்னை முழுவதும் நீர்நிலைகள் நிறைந்த பகுதியாக இருந்தது. தற்போதைய தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டமிடலின் மூலம் நீர்நிலைகளைப் பாதுகாத்தபடியே திட்டத்தை நிறைவேற்ற முடியும்," என அவர் கூறினார்.

பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்புக் குழுவின் தலைவர் சுப்ரமணியன்
படக்குறிப்பு, இத்திட்டத்தால் நீர்நிலைகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

'அரசு எங்கள் பக்கம் உள்ளது என நம்புகிறோம்'

மத்திய அரசின் பதில் குறித்து பரந்தூர் புதிய விமான நிலையத் திட்ட எதிர்ப்புக் குழுவின் தலைவர் சுப்ரமணியனிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"மத்திய அரசின் பதில் எங்களுக்கு எந்த வருத்தத்தையும் ஏற்படுத்தவில்லை. மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளை நிறுத்தியுள்ளது," என்று தெரிவித்த அவர், "மாநில அரசு விரைவில் உரிய முடிவை அறிவிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். விவசாயிகளின் பக்கம் அரசு இருப்பதாக உறுதியாக நம்புகிறோம்," எனக் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், முந்தைய அரசாணை ரத்து செய்யப்படவில்லை. இடத்தை மாற்றுமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே, பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடருமா, மாற்று இடத்துக்கு மாற்றப்படுமா அல்லது முழுமையாகக் கைவிடப்படுமா என்பது தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ முடிவுக்குப் பிறகே தெளிவாகும்.

தவெக, மாநில அரசின் நிலைப்பாடு என்ன?

மத்திய அரசின் பதில் தொடர்பாக விளக்கம் பெற அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் டிட்கோ தலைவர் கார்த்திகேயனை அலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. அதே போன்று தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவின் விளக்கத்தையும் பெற முயன்றோம். ஆனால் இந்தக் கட்டுரை வெளியாகும் வரை அவர்களுடைய கருத்தைப் பெற முடியவில்லை. அவர்களின் பதில் கிடைத்தவுடன் இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும்.

இந்த நிலையில் தவெக அரசின் நிலைப்பாடு பற்றி விளக்கமளித்த அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சத்யகுமார், "போராட்டத்தின்போது முதலமைச்சர் விஜய் என்ன சொன்னாரோ அது தான் தவெக அரசின் நிலைப்பாடு. பரந்தூர் விமான நிலையம் எந்தக் காரணம் கொண்டும் வர முடியாது என்று கூறினார். அந்த நிலைப்பாடு தற்போதும் அப்படியே தான் இருக்கிறது.

பரந்தூரில் தான் முதல் பிரசாரத்தை விஜய் தொடங்கினார். பரந்தூரில் விமான நிலையம் இருக்கக்கூடாது என்பது தான் அவரின் நிலைப்பாடு. சுற்றுச்சூழல் மற்றும் சூழலியலை பாதிக்காமல் தொழில்துறை மற்றும் உள்கட்டுமானம் வளர வேண்டும் என்பது தான் அவருடைய எண்ணம். அது இன்றும் தொடரும்." என்று தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு