மாநிலக் கட்சிகளில் முதலிடம்: திமுகவுக்கு ஓராண்டில் ரூ.365.78 கோடி நன்கொடை வந்தது எப்படி?

மாநிலக் கட்சிகளில் முதலிடம்: திமுகவுக்கு ஓராண்டில் ரூ.365.78 கோடி நன்கொடை வந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தியாவில் 2024-25ஆம் நிதியாண்டில் அதிக நன்கொடை பெற்ற மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடத்தில் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சிகள் சமர்ப்பித்த தரவுகளை ஆராய்ந்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR Association for Democratic Reforms) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள ரூ.20,000-க்கு மேற்பட்ட நன்கொடைகளின் மொத்த மதிப்பு மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. 2023-24 நிதியாண்டில் ரூ.347.693 கோடியாக இருந்த நன்கொடைகள், 2024-25 நிதியாண்டில் ரூ.1,051.556 கோடியாக உயர்ந்துள்ளன. இது மாநில கட்சிகள் பெற்ற நிதி பங்களிப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

அதேபோல், அறிவிக்கப்பட்ட நன்கொடைகளின் எண்ணிக்கை 2023-24 நிதியாண்டில் 2,861 ஆக இருந்தது. இது 2024-25 நிதியாண்டில் 5,297 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, நன்கொடைகளின் எண்ணிக்கையில் 85 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2024-25 நிதியாண்டில் முன்னணி 10 நன்கொடையாளர்கள் வழியாக மாநில கட்சிகளுக்கு ரூ.594 கோடி வழங்கப்பட்டது. 2023-24 நிதியாண்டில் ரூ.238.50 கோடி வழங்கப்பட்டிருந்தது.

2024-25 நிதியாண்டில், மாநில கட்சிகள் ரூ.20,000-க்கு மேற்பட்ட நன்கொடைகளில், திமுக 467 நன்கொடைகள் மூலம் ரூ.365.784 கோடி பெற்று முதலிடத்தில் இருந்தது. அதுவே, 2023-24 நிதியாண்டில், தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) 172 நன்கொடைகள் மூலம் ரூ.100.1889 கோடி பெற்று அதிக நன்கொடைகள் பெற்ற கட்சியாக இருந்தது.

2023-2024-ஆம் நிதியாண்டில் ரூ.3.67 கோடி நன்கொடை பெற்றதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்த அஇஅதிமுகவின் நன்கொடைகள் 2024-25-ம் ஆண்டில் ரூ.66.30 கோடியாக அதிகரித்துள்ளன.

பெயர் வெளியிடப்படாத நன்கொடையாளர்கள்

2024-25 நிதியாண்டில், நன்கொடையாளர்களின் விவரம் வெளியிடப்படாத வகையில் பெறப்பட்ட நன்கொடைகளில் திமுக முதலிடத்தில் இருந்தது. அந்த வகையில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த தரவுகள் படி திமுக ரூ.300.635 கோடி பெயர் வெளியிடப்படாத நன்கொடையாளர்கள் மூலம் பெற்றுள்ளது. இது அந்த ஆண்டில் கட்சி பெற்ற மொத்த நன்கொடைகளில் சுமார் 82.2 சதவீதமாகும்.

இதில், கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டங்கள், மற்றும் பிற கூட்டங்கள், தருணங்களில் ரூ. 74 லட்சத்து 16 ஆயிரத்து 822 வசூலிக்கப்பட்டுள்ளது. ரூ.2000க்கும் குறைவான நன்கொடை டிக்கெட்டுகள் விநியோகத்தின் மூலம் மாவட்ட நிர்வாகிகள் பெற்றது ரூ.299 கோடியே 86 லட்சத்து 2 ஆயிரத்து166 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (ஏஐடிசி), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, அதிமுக மற்றும் பிஜேடி ஆகிய கட்சிகள் பெரும்பாலும் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து கிடைத்த நன்கொடைகளையே சார்ந்திருந்தன. பிற வகை நன்கொடையாளர்களிடமிருந்து கிடைத்த தொகை மிகவும் குறைவாகவே இருந்தது.

ரொக்கமாக பெறப்பட்ட நன்கொடை

2024-25 நிதியாண்டில் திமுக பெற்ற ரூ.365.784 கோடி நன்கொடைகளில், 82.2 சதவீதமான ரூ.300.645 கோடி ரொக்கமாக பெறப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ரூ.50.16 கோடி வங்கி பரிமாற்றங்கள் மூலம் கிடைத்தன.

"இந்த ரொக்க நன்கொடைகள் அனைத்தும் ரூ.20,000-க்கு குறைவான தனித்தனி நன்கொடைகளாகக் காட்டப்பட்டுள்ளதால், தனிப்பட்ட நன்கொடையாளர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதனால், இந்தத் தொகை உண்மையில் பல சிறிய நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டதா, அல்லது ஒரே நபர் பலமுறை ரூ.20,000-க்கும் குறைவாக நன்கொடை வழங்கியிருக்கிறாரா என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை." என்று ADR அறிக்கை கூறுகிறது.

திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் கூறுகையில், "இது புதிதல்ல. திமுக அதிக நன்கொடைகள் பெற்ற கட்சிகளில் ஒன்றாக ஒவ்வோர் ஆண்டும் இருந்து வருகிறது. இதில் தவறு ஏதும் இல்லையே. திமுக மக்களிடமிருந்தும் அதன் உறுப்பினர்களிடமிருந்தும் நன்கொடை பெறுகிறது. அதை வெளிப்படையாக தெரிவித்துள்ளோம்." என்கிறார்.

மாநிலக் கட்சிகள் நன்கொடை

பட மூலாதாரம், Saravanan Annadurai

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அதிமுகவின் நன்கொடைகள் 2023-24 நிதியாண்டில் ரூ.3.67 கோடியாக இருந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் ரூ.66.307 கோடியாக உயர்ந்துள்ளன. இதில் 92 சதவீதத்துக்கும் அதிகமான தொகை வங்கி பரிமாற்றங்கள் மூலமாக பெறப்பட்டுள்ளது.

2024-25ம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனத்திடமிருந்து 65 கோடியே 75 ஆயிரம் பெற்றதாகவும், ஒரு கோடியே 32 ஆயிரம் தனிநபரிடமிருந்து பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.20 லட்சம் பெயர் தெரிவிக்கப்படாத நன்கொடையாளரிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி 2023-24ம் ஆண்டில் ரூ. 2.17 கோடி நன்கொடையாகப் பெற்றதாகவும், 2024-25ம் ஆண்டில் ரூ. 2.87 கோடி பெற்றதாகவும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. இதில் பெயர் வெளியிடப்படாத நன்கொடையாளரிடமிருந்து 1.54 கோடியும் தனி நபரிடமிருந்து 1.32 கோடியும் பெற்றதாக தெரிவித்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தரவுகள் தேர்தல் ஆணைய இணையத்தில் காணப்படவில்லை.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பொதுவாக அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடைகள் குறித்து வெளிப்படையாக கணக்கு காட்ட வேண்டும். யார் நன்கொடை கொடுத்தார்கள் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். பெயர் தெரிவிக்கப்படாத நபர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடையை அரசு கருவூலத்துக்கு வழங்கிட வேண்டும். இதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

மாநிலக் கட்சிகள் நன்கொடை

பட மூலாதாரம், டி.ஜெயக்குமார்

திமுக சரவணன் கூறுகையில், "நன்கொடையாளர் பெயர் தெரிவிக்காமல் இருக்க, பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தாங்கள் ஒரு கட்சிக்கு நிதி அளித்திருக்கிறோம் என்று தெரிந்தால், வேறு கட்சிகளின் காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாக வேண்டும் என்று நினைத்து பெயரை வெளியிட தயங்கலாம்." என்றார்.

தேமுதிக 2023-34ம் ஆண்டில் எந்த நன்கொடையும் பெறவில்லை என்றும், 2024-25ம் ஆண்டில் ஒரு நன்கொடை மூலம் ரூ.50 லட்சம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு