You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெனிசுவேலாவை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? டிரம்ப் பதிவால் பதற்றம்
- எழுதியவர், ஈஃபா வால்ஷ்
- பதவி, வாஷிங்டன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
வெனிசுவேலா வான்வெளி மூடப்பட்டிருப்பதாகக் கருதப்பட வேண்டும் என்பதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 'காலனித்துவ அச்சுறுத்தல்' விடுப்பதாக வெனிசுவேலா குற்றம்சாட்டியுள்ளது.
அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சகம், டிரம்பின் கருத்துகளை வெனிசுவேலா மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற தாக்குதல் என்று கூறியுள்ளது.
போக்குவரத்துத் துறையில் நிச்சயமற்ற சூழல் உருவாகவும், விமான நிறுவனங்கள் அங்கு விமானங்களை இயக்காமல் தவிர்க்கவும் டிரம்பின் இணையதள பதிவு, காரணமாக அமையக்கூடும்.
கரீபியன் தீவுகளில் தனது ராணுவ இருப்பை அமெரிக்கா அதிகரித்து வருகிறது. இது போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் முயற்சி என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவின் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள், 'தன்னைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான முயற்சி' என்று கூறி நிராகரித்துள்ளார்.
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தள பதிவில், "விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், மனித கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஆகிய அனைவரும், வெனிசுவேலாவின் வான்வெளியும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் முழுவதும் மூடப்பட்டிருப்பதாகக் கருதவும்" என்று பதிவிட்டிருந்தார்.
இதுபற்றி கருத்து கேட்க பிபிசி தொடர்புகொண்டபோது, வெள்ளை மாளிகை உடனடியாக பதிலளிக்கவில்லை.
"வெனிசுவேலாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக"அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) விமான நிறுவனங்களை எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு டிரம்பின் இந்த கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.
"இந்த ஒழுக்கமற்ற தாக்குதல் செயலை உறுதியாக நிராகரிக்க சர்வதேச சமூகத்தையும், உலகின் சுயாட்சி அரசுகளையும், ஐநாவையும், இது தொடர்புடைய பல்தரப்பு அமைப்புகளையும் நேரடியாக அழைக்கிறோம்" என்று சனிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் வெனிசுவேலாவின் வெளிநாட்டு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கிறது.
முன்னதாக, 48 மணி நேர காலக்கெடுவுக்கு விமான சேவையை மீண்டும் தொடங்க தவறியதால், ஐபீரியா, டிஏபி போர்ச்சுகல், கோல், லாடம், ஏவியன்கா மற்றும் டர்கிஷ் ஏர்லைன்ஸ் ஆகிய ஆறு முக்கிய சர்வதேச விமான நிறுவனங்களின் விமானங்கள் தரையிறங்க வெனிசுவேலா புதன்கிழமை தடை விதித்தது.
உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்ட் கப்பலையும் சுமார் 15,000 படையினரையும் வெனிசுவேலாவுக்கு அருகில் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
1989-ல் பனாமாவை ஆக்கிரமித்த பிறகு இந்தப் பகுதிக்கு இவ்வளவு பெரிய படையை அனுப்புவதற்கான காரணம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகப் போராடுவதே என்று அமெரிக்கா கூறியுள்ளது.
வெனிசுவேலாவில் தரைவழி போதைப்பொருள் கடத்தலை தடுத்து நிறுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் மிக விரைவில் தொடங்கும் என்று டிரம்ப் வியாழனன்று எச்சரித்தார்.
அமெரிக்கப் படைகள் போதைப்பொருளை ஏற்றிச் சென்றதாகக் கூறி படகுகள் மீது குறைந்தது 21 தாக்குதல்களை நடத்தி எண்பதுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளன. எனினும், அந்த படகுகள் போதைப்பொருள் கொண்டு சென்றதற்கான ஆதாரங்களை அமெரிக்கா இதுவரை வழங்கவில்லை.
வெனிசுவேலா அரசாங்கம், இந்த அமெரிக்க நடவடிக்கையின் நோக்கம் மதுரோவை பதவி நீக்கம் செய்வதே என்று நம்புகிறது. கடந்த ஆண்டு அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை வெனிசுவேலா எதிர்க்கட்சியும் பல வெளிநாடுகளும் மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டின.
மதுரோ தலைமையில் இயங்குவதாக அமெரிக்கா குற்றம்சாட்டும் கார்டெல் டி லாஸ் சோல்ஸ் அல்லது கார்டெல் ஆஃப் தி சன்ஸ் என்ற குழுவை, ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஒரு அமைப்புக்கு பயங்கரவாதக் குழு என்று முத்திரை குத்துவது, அமெரிக்க சட்ட அமலாக்க மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அதை குறிவைத்து அகற்றுவதற்கான அதிகாரங்களை வழங்குகிறது.
வெனிசுலாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு