You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் "நம்ம ஸ்கூல்" திட்டம் எந்த அளவுக்குப் பலனளிக்கும்?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
அரசு பள்ளிக்கூடங்களின் கட்டமைப்பை மேம்படுத்த அனைவரும் பங்களிப்புச் செலுத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு துவங்கியிருக்கிறது. இந்தத் திட்டம் எந்த அளவுக்குப் பலனளிக்கும்?
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிக்கூடங்களில் தேவையான கட்டமைப்பை உருவாக்க தனியார் நிறுவனங்களும் தனி நபர்களும் நன்கொடைகளை வழங்கும் வகையில் புதிய திட்டத்தை உருவாக்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்தத் திட்டத்தின்படி, 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷனுக்கு என இணைய தளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளி குறித்தும் இணையதளத்திலேயே மெய்நிகர் சிற்றுலாவில் காணமுடியும், ’நிதியுதவிக்கு முன்னும்’, நிதியுதவிக்குப் பின்னும்’ என தகவல்களை புகைப்படங்களோடு பெறவும் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்தவும் இந்த இணையதளத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியையும் உடன்பயின்ற நண்பர்களையும் தங்களுக்குக் கற்றுத் தந்த ஆசிரியர்களை தொடர்புகொள்ளவும் இத்திட்டம் உதவும்.
இத்திட்டத்திற்கு வழங்கப்படும் நிதியுதவிகள் அனைத்தும் இணையவழியில் எளிதாக வழங்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கொடையாளர்கள் தாங்கள் இருக்குமிடத்தில் இருந்தபடியே அளித்த நிதி எந்தப் பள்ளியில் எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்ற தகவல்களை அறியும்வண்ணமும் பயனீட்டுச் சான்றிதழை இணையவழியாகவே பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இணையதளத்தில் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 37,000 பள்ளிக்கூடங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிக்கூடங்களில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளிக்கூடத்திற்கு நிதியுதவி செய்ய விரும்பினால், அந்தப் பள்ளிக்கூடத்தைத் தேர்வுசெய்து நிதியுதவி அளிக்கலாம்.
அதேபோல, தனியார் நிறுவனங்களும் தங்களுடைய CSR நிதி எனப்படும் 'கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு' நிதியை பள்ளிக்கூடத் திட்டங்களுக்கு அளிக்கலாம்.
ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் எம்மாதிரியான தேவை இருக்கிறது என்பது அந்தந்தப் பள்ளிக்கூடங்களின் இணையப் பக்கத்திலேயே பதவிடப்பட்டிருக்கிறது. அந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுத்து, தேவைப்படும் திட்டங்களைத் தத்தெடுக்கலாம் அல்லது பகுதியளவு நிதியையும் அளிக்கலாம்.
இந்தத் திட்டத்திற்கென உருவாக்கப்பட்டிருக்கும் நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷனின் தலைவராக தொழிலதிபர் வேணு ஸ்ரீநிவாஸனும் நல்லெண்ணத் தூதுவராக சதுரங்க உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டம் காமராஜர் காலத்திலேயே செயல்படுத்தப்பட்ட ஒரு திட்டத்தின் மேம்பட்ட வடிவம்தான் என்கிறார் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் இருந்த திட்டம்
1954லிருந்து 1963வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜர், பள்ளிக்கல்வியை மேம்படுத்துவதில் பெரும் கவனம் செலுத்தினார். ஆனால், அந்த காலகட்டத்தில் மாநிலத்தின் நிதி வருவாய் போதுமானதாக இல்லை. ஆகவே பள்ளிக்கூடங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்த பொதுமக்களின் பங்கேற்பை வரவேற்கத் திட்டமிடப்பட்டது.
அதன்படி 1958ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அப்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 76 பள்ளிக்கூடங்களில் அரசு ஆய்வு நடத்தி, அங்கிருந்த குறைகளைக் கண்டறிந்தது. இதற்குப் பிறகு, அதனைச் சுற்றியிருந்த கிராமங்களில் வாழ்ந்த மக்களை ஒன்று திரட்டி ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.
அந்த கூட்டத்தில் பள்ளிக்கூடங்களின் கட்டுமானக் குறைபாடுகள் பற்றிக் கூறப்பட்டது. இந்த விஷயத்தில் அரசுக்கு அவர்கள் எப்படி உதவ முடியுமென அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு பள்ளிச் சீரமைப்பு இயக்கம் எனப் பெயரிடப்பட்டது.
இந்தத் திட்டம் துவங்கப்பட்ட பிறகு, தங்கள் ஊரைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு அந்தந்த ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பள்ளிக்கூடம் கட்டுவதற்கு நிலமாகவும் வகுப்பறைப் பொருட்களாகவும் மேசை நாற்காலிகளாகவும் ஆடைகள், எழுது பொருட்கள், நூலகத்திற்கு பயன்படும் புத்தகங்கள் என உதவினார்கள்.
1958ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடம்பத்தூர் கிராமத்தில் இந்தத் திட்டம் முதன் முதலில் செயல்படுத்தப்பட்டது. 1958ல் துவங்கி, 1963ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு முழுவதும் 160 பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் 24,565 பள்ளிக்கூடங்கள் பயனடைந்தன. ஆறரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திரட்டப்பட்டன. பள்ளிக் கட்டடங்களாகவும் தளவாடப் பொருட்களாகவும் பத்தொன்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பெறப்பட்டன.
இது மத்திய அரசின் கவனத்தைக் கவர்ந்ததால், இந்தத் திட்டத்தை பிற மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டுமென அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு பரிந்துரைத்ததாக ஆ. கோபண்ணா எழுதிய 'காமராஜ் ஒரு சகாப்தம்' புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"காமராஜர் காலத்திற்குப் பிறகும் பெற்றோர் - ஆசிரியர் சங்கம் போன்றவற்றின் மூலம் இது போல பள்ளிக்குத் தேவையானவற்றை தனியார் பங்களிப்பின் மூலம் பெரும் திட்டம் இருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது.
அதாவது, ஒரு மாநிலமோ, நாடோ வளரும்போது அந்த வளர்ச்சியின் லாபம் அல்லது பயன் எல்லாப் பிரிவிற்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால், கல்வித் துறைக்கு போதுமான அளவுக்கு அளிக்கப்படுகிறதா என்ற கேள்வி இருக்கிறது. 1966ல் கோத்தாரி ஆணையம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீத்தை கல்விக்கு ஒதுக்க வேண்டுமென்றது.
இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் அதை நம்மால் செய்ய முடியவில்லை. சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், அரசுப் பள்ளி மாணவர்களின் தேவைக்கு தனியாரைச் சார்ந்திருக்கக்கூடாது" என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
ஆனால், இது நல்ல திட்டம்தான் என்கிறார் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி. பேட்ரிக் ரெய்மாண்ட். "இது ஏற்கனவே இருக்கும் திட்டம்தான். எல்லா அரசுப் பள்ளிகளிலும் தனிநபர்கள் நிதியுதவி அளிப்பதன் மூலம் புரவலர்களாக இணைந்துகொள்ளலாம். பேராசிரியர் க. அன்பழகன் கல்வி அமைச்சராக இருந்தபோது இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு முக்கியமான காரணம், தனியார் பள்ளிகளில் இருப்பதைப்போல, அரசுப் பள்ளிகளில் பழைய மாணவர் சங்கங்கள் பெரிய அளவில் கிடையாது.
ஆகவே பழைய மாணவர்களைத் தொடர்புகொண்டு, தேவையானவற்றைப் பெற முடியாது. இப்போது அரசு இதற்கென ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருப்பது நல்ல விஷயம். தொலைதூரத்தில், உள்ளடங்கியுள்ள பள்ளிகளும் இதில் பயனடையும். அந்த விதத்தில் இது நல்ல திட்டம்தான்" என்கிறார் பேட்ரிக் ரெய்மாண்ட்.
இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 2020, பள்ளிக் கல்வித் துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது. அரசு செலவழிக்கும் தொகைபோக, "எந்த ஒரு பொதுக் கல்வி நிறுவனமும் கல்வி அனுபவத்தை மேம்படுத்த தனியாரிடமிருந்து நிதியைப் பெற முயற்சிக்கலாம்" (26.6) என்கிறது.
"அதைத்தானே மாநில அரசும் செய்கிறது. எவ்வளவோ விஷயங்களுக்குச் செலவுசெய்யும் அரசு, கல்வி நிலையங்களை மேம்படுத்த செலவுசெய்தால் என்ன? ஒரு அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு, நாம் தனியார் தானமாக அளித்துள்ள வசதியில் படிக்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடக்கூடாது" என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்